Ad

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

முல்லைப் பெரியாறு அணை: ``தமிழகத்துக்கான முழு அளவு நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள்"- பினராயி விஜயன்

தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்திருக்கிற நிலையில், வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருக்கிறது. எனவே முல்லைப் பெரியாறு அணையிருந்து திறக்கப்படும் நீரின் அளவைக் குறைத்துக் கொண்டு உச்சநீதிமன்ற உத்தரவுபடி 142 அடி வரை நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியிருக்கின்றனர். தற்போது முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டிவிட்டது.

நீர்

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ``கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரிய அளவில் பொருள் இழப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே அக்டோபர் 18-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.45 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து கேரள அரசின் தலைமைச்செயலர், கூடுதல் தலைமைச் செயலர், நீர்பாசனத்துறை அமைச்சர் ஆகியோர் அணையின் நிலவரத்தைக் கண்காணித்து வந்தனர். அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என ஆலோசனைத் தெரிவித்திருக்கின்றனர். அக்டோபர் 19-ம் தேதி இடுக்கி அணைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டதைத் தொடர்ந்து அதன் மூன்று மதகுகளைத் திறந்துவிட்டு நீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம்.

முல்லைப் பெரியாறு அணைக்கு அக்டோபர் 20-ம் தேதி நிலவரப்படி நீர்வரத்து 2109 கனஅடி இருக்கிறது. அதில் 1750 கனஅடி தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் முல்லைப் பெரியாறு நீர் பிடிப்பு பகுதியில் மழைப் பொழிவு அதிகமாக இருப்பதால் விரைவாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இவ்வாறு நீர்வரத்து அதிகமானால் விரைவில் 142 அடியை எட்டும் நிலை இருக்கிறது. எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்பது கேரள அரசின் வேண்டுகோள். அதற்கு தமிழகத்துக்குத் தேவையான நீரை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக வைகை அணைக்கு எவ்வளவு நீரை கொண்டுசொல்ல முடியுமோ அந்தளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை 142 அடியை எட்டிவிட்டால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்படுவதை 24 மணி நேரத்துக்கு முன்பாகத் தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Also Read: ``முல்லைப் பெரியாறு தண்ணீர் 527 இடங்களில் திருடப்படுகிறது!'' - பி.டி.ஆர் சொன்ன அதிர்ச்சி தகவல்

இடுக்கி அணை

இந்தக் கடிதம் உள்நோக்கத்துடன் எழுதப்பட்டது எனவும், அதை ஏற்கக்கூடாது எனவும் விவசாய சங்கங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு குற்றச்சாட்டியதால் 1979-இல் 152 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் 136 அடியாக நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து 2014-இல் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் எனவும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 வரை உயர்த்தி கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு 6 ஆவது முறையாக அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்திருக்கிறது. இந்த நிலையில்தான் அணை பலவீனமாக இடியும் நிலையில் உள்ளதால் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது எனக் கேரள திரைத்துறையினர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் விஷப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஒருவர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பீதியைக் கிளப்புகிறார். இதனைக் கண்டும் காணாதது போல இருக்கும் கேரள முதல்வர், அணையின் நீர்மட்டம் உயர்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் கடிதம் எழுதியிருக்கிறார் என்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-chief-minister-pinarayi-vijayans-letter-to-tamilnadu-cm-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக