`நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்த மாதாந்தர அறிக்கை!' - திமுக அரசை வலியுறுத்தும் கமல்
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்த விவரங்களை திமுக அரசு வெளியிட வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாகக் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `` திமுக தனது தேர்தல் அறிக்கையில் மொத்தம் 505 வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால், ஆட்சி அமைத்து இத்தனை மாதங்கள் ஆகியும் இன்னும் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அதில் குறிப்பாக திமுகவின் 491-ம் தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அந்த குறிப்பிட்ட வாக்குறுதியில், தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றத் திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் அமைக்கப்படும் என்று திமுக குறிப்பிட்டிருந்தது.
ஆனால், இன்றளவும் அந்த செயலாக்க அமைச்சகம் அமைக்கப்படவில்லை. அதே போல், `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தின்கீழ் பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் விசாரிக்கப்பட்டுத் தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், பெறப்பட்ட புகார்கள் விரைந்து முடிக்கப்படவில்லை. எனவே, திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதிகளில் எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான மாதாந்திர அறிக்கையினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-news-today-26-10-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக