``மெட்ராஸ் ஸ்டேட்டிலிருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்" என 2019-ல் அதிமுக அரசு அறிவித்தது. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019-ம் ஆண்டு முதல், நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் நவம்பர் 1-ம் தேதி எல்லை போராட்டத்தினை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிரத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆட்சி மாறியபின், தற்போது ஜூலை 18-ம் தேதியைத் தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு நாள் பற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாகியிருக்கிறது. அதுகுறித்த ஒரு பார்வை...
Also Read: தமிழ்நாடு நாள்: `நவம்பர் 1-ம் தேதியா... ஜூலை 18-ம் தேதியா?!'- விகடன் #உங்கள் கருத்து முடிவு என்ன?
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட வரலாறு!
1938-ல் சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில், மறைமலையடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார் ஆகியோர், ``தமிழ்நாடு தமிழருக்கே!'' என்ற முழக்கத்தை எழுப்பினர். அதே காலகட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. 'தமிழ் மாநிலம்' வேண்டும் என்று மாநாடுகள் நடத்தி வலியுறுத்தி வந்தார். 1948 ஜூன் மாதம் எஸ்.கே.தார் தலைமையில் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றிய சாதக - பாதகங்களை ஆராயக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ``மொழிவாரி மாநிலம் அவசியமில்லை. நிர்வாக வசதிக்கேற்பத்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என்று அந்தக் குழு பரிந்துரைத்தது. இதையே நேரு உள்ளிட்ட அப்போதைய முக்கியத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். ஆனால், இதை எதிர்த்து 'விசால ஆந்திரா', 'அகண்ட கர்நாடகம்', 'ஐக்கிய கேரளா', 'சம்யுக்த மகாராஷ்டிரம்', 'மகா குஜராத்' என ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் தனி மாநிலம் வேண்டுமெனக் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு கட்டமாக, 1952 ஜூன் 9-ல் பொட்டி ஸ்ரீராமுலு என்ற காந்தியவாதி தொடங்கிய உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்த அவரின் மரணமும் தெலுங்கு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியாத மத்திய அரசு 1953 அக்டோபர் 1-ம் தேதி ஆந்திராவைத் தனி மாநிலமாக அறிவித்தது.
பல்வேறு போராட்டங்கள், ஆலோசனைகளுக்குப்பிறகு 1956 நவம்பர் 1-ம் தேதி முதல், மொழிவாரி மாநிலங்கள் செயல்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. மற்ற மாநிலங்களுக்கு அவர்கள் விரும்பிய பெயரே சூட்டப்பட்ட நிலையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் 'மதராஸ்' என்ற பெயரே தொடரும் என அரசு அறிவித்தது.
`தமிழ்நாடு’ பெயர் சூட்டப்பட்ட வரலாறு
'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை மாற்றி 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1956 ஜூலை 27-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி, 76 நாள் போராட்டத்துக்குப்பின் உயிரிழந்தார். சங்கரலிங்கத்தின் மறைவு இந்தப் போராட்டத்துக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. 1957-ல் திமுக முதன் முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தபோதே 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தோடுதான் நுழைந்தது. 1957 மே 7-ம் தேதி வாக்கெடுப்புக்கு வந்த திமுக-வின் தீர்மானத்துக்கு 42 பேர் ஆதரவாகவும், 127 பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அந்தத் தீர்மானம் அப்போது தோல்வியடைந்தது. அதன்பின் 1961 ஜனவரியில் சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.சின்னத்துரை 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்ற வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தபோது, அப்போதைய முதல்வர் காமராஜர் அவ்விவாதத்தைப் பிப்ரவரி வரை ஒத்தி வைத்தார். அதையடுத்து, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தைத் தொடர்ந்து மூன்று நாள்கள் புறக்கணித்தன. அதன்பின் நிர்வாகக் கடிதங்களில் மட்டும் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதற்குப் பதிலாக 'தமிழ்நாடு' எனக் குறிப்பிடக் காமராஜர் ஒப்புக்கொண்டார். 1961-ல் ஒன்றுபட்ட மேற்கு வங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பூபேஷ் குப்தாவும், 1964-ல் திமுக உறுப்பினர் இராம.அரங்கண்ணலும் 'மெட்ராஸ் ஸ்டேட்' விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கொண்டு வந்த தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டன.
1967-ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த திமுக ஜூலை 18-ம் தேதி `மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து 23.11.1968-ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969 ஜனவரி 14-ல் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Also Read: ``ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்; விரைவில் அரசாணை!’’ - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தில் இருக்கும் முரண்கள்
``தமிழ்நாடு என்ற பெயரில் தற்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு மட்டுமே புதிய சென்னை மாகாணமாக 1956-ல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து, 1967-ம் ஆண்டுதான் சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பைக் கொண்ட புதிய மாநிலம் பிறந்தநாள் நவம்பர் 1-ம் தேதி தான். அதற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் 1969 ஜனவரி 14-ம் தேதி. இரண்டுக்கும் நடுவே சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்தான் 1967 ஜூலை 18-ம் தேதி. ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாகக் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்தநாளாகக் கொண்டாட முடியாது. இது பின்னாளில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும். அதைத் தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும்" என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
``ஓர் அலுவலகமோ, கட்டடமோ முழுவதுமாக முடிக்கப்பட்டு என்றைக்குத் திறந்து வைக்கப்படுகிறதோ அந்த நாள்தான் தோன்றிய நாளாகக் கருதப்படுமே தவிர, திட்ட அறிக்கை தயார் செய்தது, நிர்வாக அனுமதி அளித்தது, நிதி ஒதுக்கீடு செய்தது, அடிக்கல் நாட்டியது ஆகியவற்றை எல்லாம் அந்த அலுவலகமோ, கட்டடமோ தோன்றிய நாளாகக் கருத முடியாது" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
``நவம்பர் 1-ம் தேதியையே விசிக, மதிமுக, தமிழ்த்தேசிய இயக்கங்கள் தமிழ்நாடு நாளாக முன்னெடுத்து வருகின்றன. திடீரென ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி அனைத்து தரப்பிலும் அரசு ஆலோசனை செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது" என விசிக தரப்பிலும் இது குறித்து மாறுபட்ட கருத்துச் சொல்லப்படுகிறது.
முரண்களைக் கலைந்து அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை செய்து இதற்குச் சரியான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!
source https://www.vikatan.com/government-and-politics/politics/history-and-contradictions-of-tamilnadu-day
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக