அகில உலகுக்கும் அன்னையாய் விளங்குபவள் அம்பிகை. ஒவ்வொரு பெண்ணுக்கும் தாயாக விளங்கும் அன்னை சக்தி, அவர்களின் கருவுக்கும் கருவறைக்கும் சக்தி அளிக்கும் தயாபரியாகவும் விளங்குகிறாள். ஒரு பெண் பூப்படையும் காலம்தொட்டு மாதவிடாய் நிற்கும் வரை ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்தித்து வருகிறாள். அந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் மகா சக்தியாக, மந்திர மனோன்மணியாக விளங்குபவள் திருச்சி பேட்டவாய்த்தலை ஸ்ரீபாலாம்பிகை.
800 ஆண்டுகளாக பெண்களின் குறை தீர்க்கும் ஒரே தலமாக விளங்கிவரும் இந்த கோயில் ஸ்ரீமத்யார்ஜூனேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. வடக்கே ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனம், தெற்கே திருநெல்வேலியில் திருப்புடார்ஜுனம் என அமைந்திருக்க மத்தியில் இது மத்யார்ஜூனமாக விளங்குகிறது.
மூன்றாம் குலோத்துங்கன் திருவிடைமருதூர் ஈசனின் மீது பெரும் பக்தி கொண்டவன். பல போர்களின் விளைவாக தமக்கு ஏற்பட்டிருந்த பிரம்ம ஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்துகொள்ள மருதூர் மகாலிங்கப் பெருமானை வேண்டினான் மன்னன். அப்போது அவன் கனவில் தோன்றிய ஈசன், 'காவிரியில் ஒரு உபநதியை உருவாக்கி, அதன் கரையில் ஒரு சிவாலயத்தை எழுப்பி என்னை வழிபட்டால் பிரம்ம ஹத்தியை நீக்குவேன்' என சிவம் உறுதி சொன்னது.
அதன்படி உய்யக்கொண்டான் வாய்க்காலை உருவாக்கி ஆலயத்தையும் மன்னன் எழுப்ப, தோஷமும் நீங்கி அவனுக்கு மழலைப் பேறும் கிட்டியது என தலவரலாறு கூறுகிறது. திருவிடைமருதூர் ஈசனைப் போற்றும் விதமாக இங்கும் ஈசன் மத்யார்ஜூனேஸ்வரர் என்றும் மார்த்தாண்டேஸ்வரர் என்றும் வணங்கப்படுகிறார். 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் 1205 - 1206 ஆண்டு கல் கல்வெட்டு காணப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் கட்டிய 64 சிவாலயங்களில் இதுவும் ஒன்று எனப்படுகிறது. 1685-ம் ஆண்டு ராணி மங்கம்மா காலத்துக் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.
சுயம்பு வடிவான மூலவர் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். மன்னனின் பிரம்ம ஹத்தி தோஷத்தை நீக்கிய இறைவன், தற்போது இங்கு வரும் பக்தர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் மகாதேவராகவும் விளங்கி வருகிறார். அம்மன் சந்நிதி மண்டபத் தூணில் பிரம்ம ஹத்தியின் வடிவம் ஒன்றும் உள்ளது.
இங்கு இறைவி பாலாம்பிகை என்ற திருநாமத்தோடு தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். முன்பு ஒரு சமயம் இங்கு வாழ்ந்த அத்தனை பெண்களுக்கும் மாதவிடாய் சம்பந்தமான குறைபாடு உண்டாகி அவதிப்பட்டு வந்தார்களாம். அப்போது இங்கு வசித்த பொற்றாளப் பூவாய் சித்தர் என்பவர் அவர்களுக்கு மருத்துவம் பார்த்து இருக்கிறார். எத்தனையோ சிகிச்சை செய்தும் அவர்கள் குறை தீராததால், பாலாம்பிகையிடம் மனம் உருகி வேண்ட, அம்பிகையும் பிரதட்சயமாக அவருக்குத் தோன்றி மூலிகைகளையும் சிகிச்சை முறைகளையும் சொல்லி வாழ்த்தினாளாம். மேலும் 'தம்மை சரண் அடையும் பெண்களை கருப்பை சம்பந்தமான அத்தனை துன்பங்களில் இருந்தும் காப்பேன்' என்று உறுதியும் அளித்தாளாம்.
அதன்படி இன்றும் இங்கே இறைவனோடு கலந்துவிட்ட சித்தர் பெருமானின் திருவுருவம் உள்ள தூணில் மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பைக் கோளாறுகளை எழுதி கட்டுகின்றனர். ஈசனையும், இறைவியையும், சித்தரையும் பிரார்த்தனை செய்து பூரண நலம் பெறுகின்றனர். பெண்களுக்கு என்றே சிறப்பான இந்தக் கோயிலில் இன்றும் பாலாம்பிகை பெண்களின் சிறப்பு மருத்துவச்சியாக வீற்றிருக்கிறாள் என்று சிலிர்ப்போடு தெரிவிக்கிறார்கள் திருச்சி மக்கள். குழந்தைப்பேறு அளிக்கும் வரப்பிரசாதியாக இங்கு அம்மையும் அப்பனும் விளங்கி வருகிறார்கள் என்பதும் இவர்கள் நம்பிக்கை.
ஆறிலிருந்து வெட்டப்படும் கால்வாயின் முதல் இடம் வாய்த்தலை எனப்படும். இதுவே வாய்த்தலை பேட்டை என்றாகி, மருவி பேட்டவாய்த்தலை என்றானதாகத் தெரிகிறது. காவிரி ஒரு பக்கம், அய்யன் வாய்க்கால் எனப்படும் உய்யக்கொண்டான் வாய்க்கால் ஒரு பக்கம் என ஓடுவதால் இது தீவு கோயில் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. ஐந்து நிலை ராஜகோபுரம் தாண்டி கோயிலுக்குள்ளே சென்றால் ஏகப்பட்ட சந்நிதிகள். விநாயகர், சூரிய-சந்திரர், வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர், கஜ லட்சுமி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பைரவர், துர்கை, பிட்சாடனார், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், ஆறு அடி உயர மகாவிஷ்ணு என அற்புத தரிசனங்கள் பல உள்ளன.
Also Read: செவ்வாய் பிரதோஷ பைரவ வழிபாடு: 27 நட்சத்திரக்காரர்களுமான பைரவர்கள் யார், யார்? சிறப்புகள் என்னென்ன?
சண்டிகேசுவரர் மழு ஆயுதம் தாங்கி அமர்ந்த நிலையில் உள்ளார். தல விருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது.
பிரார்த்தனைச் சிறப்புகள்:
இங்கு வந்து ஈசனை வேண்டினால் சகல விதமான தோஷங்களும் நீங்கும். குறிப்பாக பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கும் என்கிறார்கள். மண்டபத் தூணில் உள்ள பிரம்ம ஹத்தி வடிவத்தை அமாவாசை நாளில், மாலையில் மலர்கள் சார்த்தி, தீப தூபங்கள் காட்டி வழிபட்டால் நலம் கிடைக்கும் என்கிறார்கள்.
அதேபோல் கருப்பை நோய்கள், மாதவிடாய் சிக்கல், கரு தாங்காமல் இருப்போர் யாவரும் இங்கு வந்து பொற்றாளப் பூவாய் சித்தரை வழிபட்டு கோயிலில் விற்கப்படும் பிரார்த்தனைச் சீட்டில் குறைகளை எழுதி சித்தர் உறையும் தூணில் கட்டி வழிபடுகிறார்கள். இதனால் பிரச்னைகள் நீங்கி நலம் பெறுகிறார்கள்.
மனதில் கலக்கமும் கருப்பையில் பிரச்னையும் கொண்டோருக்கு திருச்சி பேட்டவாய்த்தலை மத்தியார்ஜுனேஸ்வரரும் அன்னை பாலாம்பிகையும் அபயம் அளித்து காத்து வருகிறார்கள். தேவை இருப்போர் மட்டுமல்ல, அப்பனையும் அம்மையையும் தரிசிக்க விரும்புவோரும் ஏகாந்தமாக தரிசிக்க ஏற்ற தலம் இது என்கிறார்கள் திருச்சி மக்கள்.
அமைவிடம்:
திருச்சி - கரூர் வழியில், திருச்சியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது பேட்டவாய்த்தலை பேருந்து நிறுத்தம். இங்கு இருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது ஆலயம். திருச்சி - ஈரோடு ரயில் வழியில் பேட்டவாய்த்தலை ரயில் நிறுத்தத்தில் இறங்கியும் செல்லலாம். காலை 6.45 மணி - 12.30 வரையும், மாலை 4 மணி - 8 மணி வரையும் கோயில் நடை திறந்து இருக்கும்.
source https://www.vikatan.com/spiritual/temples/trichy-temple-19-know-about-the-glory-of-pettavaithalai-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக