நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த மாத தொடக்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். இவ்வழக்கில் கே.பி.கொசாவி, பனுசாலி, பிரபாகர் ஆகியோர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு ஆர்யன் கானை விடுவிக்கப் பணப் பேரத்தில் ஈடுபட்டதாக கொசாவியின் பாதுகாவலர் பிரபாகர் கோர்ட்டில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ஷாருக் கான் மேனேஜர், கொசாவி இடையே இடைத்தரகராகச் செயல்பட்ட சாம் டிசோசாவுடன் கொசாவி போனில் பேசியபோது ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி வரை பேரம் பேசியதாகவும், இதில் 8 கோடியை சமீர் வான்கடேவுக்குக் கொடுக்கவேண்டியிருப்பதாக கொசாவி போனில் பேசியதாக பிரபாகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். கொசாவி போனில் பேசும்போது தானும் அருகில் இருந்ததாகவும் அவர் பேசியதை, தான் கேட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
Also Read: மகன் ஆர்யன் கான் பாதுகாப்புக்காக ஷாருக் கான் - கௌரி கான் எடுத்த முடிவு!
கொசாவி போனில் பேசும்போது ஷாருக் கானின் மேனேஜர் பூஜாவும் உடன் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதோடு கொசாவி தென் மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று பணத்தை வாங்கிக்கொண்டு வரும்படி தன்னிடம் தெரிவித்ததாகவும், தானும் இரண்டு பேக்களில் கொடுக்கப்பட்ட பணத்தை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன் என்று பிரபாகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகார் குறித்து சாம் டிசோசா தற்போது கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், ``ஷாருக் கானின் மேனேஜர் பூஜா கொசாவியிடம் ரூ.50 லட்சம் கொடுத்தார். ஆனால் ஆர்யனை விடுவிக்க முடியாது என்று தெரிந்தவுடன் அந்தப் பணத்தைத் திரும்ப கொடுத்துவிடும்படி கொசாவிடம் கேட்டுக்கொண்டேன். அதோடு கொசாவி மோசடிப் பேர்வழி என்றும் தெரிந்துகொண்டேன். மிகவும் நிர்பந்தம் செய்து கொசாவிடமிருந்து அந்தப் பணத்தைத் திரும்ப வாங்கி ஷாருக் கான் மேனேஜரிடம் கொடுத்தோம்" என்று தெரிவித்தார்.
டிசோசாதான் பூஜாவும் கொசாவியும் சந்திக்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் கைதுசெய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் டிசோசா முன்ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இதற்கிடையே நவாப் மாலிக் தன்னைப் பற்றி வதந்திகளைப் பரப்பிவருவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே குற்றம்சாட்டியிருக்கிறார். சமீர் வான்கடே 70 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை அணிவதாகவும், ஒரு லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை அணிவதாகவும் நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார். அதோடு சமீர் வான்கடே சாதியை மாற்றி இட ஒதுக்கீடு பெற்று வேலை வாய்ப்பு பெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தன்னைப் பற்றி நவாப் மாலிக் வதந்தியைப் பரப்பிவருவதாக சமீர் வான்கடே குற்றம்சாட்டியிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/crime/we-have-returned-the-rs-50-lakh-we-bought-from-shah-rukh-khan-manager-pooja-to-release-aryan-khan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக