திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த தாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ். இவர் மகன் ராசுக்குட்டி (25). ராசுக்குட்டி அதே பகுதியைச் சேர்ந்த தன் உறவினர் பெண்ணான கீர்த்தனா என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். ஆனால், ராசுக்குட்டிக்கு, கீர்த்தனா தங்கை முறை என்பதால் இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில், ராசுக்குட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் உறவினர்களின் எதிர்ப்பை மீறி கீர்த்தனாவைத் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் வெளியூரில் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரே வாரத்தில் கீர்த்தனாவின் பெற்றோர் அவரை வலுக்கட்டாயமாக ராசுக்குட்டியிடம் இருந்து பிரித்து அழைத்துச்சென்றதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து ராசுக்குட்டி தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு கீர்த்தனா பெற்றோர் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், ராசுக்குட்டி கடந்த மாதம் 27-ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். அடுத்தநாள் காலை வழக்கம் போல் பணிக்குச் சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரின் நண்பர்கள் திருத்தணி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அவர்களின் புகாரைப் பெற்றுக்கொண்ட திருத்தணி போலீஸார் ராசுக்குட்டியை தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பெரியபாளையத்தை அருகே செங்கல் சூளை குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக பெரியபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருத்தணியில் காணாமல் போன ராசுக்குட்டி சிலரால் கடத்தி கொலைசெய்யப்பட்டு, செங்கல் சூளை குளத்தில் வீசப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, ராசுக்குட்டி காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை, போலீஸார் மாற்றி கொலை வழக்காக பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் ராசுக்குட்டின் மனைவி கீர்த்தனா குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: திருத்தணி: குடிபோதையில் தகராறு! - சிறையிலிருந்து திரும்பிய ரெளடி, மனைவியின் தம்பியைக் கொன்ற கொடூரம்
ராசுக்குட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து, நேற்றைய தினம் அவரின் உறவினர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்து வேண்டும் என்று திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்திய போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். உறவுமுறை மீறி திருமணம் செய்து கொண்ட இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/youth-murdered-in-tiruttani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக