மதிமுக தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ பொறுப்பேற்ற நிகழ்வு அரசியலில் ஆதரவு, எதிர்ப்பு என பல விவாதங்களை கிளப்பியுள்ளன. வாரிசு அரசியலை எதிர்த்து தி.மு.க-வில் இருந்து வெளியேறிய வைகோ மதிமுக-வை தொடங்கினார். இப்போது மதிமுக-விலும் வாரிசு அரசியல் புகுந்துவிட்டது என்ற விமர்சனங்களும் வந்துள்ளன. \
இதுபற்றி நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம், "திமுக-வில் வாரிசு அரசியல் வந்ததால் அதை எதிர்த்து வைகோ வெளியேறினார் என்பது தவறான தகவல். திமுக-வின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட நாள் முதல் அதை அங்கீகரித்துதான் வைகோ பயணம் செய்தார். நாடு முழுக்க அதிமுக ஆட்சியை எதிர்த்து தளபதி ஸ்டாலின் சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலின் தேதியைப் பெற்று அவரோடு சைக்கிள் பயணம் செய்தவர் வைகோ. ஒருநாளும் ஸ்டாலினை போட்டியாளராக கருதவில்லை. கருதுவதற்கு தேவையும் இல்லை. அவரிடைய களம் வேறு வைகோவின் களம் வேறு.
ஆனால் விடுதலைப்புலிகள் விவகாரத்தில் வைகோவின்மீது சிலபேர் கட்டி அமைத்த பிம்பம் அவரை திமுகவில் இருக்கவிடாமல் செய்தது என்பதுதான் உண்மை. ஆகவே வாரிசு அரசியலை எதிர்த்துதான் மதிமுக தொடங்கப்பட்டது எனச் சொல்லுவது வரலாற்றுப்பிழை. இன்றைக்கு தம்பி துரை வைகோ மதிமுக-வின் தலைமை கழக செயலாளராக பொறுப்பேற்றிருக்கிறார். மதிமுக-வில் இருக்கிற தொண்டர்கள் அதை உற்சாகமாக வரவேற்கிறார்கள். எந்த ஒரு முடிவையும் அந்த கட்சியினுடைய தொண்டர்கள் ஏற்றுக்கொண்டால் அந்த முடிவை பொதுமக்களும் ஏற்றுக்கொள்கிற நிலைமைக்கு காலம் கொண்டுவந்து நிறுத்தும். அதுதான் இங்கேயும் நடக்கப்போகிறது” என்கிறார்.
Also Read: `இது வாரிசு அரசியல் இல்லை எனில், எது வாரிசு அரசியல்?!’ - துரை வைகோவுக்காகச் சமாளிக்கிறாரா வைகோ?
தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், ``துரை வைகோ வந்திருப்பது வாரிசு அரசியல் அல்ல வரலாற்று அரசியல். ஏனென்றால் மதிமுக ஆளுகின்ற கட்சி அல்ல. அதிகாரத்தில் இருக்கிற கட்சி அல்ல. ஆயுள் முழுவதும் போராடுவதற்கென்று பிறந்த கட்சி. தேர்தல் களத்தில் மதிமுக தோற்றுப் போயிருந்தாலும் போர்க்களத்தில் அது வென்றே வந்திருக்கிறது. 19 மாத காலம் எட்டுக்கு நாலு கொட்டடியில், இருண்டச் சிறையில் தவமிருந்து கருத்துரிமைக்கு காப்புரிமை பெற்றுத்தந்தவர் வைகோ. முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழ்நாட்டினுடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு பல்வேறு களங்களைக் கண்டு முல்லைப் பெரியாறை மீட்டுத்தந்தவர் வைகோதான். ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டிருக்கிறது என்றால், அதை இழுத்து மூடுவதற்கு பொதுமக்களே அறப்போருக்கு அனியமானார்கள் என்றால் அந்த அக்னியை விதைத்தவருக்குப் பெயர் வைகோ.
தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த போராட்டத்துக்கு அவர் முகம் தந்திருக்கிறார். 54 கவன ஈர்ப்பு தீர்மானங்களை ஈழத்தமிழர்களுக்காக நாடாளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கிறார். லண்டனில், ஜெனீவாவின், அமெரிக்காவில் ஆஸ்லோவில் என்று உலக அரங்கில் தமிழின விடுதலையை அவர்முன்மொழிந்து பேசிய பேச்சுக்கள் வரலாற்றுச் சிறப்புமிகுந்தவை. ஒரு இயக்கத்தைத் தொடங்கி கன்னியாகுமரி - சென்னை, நெல்லை - சென்னை, பூம்புகாரில் இருந்து கல்லடை என்று தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு அந்த இயக்கத்தை நிலைநிறுத்துவதற்கு வைகோ கொடுத்த விலை எனக்குத் தெரிந்து இந்திய அரசியலில் யாரும் கொடுக்காத விலை. ஆனால் அவர் தவறு இழைத்திருக்கிறார். எந்த கட்சியில் இருந்து விலகி வந்தாரோ அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது. எந்த கட்சி ஆகாது என்று வேண்டாம் என்று 1994-ல் ஏப்ரல் 16-ல் அறிவித்தாரோ அந்த கட்சியோடு கூட்டணி வைத்தது என வைகோவினுடைய நிலைப்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாயின.
எனவே அதிகாரத்தை விரும்புகிறவர்கள் அண்ணன் வைகோவை நம்பி இருந்தால் அதிகாரத்துக்கு வரமுடியாது என்று கருதி அந்த கட்சியில் இருந்து இடம்பெயர்ந்து தாய்க்கழகத்தில் இணைந்தார்கள். இன்றைக்கு ஒரு பாசிச கட்சி தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு திட்டமிடுகிறது. திராவிட இயக்கத்தை வீழ்த்துவதே அவர்களது குறிக்கோள். ஆகவே மனிதனை மனிதனாக்கிய திராவிட இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு வைகோவிற்கு இருக்கிறது. ஆகவே திமுக-வுடன் இசைந்தும் இணைந்தும் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டு மதிமுக இன்றைக்கு பேசப்படுகிற இடத்தில் இருக்கிறது.
ஆகவே வைகோ களைத்துப்போய் இருக்கிறார், ம.தி.மு.க இளைத்துப்போய் இருக்கிறது. கட்சியை விட்டு பலபேர் போய்விட்டார்கள். எல்லா ஊரிலும் அமைப்பு இருந்தாலும் அந்த அமைப்பு இயங்கக்கூடிய நிலையில் இன்றைக்கு இல்லை. ஆகவே வைகோவின் சுமைகளை பகிர்ந்துகொள்ளவும், கழக தோழர்களை ஒருங்கிணைக்கவும். துரை வைகோ களமாடுவார். எல்லோருடைய கவனத்தையும் கவருவார் என நம்புகிறேன். தம்பி துரை வைகோவின் வருகை நல்வரவாட்டும். ஒரு வரலாற்று மாற்றத்துக்காக அவர் வாசல் திறந்து வைப்பார் என்று அந்த கட்சியின் சராசரி தொண்டர்கள் நம்புவதைப் போலவே நாஞ்சில் சம்பத்தும் நம்புகிறேன்" என்றார் விரிவாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/nanjil-sampath-regarding-durai-vaiko-entry-in-mdmk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக