Ad

செவ்வாய், 26 அக்டோபர், 2021

கோழி இறகு, மீன் செதில் மூலம் மாசுக்கட்டுப்பாடு; ஜனாதிபதி கையால் விருது பெறும் ஆந்திர மாணவி!

ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த மத்லா யாஷஸ்வி என்ற மாணவி கோழி இறகு மற்றும் மீன் செதில் போன்ற கழிவுப் பொருள்களைக் கொண்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் பொருள்களைத் தயாரித்து இருக்கிறார். இவரது இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருவதுடன், இவரது கண்டுபிடிப்புகளுக்கு தேசிய ஊக்குவிப்பு விருது கிடைத்துள்ளது. விரைவில் குடியரசுத் தலைவரிடமிருந்து இந்த விருதை பெறவிருக்கிறார் மத்லா யாஷஸ்வி. இவரது கண்டுபிடிப்புப் பொருள்கள் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன.

அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் ஊக்குவிப்பு விருது வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான தேர்வு இம்மாதம் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஆன்லைனில் காணொளி வாயிலாக நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து 581 கண்டுபிடிப்புகள் இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கோழி

Also Read: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடிதம் அனுப்பிய அரசு பள்ளி மாணவி; பாராட்டிய ஐ.நா!

மாணவியின் கண்டுபிடிப்பின்படி கோழி இறகை, வட்ட வடிவில் தொழிற்சாலைகளின் புகைபோக்கிகள் மற்றும் வாகன சைலன்சரில் பொருத்துவதன் மூலம், வெளியேறும் அந்தக் காற்றில் இருக்கும் மாசைக் குறைக்க முடியும். மேலும், மீன் செதில், கோழி இறகு, தண்ணீர், கிளிசரின் ஆகியவற்றைச் சேர்த்து உயிரி பிளாஸ்டிக் தயார் செய்யலாம். இந்த பிளாஸ்டிக் எளிதாக மண்ணில் மக்கி உரமாகப் பயன்படும். மீன் செதிலை சூடு படுத்தும்போது மீன் ஜெல் கிடைக்கும்.

இதனை இரும்புக் கம்பியுடன் சேர்த்து, இரும்புத் துருப்பிடிக்காமல் காக்கப் பயன்படுத்தலாம். மூட்டு வலி சிகிச்சைக்கும் இது பயன்படும். மீன் ஜெல்லில் இருக்கும் `கொலாஜன்' என்ற பொருள் வலி நிவாரணியாகச் செயல்படும். மீன் ஜெல்லை பெயின்டில் கலந்து பயன்படுத்துவதன் மூலம் பெயின்ட் ஈரமாக இருப்பதையும், சுவரில் சீரற்று படிவதையும் குறைக்கலாம் என மாணவி கண்டறிந்துள்ளார்.

மேலும், கோழி இறகுகள், சிமென்ட், மணல், மீன் ஜெல் மற்றும் நீர் கொண்டு சிமென்ட் செங்கல் செய்ய முடியும். இது லேசானது மற்றும் உறுதியானதாக இருக்கும். இதன் உறுதித்தன்மை ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார்.

மீன்

Also Read: உழவு ஓட்ட ஆள் தேவையில்லை... ரிமோட் போதும்..! இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு

தனது கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனை குறித்து மாணவி யாஷஸ்வி, ``கோழி இறகுகள் மற்றும் மீன் செதில்கள் நீர் நிலைகளை நாசம் செய்கின்றன. இவற்றை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருளாக மாற்றுவது அவசியம். எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போதே இந்த எண்ணம் தோன்றியது. நான் இவற்றைக் கண்டறிவதற்கு எனக்கு வழிகாட்டுதலாக இருந்தவர், என் அறிவியல் ஆசிரியர் ஹேமந்த் குமார் மற்றும் பள்ளி முதல்வர் ரமாபாரதி. சிறு வயதிலிருந்து எனக்கு ஊக்கமளித்த அம்மா ஸ்ரீலட்சுமி மற்றும் அப்பா தேவராமராஜுலுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/india/andhra-girl-to-receive-inspire-award-for-converting-wastes-into-ecofriendly-objects

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக