Ad

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

IND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்!

ஒவ்வொரு ஐ.சி.சி உலகக்கோப்பை தொடரின்போதும் இதன் மீது அதீத எதிர்பார்ப்பு எழும். ஒருவேளை அது நடப்பதாக அறிவிக்கப்பட்டால் அந்த நொடியிலிருந்தே பதற்றம் தொற்றிக்கொள்ளும். நிச்சயம் அது விடுமுறை நாளாக இருக்கும்படி ஐ.சி.சி பார்த்துக்கொள்ளும். 'கோப்பையைவிட முக்கியம் இந்த ஆட்டம்' என இதயங்கள் சபதமேற்கும். பன்னாட்டு நிறுவனங்கள் 'மவுக்கா மவுக்கா' பாடத் தொடங்கும். ரோடுகள் காலியாகும், வீடுகள் பரபரப்பாகும். முடிந்தபின் சில தலைகள் உருளும். இத்தனையும் ஒவ்வொருமுறையும் தவறாது நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும்போது. இந்த முறையும் அப்படியே!
IND vs PAK

உலகக் கோப்பையை பொறுத்தவரை 50 ஓவர்களில் 7 முறையும் டி20 போட்டிகளில் 5 முறையும் இரு அணிகளும் மோதியிருக்கின்றன. இந்த அத்தனை போட்டிகளிலும் இந்தியாவே வென்றிருக்கிறது. அதேசமயம் இந்த முறை போட்டி நடக்கவிருக்கும் துபாய் மைதானமோ கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணியின் ஹோம் க்ரவுண்ட் போல. இங்கே ஆறு டி20களில் விளையாடி அத்தனையிலும் வென்றிருந்தது பாகிஸ்தான். எப்போதுமே ஐ.சி.சி தொடர்களில் வீக்காகக் காட்சியளிக்கும் பாகிஸ்தான் இந்த முறை பலமான அணியாகவே தொடருக்குள் அடியெடுத்து வைத்தது.

கோலி டாஸுக்கு நிற்கும் கடைசி சில ஆட்டங்களில் ஒன்று. டாஸ் அவருக்கு கைகொடுக்கவில்லை. பாகிஸ்தான் பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தது. ஐபிஎல்லில் இறுதி ஆட்டம் தவிர மீதி அனைத்திலும் சேஸிங்கிற்கு ஆதரவாக இருந்த பிட்ச். முந்தைய நாள் முதல் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி சுருண்ட அதே பிட்ச். பனியும் தன் பங்கிற்கு இரண்டாம் பாதியில் வேலையைக் காட்டும் என்பதாலும் இந்த முடிவு.

இந்திய அணியைப் பொறுத்தவரை இஷானுக்குப் பதில் சூர்யகுமார் யாதவ். அஷ்வினுக்கு பதில் எதிர்பார்த்தது போலவே வருண். தாக்கூருக்கு பதில் பார்மில் இல்லாத புவி. சமி, பும்ரா, புவி மூவரும் ஓரணியில் விளையாடுவது அரிதினும் அரிது என்பதால் இந்த அணித்தேர்வு நல்லதா கெட்டதா என டாஸின்போதே கேள்வி எழுந்தது. போக, ஐந்தே பௌலிங் ஆப்ஷன்கள் டி20யைப் பொறுத்தவரை வேலைக்காகாது என்பதால் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் சாதித்தால் மட்டுமே தலைவலி தீரும் என்கிற நிலைமை. பாகிஸ்தானிலோ சி.எஸ்.கே போல அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட, சீனியர் வீரர்கள் அனைவரும் உள்ளே.

IND vs PAK
உள்ளே வந்தனர் ரோஹித்தும் ராகுலும். ஆனால் ரன் அப் செட் செய்யவேண்டிய ஷஹீன் தன் கேப்டனையே பார்த்துக்கொண்டு நின்றார். களத்திற்கு வெளியே வழக்கத்திற்கு மாறாய் வரிசையில் வந்து நின்றார்கள் இந்திய வீரர்கள். ரோஹித் கைகாட்ட, சட்டென இந்திய அணி முழங்காலிட்டது. பாகிஸ்தான் வீரர்கள் நெஞ்சில் கைவைத்தார்கள். 'Black Lives Matter' இயக்கத்திற்கு ஆதரவாய் இரு அணிகளும் செலுத்திய மரியாதை இது. உலகமே நோக்கும் ஒரு போட்டியில் வேற்றுமைகளை மறந்து இரு அணிகளும் எழுப்பியது ஒரு பக்கா அரசியல் ஸ்டேட்மென்ட்.

முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் சிங்கிள் தட்டினார் ராகுல். க்ரீஸில் இப்போது ரோஹித். மின்னல் வேகத்தில் வந்த இன் ஸ்விங்கைக் கணிக்க முடியாமல் தடுமாற, பேடில் பட்டு எல்.பி.டபிள்யூ! ஐபிஎல் புண்ணியத்தில் இடதுகை பந்துவீச்சாளர்களின் இன்ஸ்விங்கை ரோஹித்தால் ஆடவே முடியாது என்கிற பல்லாண்டு வீக்னெஸை உலக அணிகளும் புரிந்துகொண்டதற்கான சாட்சி இது.

IND vs PAK

ஷஹீனின் அடுத்த ஓவரிலேயே ராகுலும் இன்ஸ்விங்கிற்கு காலி. தான் பார்மில் இருக்கிறோமா இல்லையா என்பது தெரியாத சூர்யகுமார் யாதவோடு கேப்டன் கோலி களத்தில். பார்மில் இல்லை என்பது போல சீக்கிரமே நடையைக் கட்டினார் சூர்யா. மறுபக்கம் ஷஹீனின் சூட்சுமத்தை புரிந்துகொண்ட கோலி க்ரீஸை விட்டு இறங்கி வந்து நின்றாடினார். ஸ்விங் ஆவதற்கு முன்பே எதிர்கொண்டால் பந்தை தன்போக்கில் செலுத்தமுடியும் என்கிற க்ளாஸிக் பாடத்திட்டம். ஐந்தாவது ஓவரிலேயே களத்தில் ஐந்தாவது பேட்ஸ்மேன் - ரிஷப் பண்ட். இருவரும் பொறுமையாய் மோசமான பந்துகளை மட்டும் டார்கெட் செய்வது, கிடைத்த கேப்பில் எல்லாம் சிங்கிள் தட்டி ரன்ரேட் மெயின்டெயின் செய்வது என ஆட, கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்தது ஸ்கோர். பத்து ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 60/3.

IND vs PAK

Also Read: 6-வது பௌலர் யார்? ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டரா? ரவி சாஸ்திரி - கோலி - தோனியின் கேம்ப்ளான் என்ன?!

12வது ஓவரில் ஹசன் அலியைக் குறிவைத்தார் பண்ட். அடுத்தடுத்து இரண்டு ஒற்றைக்கை சிக்ஸர்கள். பண்ட்டை பேட் சுற்றவிட்டால் ஆபத்து என உணர்ந்த ஷதாப் அடுத்த ஓவரிலேயே கூக்ளியை வீச, தூக்கியடிக்க ஆசைப்பட்டு அவரிடமே கேட்ச் கொடுத்துக் கிளம்பினார் பண்ட். இப்போது பாண்டியாவிற்கு பதில் ஜடேஜா. இடதுகை பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து சமாளிக்க இடதுகை பேட்ஸ்மேன். ஆனாலும் பெரிதாக பலனில்லை. கோலி மட்டுமே அந்தப்பக்கம் பவுண்டரி தட்டிக்கொண்டிருந்தார். 18வது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதம் எட்டினார் கோலி - 45 பந்துகளில். ஆனால் அடுத்த ஓவரில் அதே ஷஹீன் பந்துவீச்சில் கோலியும் அவுட். டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி கோலியை அவுட் செய்வது இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல்முறை. ஆனாலும் அந்த ஓவரில் நோ பால், ஓவர் த்ரோ என 17 ரன்கள்.

IND vs PAK
கடைசி ஓவரில் வெறும் 7 ரன்களே. 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 151/7. கடைசியாக இரு அணிகளும் மோதிய உலகக் கோப்பை டி20 போட்டி ஈடன் கார்டனில் 2016-ல் நடந்தது. அப்போதும் முதல் மூன்று விக்கெட்கள் மளமளவென விழ கடைசிவரை நின்று கரை சேர்த்தது கோலிதான். இந்தமுறையும் கிட்டத்தட்ட அவரே. கிங் கோலி!
IND vs PAK

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாய் இறங்கினார்கள் பாபர் ஆசாமும் ரிஸ்வானும். முறையே ஐ.சி.சி டி20 பேட்டிங் ரேங்கிங்கில் 2, 7 இடங்கள். டி20யிலேயே 46, 48 என ஆவரேஜ் வைத்திருக்கும் அடுத்த தலைமுறை நம்பிக்கைகள். நம்பர்கள் பொய் சொல்லாது என்பதுபோல புவியின் முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி, டீப் ஸ்கொயர் பக்கம் ப்ளிக் ஷாட் சிக்ஸர் என பத்து ரன்கள் எடுத்தார் ரிஸ்வான்.

IND vs PAK

அடுத்த ஓவர் ஷமி, அதற்கடுத்த ஓவர் பும்ரா, அடுத்ததாய் வருண் என முதல் நான்கு ஓவர்களில் நான்கு பௌலிங் சேஞ்ச்கள். அதில் வருணை மட்டுமே ஓரளவு தடுமாற்றத்தோடு எதிர்கொண்டார்கள் இருவரும். அதற்கும் சேர்த்து ஷமி, புவி ஓவரில் ரன் சேர்த்தார்கள். கடைசி தந்திரமாய் கோலி ஜடேஜாவை கொண்டுவந்தும் பலனில்லை. சீரான இடைவெளியில் பவுன்டரிகளும் சிக்சர்களும் வந்துகொண்டே இருந்தன. பவர்ப்ளே முடிவில் 43 ரன்கள் விக்கெட் இழப்பின்றி. அடுத்த நான்கு ஓவர்களில் மேலும் 28 ரன்கள் வர ஸ்கோர் 71/0.

ஓரளவு தடுமாறிய வருணின் கடைசி ஓவரையே இருவரும் அடுத்தடுத்து சிக்ஸர்கள் பறக்கவிட்டு வெளுக்க, அப்போதே மேட்ச்சின் முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. அந்த 13வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 101/0. 42 பந்துகளில் 51 ரன்கள்தான் இப்போதைய தேவை. கையில் பத்து விக்கெட்கள். எந்த அணியும் இந்த நிலையில் சொதப்பமுடியாது பாகிஸ்தானைத் தவிர. விறுவிறுவென மிடில் ஆர்டர் சரிந்து தோல்வியடைந்த வரலாறெல்லாம் அந்த அணிக்கு உண்டு. அந்த நம்பிக்கையில்தான் பௌலிங் சேஞ்சை செய்துகொண்டே இருந்தார் கோலி. ஆனால் ஓப்பனர்கள் இருவருமே மிடில் ஆர்டரை எக்ஸ்போஸ் ஆகவிடாமல் விடாக்கொண்ட, கொடாக்கொண்டனாய் நின்றதால் பாகிஸ்தான் எளிதாக இலக்கை எட்டியது.

IND vs PAK
29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி. அதுவும் பாகிஸ்தான் தன் டி20 வரலாற்றிலேயே, முதன்முறையாக பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றிருக்கும் பெரிய வெற்றி!

களத்தில் துள்ளிக் குதித்த பாகிஸ்தான் வீரர்களை, 'இப்போ இதெல்லாம் கூடாது. இன்னும் போகவேண்டிய தூரமிருக்கு' என்பதுபோல அடக்கினார் கேப்டன் ஆசாம். மறுமுனையில் சிரித்தபடி பாகிஸ்தான் வீரர்களைக் கட்டியணைத்து வாழ்த்து சொன்னார் கோலி. களத்திற்கு வெளியேயான அரசியலும் வர்த்தகமும் இத்தனை நாள்களாய் இரு அணிகளும் மோதும் ஆட்டங்களில் ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில் இந்த இரண்டு காட்சிகளும் வரவேற்கத்தகுந்த மாற்றம்.

'ஜெயிக்க ஓரளவிற்கு வாய்ப்பிருக்கு' என்பதாக இருந்து இப்போது இந்தியாவையே வீழ்த்தியதன் மூலமாக 'நாங்களும் இருக்கோம் போட்டிக்கு' என ஓங்கி சொல்லியிருக்கிறது பாகிஸ்தான். மறுபக்கம் உலகிலேயே சவாலான டி20 போட்டிகளில் ஆடும் வீரர்களைக் கொண்ட அணி, யு.ஏ.இயில் ஓராண்டில் அதிகம் விளையாடிய வீரர்களைக் கொண்ட அணி என ஏகப்பட்ட ப்ளஸ்களைக் கொண்ட இந்திய அணியோ பெரும்பான்மையானோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

IND vs PAK

வெகுசிலருக்கு இது அணித்தேர்வின்போதே ஏற்பட்ட சலசலப்புதான். பௌலிங் பயிற்சியே மேற்கொள்ளாத ஹர்திக்கை ஆல்ரவுண்டர் இடத்தில் ஆடவிடுவது, ஐந்தே பௌலிங் ஆப்ஷன்களோடு களமிறங்குவது என கேப்டன் கோலி, மென்டர் தோனி, கோச் ரவி சாஸ்திரி இவர்கள் அனைவரின் முடிவுகளும்தான் இந்தத் தோல்விக்குக் காரணம். ஆனாலும் அதிக பழி வழக்கம்போல் கோலிக்கே வந்துசேரும். ஏற்கெனவே அவர்மீது வாசிக்கப்படும் புகார்ப்பட்டியலில் இனி 'உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராய் தோற்ற முதல் கேப்டன்' என்கிற விமர்சனமும் புதிதாய் இணையும்.

கோப்பை வென்று இந்த விமர்சனக்கணைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பது அதிகபட்சம் இன்னும் மூன்றே வாரங்களில் தெரிந்துவிடும்.


source https://sports.vikatan.com/cricket/pakistan-ends-the-29-year-old-jinx-by-beating-india-in-the-t20-worldcup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக