மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் பலரும் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்திவருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்குமிடையே இதுவரை 11 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. ஆனால், அது அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. `மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம்' என்று அறிவித்த விவசாயிகள், 11 மாதங்களுக்கு மேலாகப் போராடிவருகின்றனர்.
Also Read: டிரெண்டான #RealFarmersVsActorModi - டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
தடுப்புகளை ஏற்படுத்திய காவல்துறை?
இதற்கிடையில், ``போராட்டக்காரர்கள் முக்கியச் சாலைகளை முற்றுகையிட்டுப் போராடிவருகிறார்கள். இதனால் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. போராட்டக்காரர்களைச் சாலையிலிருந்து அகற்ற உத்தரவிட வேண்டும்'' என்று நொய்டாவைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து விவசாய சங்கங்கள் பலவும், ``நாங்கள் மக்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. டெல்லி போலீஸார், சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தியிருப்பதுதான் மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸாரை வைத்துத் தடுப்பு ஏற்படுத்திவிட்டு, தங்கள் ஆள்களை வைத்தே உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது பா.ஜ.க. இது முழுக்க முழுக்க ஆளுங்கட்சியின் சூழ்ச்சி'' எனக் குற்றம்சாட்டின.
இதையடுத்து இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``விவசாயிகளுக்குப் போராடுவதற்கு முழு உரிமை உண்டு. ஆனால், காலவரையின்றி சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போராட்டம் நடத்த முடியாது'' என்று கடந்த அக்டோபர் 21-ம் தேதியன்று தெரிவித்தது. ``சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி இடையூறு செய்வது விவசாயிகள் அல்ல; போலீஸார்தான்'' என்று பாரதிய கிசான் யூனியன் உச்ச நீதிமன்றத்துக்குப் பதிலளித்தது. இதையடுத்து சாலைப் போக்குவரத்தைச் சீர் செய்யுமாறு டெல்லிப் போலீஸாருக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். விவசாயிகளும் சாலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என்றும் அறிவுரை வழங்கியது.
தடுப்புகள் அகற்றம்!
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றியது டெல்லி போலீஸ். இது குறித்து, ``விவசாயிகள், சாலைகளை மறித்துப் போராட்டம் நடத்துவதாகப் பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவந்தது. தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுத்துவந்தோம். விவசாயிகள் சாலையின் ஓரமாகக் கூடித்தான் போராட்டம் நடத்துகிறார்கள். சிங்கு எல்லையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்றுவந்ததால் சாலைகள் மூடப்பட்டிருந்தன. காஜீப்பூர், திக்ரி எல்லைகளில் காவல்துறையினரே தடுப்புகளை வைத்து சாலைகளை மூடினர். இப்போது அனைத்து எல்லைகளிலும் இருந்த தடுப்புகளை காவல்துறையினரே அகற்றி வருகின்றனர். இதன் மூலம் தடுப்புகளை ஏற்படுத்தியது விவசாயிகள் அல்ல; காவல்துறையினர்தான் என்பது உறுதியாகியிருக்கிறது'' என்றிருக்கிறது சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு.
சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சுதீஷ் கோயத், ``போக்குவரத்து தடைபடக் காரணமாக இருந்தது டெல்லி போலீஸார்தான். கடந்த பிப்ரவரி மாதத்தில் திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது, அந்த வழியே வந்த ஆம்புலன்ஸுக்கு விவசாயிகள் வழிவிட்டார்கள். ஆனால், போலீஸார் ஏற்படுத்தி வைத்திருந்த தடுப்புகளால், அந்த வாகனம் தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பிவர நேர்ந்தது'' என்றிருக்கிறார்.
நவம்பர் 26-க்குப் பின்னர்..?
எல்லைகளில் தடுப்பு அகற்றப்பட்ட பின்னர், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், ``மத்திய அரசு, எல்லைகளிலிருந்து விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால், நாடு முழுவதுமிருக்கும் அரசு அலுவலகங்கள் சந்தைகளாக மாறும்'' என்று ஞாயிற்றுக்கிழமை (அக். 31) அன்று ட்விட்டரில் பதிவிட்டார்.
இதையடுத்து நேற்று (நவ. 1) தனது ட்விட்டர் பக்கத்தில், ``மத்திய அரசுக்கு, வரும் நவம்பர் 26-ம் தேதி வரைதான் அவகாசம் இருக்கிறது. நவம்பர் 27-ம் தேதியிலிருந்து, மீண்டும் அதிக அளவிலான விவசாயிகள் தங்கள் கிராமங்களிலிருந்து டிராக்டர்கள் மூலம் டெல்லி எல்லைகளை அடைவார்கள். போராட்டக் களத்தை மேலும் பலப்படுத்துவார்கள்'' என்று எச்சரித்திருக்கிறார் ராகேஷ் டிக்கைட்.
Also Read: ரிஹானா ட்வீட், பதறி விளக்கம் கொடுத்த வெளியுறவுத்துறை... உலக கவனம் பெறும் விவசாயிகள் போராட்டம்!
``வரும் நவம்பர் 26-ம் தேதியோடு டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. அதன் காரணமாகத்தான் `நவம்பர் 26-ம் தேதி வரைதான் மத்திய அரசுக்கு அவகாசம்' என்று பேசியிருக்கிறார் ராகேஷ் டிக்கைட். அதற்குள்ளாக மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், மிகப் பெரிய போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் விவசாயிகள். இப்போதைய நிலவரப்படி டெல்லியின் மூன்று எல்லைகளிலும் சில ஆயிரக்கணக்கில் மட்டுமே விவசாயிகள் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், மீண்டும் கடந்த ஆண்டுபோலப் பல்லாயிரக் கணக்கானோர் ஒன்றுகூடி போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. அப்படி பல்லாயிரக் கணக்கானோர் இந்தியத் தலைநகரில் ஒன்று கூடினால், மீண்டும் விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெறும். அதன் மூலம் மத்திய அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடி கொடுக்கலாம் என்ற முடிவிலிருக்கிறார்கள் விவசாயிகள்'' என்று கூறுகிறார்கள் விவசாயிகள் போராட்டத்தை உற்று நோக்குபவர்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/article-about-delhi-farmers-protest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக