திருக்கோயில்கள் எல்லாம் அருளும் ஆசியும் வழங்கும் திருவிடங்களாக இருந்து வந்தாலும் நாவுக்கு ருசியான பிரசாதங்களை வழங்கும் அருள்தரு உணவிடமாகவும் இருந்து வருகின்றன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் புளியோதரை தொடங்கி நாடெங்கும் விதவிதமான பலகாரங்கள் திருக்கோயில் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. வீட்டில் செய்ய முடியாத அல்லது வீட்டில் செய்தால் அத்தனை ருசிக்காத பல பலகாரங்கள் நைவேத்தியமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
நூற்றுக்கணக்கான நைவேத்தியங்கள் அறுசுவையிலும் கிடைத்து வருகின்றன. விதவிதமான இனிப்புகள் தொடங்கி புற்று மண்வரை கூட உண்ணும் பிரசாதமாக இருப்பதை நாம் அறிவோம். இதில் ராஜவகை பிரசாதம் என்று போற்றப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு ஒன்றுதான். அந்த லட்டின் சுவையும் மணமும் அலாதி எனலாம். வேறெங்குமே செய்ய முடியாத மகத்துவம் கொண்டது திருப்பதி லட்டு.
புவிசார் குறியீடு பெருமையைப் பெற்றுள்ள இந்த ஸ்ரீவாரி லட்டு, திருப்பதி தேவஸ்தானத்துக்கு உரிமையான பொட்டு என்ற திருமடப்பள்ளியில் தயாராகிறது. 2016-ம் ஆண்டு மட்டும் திருப்பதியில் 10 கோடியே 34 லட்சம் லட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தது என்கிறார்கள்.
பிரபலமானவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் 750 கிராம் அளவு கொண்ட ஆஸ்தான லட்டு, ஏழுமலையான் கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கும் உபயதாரர்களுக்கு வழங்கப்படும் கல்யாண உற்சவ லட்டு, பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 175 கிராம் அளவுள்ள புரோக்தம் லட்டு என மூன்று வகை லட்டுகள் திருப்பதியில் தயார் ஆகி வழங்கப்படுகின்றன.
திருப்பதி லட்டின் வரலாறு!
திருப்பதி பெருமாள் கோயிலை புனரமைத்துக் கட்டிய தொண்டைமான் அரசன் காலத்திலேயே திருப்பதியில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன என்றும் பல்லவர் ஆட்சியில் முழு நேர உணவும் வழங்கப்பட்டன என்றும் வரலாறு கூறுகிறது. பிறகு 'திருப்பொங்கம்' என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏழுமலையானுக்கு வழங்கப்படும் தயிர் அன்னமே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட காலமும் ஒன்று உண்டு என்கிறார்கள் பெரியோர்கள். பிறகு விஜயநகர ஆட்சியில் திருப்பதி முக்கியத்துவம் பெறத்தொடங்கி பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்க பிரசாதங்களின் வகையும் மாறத்தொடங்கின.
1445-ம் ஆண்டு முதல் சுய்யம் என்ற இனிப்பு அடை பிரசாதமாக வழங்கப்பட்டது. இது 1450-ம் ஆண்டு அப்பமாக மாறியது. 1460-ம் ஆண்டில் அது வடையாக மாறியது. இன்றும் கனமான வடையாக இது வழங்கப்படுகிறது. 1468-ம் ஆண்டு முதல் அதிரசம் பிரசாதமானது. 1547-ம் ஆண்டு மனோகரம் என்ற இனிப்பு முறுக்கு பலகாரம் பிரசாதமானது. 1546-ம் ஆண்டு கல்வெட்டு தகவல் ஒன்று, விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ஐந்து நாள்கள் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம் பற்றியும், அப்போது திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வடை, மனோகரம், அவல், பொரி ஆகியவற்றை பிரசாதமாக அளித்ததையும் சொல்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதை அங்கேயே உண்டதோடு, தங்களுடைய உறவுகளுக்கும் கொண்டு செல்ல விரும்பினர். அதற்கு ஏற்ற நைவேத்தியமாக வடையும் மனோகரமும் இருந்தன. எனினும் வடை கல் போல கடினமாக இருந்ததால் அதை வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பவில்லை. இந்நிலையில் எல்லோரும் விரும்பும் லட்டு பிரசாதத்தை ஏழுமலையான் ஏற்றுக் கொள்ள திருவுளம் கனிந்தார்.
Also Read: வேலிருக்க வினையில்லை, மயிலிருக்க பயமும் இல்லை! மகா ஸ்கந்த ஹோமத்தில் நீங்களும் கலந்துகொள்வது எப்படி?
1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியில் இருந்து ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைக்கப்பட்டது. 1803-ம் ஆண்டு முதல் அதுவே பூந்தியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது என்றும், முக்கியஸ்தர்களுக்கு முழு லட்டு வழங்கும் நடைமுறை உருவானது என்றும் கூறுகிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் 1932-ம் ஆண்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாகி அதன் நிர்வாகத்தின் கீழ் கோயிலும் விழாக்களும் நிர்வகிக்கப்பட்டன.
அப்போது ஒருநாள் திருப்பதி திருக்கல்யாண உற்சவ விழாவுக்கான திருக்கட்டளையை ஏற்ற பக்தர் ஒருவர் மடப்பள்ளியில் பணம் செலுத்தி கொண்டந்தா லட்டு எனும் மிகப்பெரிய லட்டுகளை ஆயிரக்கணக்கில் தயாரித்தார். அதை திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகவும் வழங்கினார். அதன் சுவையிலும் மணத்திலும் மயங்கிய பக்தர்கள் தேவஸ்தானத்தை அணுகி லட்டு குறித்து வேண்டுகோள் விடுத்தனர்.
1940-ம் ஆண்டு முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்ய கல்யாண உற்சவம் தொடங்கியதால், கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மட்டும் பூந்திக்குப் பதிலாக லட்டு பிரசாதமானது. 1943-ம் ஆண்டு முதல் திருப்பதிக்கு வரும் எல்லா பக்தர்களுக்கும் சனிக்கிழமை மட்டும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு லட்டு பிரசாதம் விலைக்கும் விற்கப்பட்டது. எட்டு அணாவுக்கு ஒரு லட்டு என்று விற்கத் தொடங்கிய லட்டு இன்று விலையும் உயர்ந்துவிட்டது, அளவும் குறைந்து விட்டது என்றாலும் சுவையும் மணமும் மாறாமல் திருமலையான் அருள் போலவே பக்தர்களை சொக்க வைக்கிறது என்றால் அது மிகை இல்லை.
1996-ம் ஆண்டு வரை இந்த லட்டுக்களைத் தயாரித்துக் கொடுத்தவர்கள் திருமலை கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். அதன்பிறகு தேவஸ்தானமே தயாரிக்கத் தொடங்கிவிட்டது. 51 பொருள்கள் கொண்டு சுத்தமாகத் தயாரிக்கப்படும் இந்த லட்டு பிரசாதம் வேறெங்குமே கிடைக்காத சுவையைக் கொண்டது. நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லட்டுகளைக் கூட தயாரிக்கும் அளவுக்கு இன்று வெகு நவீனமாக திருப்பதி லட்டு தயாரிக்கும் கூடம் உருவாகிவிட்டது. 200க்கும் அதிகமான ஊழியர்கள் லட்டுகளை எந்திரங்களின் உதவியோடு தயாரித்து வருகிறார்கள்.
எல்லாம் மாறிவிட்டது, ஆனால் மகனின் பிரசாதங்களை மேற்பார்வை இடும் வகுளா தேவியின் திருப்பார்வை மட்டும் மாறவில்லை. அதனால்தான் திருப்பதி பிரசாதங்கள் யாவுமே சுவையும் மணமும் கொஞ்சம் தூக்கலாக மாறிவிடுகின்றனவோ என்னவோ!
source https://www.vikatan.com/spiritual/gods/the-history-of-tirupati-tirumala-venkatachalapathy-srivari-laddu-prasadham
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக