கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால், அ.தி.மு.கவினர் தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படனர். அதன்பிறகு, இரவு விடுவிக்கும்வரையில், காவல்துறையினருக்கும், அ.தி.மு.கவினர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு, கூச்சல் என்று ஏரியாவே அல்லோலப்பட்டது.
Also Read: `எந்த டெண்டரும் நடக்காது!' அதிமுக கவுன்சிலர்களை திமுக மிரட்டுவதாக மனு அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராக அ.தி.மு.க சார்பில் தேர்வு செய்யப்பட்ட தானேஷ் என்கிற முத்துக்குமார், கடந்த சட்டன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டதால், தனது 8 வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுடன், கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான 8 வது வார்டு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 9 ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையானது, கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க வேட்பாளரை விட, தி.மு.க வேட்பாளர் கண்ணையன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில், சுமார் 18,762 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து, நேற்று (22 - ஆம் தேதி) மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல், மதியம் 2 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் 8 அ.தி.மு.க உறுப்பினர்களும், 4 தி.மு.க உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையில், கூட்டம் ஆரம்பித்து பதினைந்து நிமிடத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என தேர்தல் அதிகாரி வாகனத்தில் வெளியேற முற்பட்டார் .அப்போது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அ.தி.மு.க நிர்வாகிகள், தேர்தல் அதிகாரியும், மாவட்ட திட்ட இயக்குனருமான மந்திராசலம் வாகனத்தை மறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான போலீஸார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 'தேர்தலை தள்ளி வைக்க என்ன காரணம்?' என்று கேட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அங்கு நின்றிறுந்த அ.தி.மு.கவினர், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.கவினரை கைது செய்ய உத்தரவிட்டார்.
போலீஸார் அவர்களை கைது செய்ய முற்பட்டபோது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த தகவல் அறிந்து, அப்பகுதியில் கூடிய அ.தி.மு.கவினர், முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்தவர்களை வேனில் அழைத்துகொண்டு போய், வெள்ளியணை பைபாஸில் உள்ள மண்டபத்துக்கு வெளியே அமர வைத்தனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
"மினிட் புக்குல கையெழுத்து வாங்கிட்டாங்க. நாமினேஷன் படிவம் பூர்த்திசெய்ய சொல்லி, அதை வாங்கிகிட்டாங்க. ஆனால், அதை வாங்குனதுக்கு பிறகு, திட்ட இயக்குநர், 'தேர்தல் ரத்து செய்யப்படுகிறது'னு சொல்லிட்டு, வெளியில் வந்து கார் ஏறி புறப்பட்டார். நாங்க அவர்கிட்ட, 'ஏன் தேர்தலை நிறுத்துனீங்க?'னு கேட்டதுக்கு, அவர் பதில் சொல்லவே இல்லை. கார் கண்ணாடியை இறக்கவே இல்லை. ஆனால் தி.மு.ககாரங்க, 'எங்க வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவித்துவிடுவோம்'னு ஓபனா சொன்னாங்க. இப்படி, நடக்கும் என்று முதல்நாளே, தேர்தல் நடத்தும் அலுவலரான திட்ட இயக்குநரிடம், புகார் மனு கொடுத்தோம். ஆனால், திட்ட இயக்குநர் பதில் சொல்லவே இல்லை. எங்க உறுப்பினர்கள் கையெழுத்துப் போட்ட மினிட் புக்கையாவது எடுத்து கொடுங்க'னு கேட்டோம். அதுக்கு, 'முடியாது'னு சொல்லிட்டார். ஆனா, அதுக்கு பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்து, காட்டுமிராண்டித்தனமாக அ.தி.மு.க வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களை அடித்து, வேனில் ஏற்றி கொண்டு வந்தாங்க. மதியம் போல கைது பண்ணி அழைத்து வந்து, மண்டபத்தில் உட்கார வைக்காம மண்டபத்துக்கு வெளியே, வெறும் மண் தரையில் உட்கார வச்சாங்க. இரவு வரைக்கும் அப்படியே அமர வச்சாங்க. ஆனா, திட்ட இயக்குநரோட வாகனத்தை சேதப்படுத்தியதாக சொல்லி, எங்கமீது பி.பி.டி ஆக்ட் போடபோறதா சொல்றாங்க. ஆனால், என்ன ஆக்ட் என்று மேலிடத்தில் இருந்து தகவல் வரணும். ஏன்னா, நடப்பது தி.மு.க ஆட்சியல்லவா?. ரொம்ப நேர்மையான ஆட்சி.
போலீஸ் அதிகாரியே, 'மேலிடத்தில் இருந்து தகவல் வரணும்'னு வெளிப்படையா சொல்றார். தகவல் வந்ததுக்கு பிறகு, எங்க மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுறதா சொல்றாங்க. நீங்களே திட்ட இயக்குநரோட வாகனத்தை பாருங்க. ஏதாச்சும் சேதாரம் ஆகியிருக்கா?. முழு வீடியோ ஆதாரம் வைத்திருக்கிறோம். மினிட் புத்தகத்துல கையெழுத்து மட்டும் வாங்கிகிட்டு, தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றதா தி.மு.க தலைமை அறிவிக்க சொல்லியிருக்கு. அதனால்தான், திட்ட இயக்குநரே வெளியே போயிருக்கிறார். ஆனால், அவர் வாகனத்தை நாங்க நிறுத்தினதுக்குப் பிறகு, இந்த மாவட்ட எஸ்.பி, தி.மு.க மாவட்ட செயலாளர் போல செயல்பட்டு, அ.தி.மு.கவினர்களை அடித்ததோடு, எங்கமீது பொய்கேஸ் போட துடிக்கிறார். அராஜகம் கட்டவிழுத்துப்பட்டிருக்கிறது. 4 உறுப்பினர்களை மட்டும் வச்சுக்கிட்டு, தி.மு.கவினர் தேர்தலில் வெற்றிபெறுவோம்னு சொல்றாங்க. ஒரு தி.மு.ககாரர், 'இன்னைக்கு தேர்தல் நடந்து, நீங்க ஜெயிச்சிட்டீங்கன்னா, நான் ஒரு காதை அறுத்துக்குறேன்'னு வெளிப்படையா சொல்றார். அப்படின்னா, திட்டமிட்டு, பிளான் பண்ணி இதை தி.மு.க பண்ணுது. அதனால், நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். அதன்மூலம், எங்களுக்கான நீதியைப் பெறுவோம். ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்க இருக்கிறோம்" என்றார்.
source https://www.vikatan.com/news/controversy/mrvijayabaskar-arrest-by-karur-police-in-local-body-election-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக