Ad

வெள்ளி, 22 அக்டோபர், 2021

'காற்றில் பறந்தது சமூகநீதி' ; அண்ணாமலை vs அமைச்சர் கயல்விழி! -பரபரக்கும் அடுத்த ட்விட்டர் பஞ்சாயத்து

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்களை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தனது வீட்டு வேலைக்காரர்களாக பணியமர்த்திருப்பதாக, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கொளுத்திப்போட, சமூகவலைதளங்களில் தீபாவளி பட்டாசாக மேற்படி விவகாரம் வெடித்துக்கொண்டிருக்கிறது.

அண்ணாமலை ட்விட்டர் குற்றச்சாட்டு

Also Read: அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி: முறைகேடு குற்றச்சாட்டுகளும் பதில்களும்!

பா.ஜ.க மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை, கடந்த ஒருவாரகாலமாக தமிழக அமைச்சர்களுக்கு எதிராக, பல அதிரிபுதிரி விவகாரங்களை கொளுத்திப்போட்டு வருகிறார். மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடும் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பை பற்ற வைத்தார். அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், 'தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு பல மாதங்களாக எந்தத் தொகையும் வழங்கப்படாமல் திடீரென ரூ. 29.64 கோடி வழங்கப்பட்டதற்கு காரணம் என்ன?. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்ல முடியுமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சில ஒப்பந்ததாரர்களின் பெயர்களையும், அவர்களது வங்கி கணக்கில் போடப்பட்ட பணம் தொடர்பாகன புகைப்படடம் உள்ளிட்டவற்றை பதிந்த அவர், இந்த வாரம் அனல், அடுத்த வாரம் சோலார், அந்த வாரத்துக்குப் பின் தயாராகிக் கொண்டிருக்கும் 'பெரிய' நிறுவனம்' என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதிவிட்டிருந்தார்.

அண்ணாமலை

பதிலுக்கு செந்தில் பாலாஜி, 'மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது என்று அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் ரூ. 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷன் என மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை, இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று ட்வீட் செய்திருந்தார். ஆனால், அண்ணாமலை பதிலுக்கு ட்வீட் செய்ய, செந்தில் பாலாஜியும் ட்வீட் செய்ய சளைக்காமல் இப்போது வரை 'ட்வீட் போர்' நடத்திகொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், அண்ணாமலை அடுத்த அஸ்திரமாக, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜூக்கு எதிராக, ஒரு பகீர் குற்றச்சாட்டை, தனது ட்விட்டர் பக்கத்தில் சுமத்தியிருக்கிறார். 'திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்களை, தனது வீட்டில் தங்கி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்ய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பணி கொடுத்திருப்பதாக, அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். அதோடு, 'காற்றில் பறந்தது சமூகநீதி!. மக்கள் வரிப்பணத்தில் அநீதி!. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்களை, தன் வீட்டு வேலைக்காரர்களாக ஏன் பணியமர்த்த வேண்டும்?. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களே' என்று ட்வீட் செய்ததோடு, சமையல்காரர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அமைச்சர் கயல்விழியின் பதில் ட்வீட்

இந்த விவகாரம், சமூகவலைதளங்களில் பேசும் பொருளாக மாற, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜும், தனது ட்விட்டர் பக்கத்தில், 'திரு. அண்ணாமலை அவர்கள், எங்கள் வீட்டு சமையலுக்கு நான் எங்கள் துறை விடுதியின் சமையலர்களை பயன்படுத்தி வருவதாக அபாண்டமாக பொய் சொல்லியுள்ளார். எங்கள் வீட்டு சமையலுக்கு இரு சமையலர்களை சம்பளத்திற்கு பணியில் அமர்த்தியுள்ளேன். அவர் வெளியிட்டிருக்கும் பட்டியலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை' என்று ட்வீட் மூலம், பதிலடி கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்து, தமிழக அமைச்சர்களுக்கு எதிராக அண்ணாமலை ட்விட்டர் பக்கம் மூலம் நடத்தி வரும், ட்வீட் போர், தமிழக அரசியல் களத்தில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/annamalai-vs-minister-kayalvizhi-selvaraj-twitter-fight

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக