மற்ற ரியாலிட்டி ஷோக்களில் உள்ள அசட்டுத்தனமான சென்டிமென்ட் அழுகாட்சி காட்சிகள், மாஸ்டர் செஃப் தமிழில் பொதுவாக இருக்காது. ஆனால் விதிவிலக்காக இந்த எபிசோடில் அப்படியொரு நாஸ்டால்ஜியா வாசனை. போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அளவில் நெருக்கமாக அறிந்து கொள்ள இந்த எபிசோட் உதவியது.
கடந்த வாரத்தில் சுமித்ரா எலிமினேட் ஆனதன் காரணமாக டாப் 5 போட்டியாளர்கள் அரங்கத்தில் நுழைந்தபோது எவருமே இல்லை. மாறாக இதுவரையான எபிசோடுகளின் காட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் நேர்த்தியாக மாட்டப்பட்டிருந்தன. 'ஹை... இங்கே பாரேன்...' என்று பழைய தருணங்களை சிரிப்புடன் போட்டியாளர்கள் நினைவுகூர்ந்தார்கள். இன்னொரு போர்டில் இதே மாதிரியான புகைப்படங்கள், காமெடியான வரிகளுடன் இருந்தன. போட்டியாளர்கள், ஒவ்வொன்றையும் பார்த்து வாய்விட்டு சிரித்தார்கள்.
இதற்குப் பக்கத்தில் பரிசுப்பெட்டிகள் நிறைந்திருக்க, அதன் நடுநாயமாக செஃப் அணியும் வெள்ளை கோட் கம்பீரமாக மாட்டப் பட்டிருந்தது. இதெல்லாம் என்னவாக இருக்கும் என்று இவர்கள் யோசித்துக் கொண்டிருந்த போது Pantry வழியாக விஜய்சேதுபதியும் நீதிபதிகளும் வந்தார்கள். விசே அணிந்த கோட், சூட்டும் அதன் நிறமும் நன்றாக இருந்தது. "நாங்க ஏன் Pantry வழியா வந்தோம்னு தெரியுமா?" என்று பீடிகையாக ஆரம்பித்தார் விசே. சாப்பிடும் லட்டுவில் கூட ட்விஸ்ட் வைத்த மாஸ்டர் செஃபில் என்னவெல்லாம் அலப்பறை செய்வார்கள் என்று தெரியாது என்பதால் போட்டியாளர்கள் அமைதி காக்க! "காரணம் எனக்கும் தெரியாது. சும்மா வித்தியாசமா இந்தப் பக்கம் வந்தோம்" என்று மொக்கை போட்டார் விசே.
"இருங்க நானும் போட்டோவையெல்லாம் பார்த்துட்டு வரேன்" என்று சென்ற விசே, ஒவ்வொரு புகைப்படத்தையும் நிதானமாகப் பார்த்துவிட்டு "மாஸ்டர் செஃப் ஆரம்பிச்சு கொஞ்ச காலம்தான் ஆகப் போவுது. ஆனா பல இனிமையான நினைவுகள் இருக்குல்ல. என் கெட்டப்பை பார்த்தா வயசானவன், இளமையா மாறிட்ட மாதிரி ரிவர்ஸ்ல இருக்கு" என்று சிரித்தார்.
"இன்னிக்கு போட்டி என்னன்னா. நாம தினமும் சாப்பிடற, நமக்குப் பிடிச்ச உணவையே வித்தியாசமா செய்யணும்" என்று ஆரம்பித்த நீதிபதிகள், "அதுக்கு முன்னாடி உங்களுக்கான பரிசுப் பொருள்கள் இருக்கு. எடுத்துட்டு வாங்க" என்றார்கள். ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு விடுகதை இருந்தது. அதற்கு விடை கண்டுபிடித்தால் அதே அரங்கின் வெவ்வேறு இடங்களில் உள்ள பெரிய பெட்டிகள் கிடைக்கும். அதை ஆவலுடன் எடுத்து வந்த போட்டியாளர்கள் "உள்ளே வெயிட்டா பரிசு இருக்கும் போல" என்று நினைத்தார்கள். உள்ளே என்னதான் இருக்கும் என்பதைப் பார்க்க மிக ஆவலாக இருந்தார்கள்.
ஆனால் அவர்களுக்குக் காத்திருந்தது வித்தியாசமான அனுபவம். ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினர் எழுதிய கடிதங்கள், பழைய புகைப்படங்கள், நினைவுச்சின்னங்கள் போன்றவை பெட்டிக்குள் இருந்தன. இதை எதிர்பார்க்காத ஒவ்வொரு போட்டியாளரும் நாஸ்டால்ஜியாவில் மூழ்கி நெகிழத் துவங்கினார்கள். வி்ன்னியால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. குழந்தைபோல குலுங்கி குலுங்கி அழத் துவங்கினார். 'எங்ககிட்ட சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம்' என்பது போல் நித்யாவும் அழ ஆரம்பித்தார். 'தாங்களும் அழுவதா. வேண்டாமா...' என்பது போலவே இதர போட்டியாளர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
"நான் சின்ன வயசுல வித்தியாசமா ஒரு லாக்கெட் போட்டிருந்தேன். அப்புறம் பெரிசா ஆனப்புறம் அதே மாதிரி தேடினேன். எங்கயும் கிடைக்கலை. அதை எப்படியோ தேடிப் பிடிச்சு வாங்கி என் தம்பி அனுப்பியிருக்கான்" என்று உணர்ச்சிவசப்பட்டார் வின்னி. தூர்தர்ஷன் காலத்தில் சஞ்சீவ்கபூர் சொன்ன சமையல் குறிப்புகளையெல்லாம் எழுதி வைத்திருந்த பழுப்பு நிறத்தில் இருந்த ஒரு பழைய புத்தகம் நித்யாவின் பெட்டியில் இருந்தது. தனக்கு ஆதரவாக இருந்த ஒரு நண்பரின் மரணத்தை நினைவுகூர்ந்த நித்யா கண்கலங்கினார்.
மணிகண்டனின் பெட்டியில் அவரது மகளின் அழகான புகைப்படங்கள் இருந்தன. தன் குடும்பப் புகைப்படத்தைப் பார்த்து மணி கண்கலங்கினார். "இதை எங்க அப்பா யார் கேட்டாலும் கொடுக்க மாட்டாரு. என் அப்பாகிட்ட நான் பேசியே 16 வருஷமாச்சு. வேலை செய்யற இடத்துல என்னைத் திட்டி அடிச்சிட்டாரு. அதுல இருந்து அவர்கூட பேசறதில்ல" என்ற மணிகண்டனிடம், "இப்போ நீங்களும் ஒரு அப்பா ஆயிட்டிங்க இல்லையா... அப்படின்னா அவர் ஏன் திட்டினாருன்னு உங்களுக்கு இப்போ புரியும். இனியாவது போய் பேசுங்க" என்று அன்பு கலந்த உபதேசம் செய்தார் விசே.
தனது இந்த மாஸ்டர்செஃப் பயணத்திற்கு மனைவியின் தியாகமும் அன்பும் எவ்வாறெல்லாம் பின்னணியில் இருந்தது என்பதை மணி விவரிக்கும் போது கேட்கவே மிக நெகிழ்வாக இருந்தது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த செஃப் ஆர்த்தி கலங்கிவிட்டார்.
"எனக்கு பிள்ளைங்க கூட ரெண்டாம் பட்சம்தான். என் 'அத்தான்'தான் ரொம்ப முக்கியம்" என்று தன் கணவரின் மீதுள்ள காதலை வெட்கத்துடன் விவரித்தார் கிருத்திகா. 16 வயதில் இருந்தே காதலாம். டிரங்க்கால் காலத்தில் போனுக்கு அதிகம் செலவாகுமே என்கிற பதற்றத்துடன் வளர்ந்த தங்களின் காதலை அவர் விவரித்தது சுவாரஸ்யமாக இருந்ததோடு சிரிக்கவும் வைத்தது. அந்தச் சமயத்தில் கணவர் அன்பளிப்பாக தந்த ரூ.250/- நோட்டுக்களை கிருத்திகா இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறார். இதைக் கேட்டவுடன் ஆச்சர்யமடைந்த விசே, நெருங்கி வந்து அந்த ரூபாய் நோட்டுக்களைப் பார்த்தார்.
தேவகியின் கணவர் எழுதியிருந்த கடிதம் ரகளையாக இருந்தது. ஆசாமி மகா குறும்புக்காரர் போல. "நீ மாஸ்டர் செஃப்புக்கு கிளம்பறதுக்கு முன்னாடி வரைக்கும் ஜாலியா இருந்தோம். நீ கிளம்பிய பிறகு ரொம்பவும் ஜாலியா இருக்கோம்" என்று மனைவியின் காலை வாரியிருந்தார். "செஃப் ஹரீஷ், அந்நியன் ரெமோ மாதிரி இருக்கிறாராம். ஆண்கள் கோலோசசும் துறையில் ஆர்த்தி US-ல் பணிபுரிவதைக் கேட்க பெருமையாக இருக்கிறதாம். செஃப் கெளஷிக், ரிப்போர்ட் கார்ட் தரும் வாத்தியார் மாதிரியே இருக்கிறாராம்..." இப்படிக் குறும்பான வார்த்தைகளால் நிறைந்திருந்தது தேவகிக்கு எழுதப்பட்ட கடிதம்.
"ஓகே. இன்னிக்கான போட்டிக்குள்ள போகலாம். உங்களின் தனிப்பட்ட ஞாபகங்களைக் கிளறுவது போன்ற உணவை நீங்க இன்னிக்கு சமைக்கணும். அதற்கான நேரம் 60 நிமிடம். Pantry திறந்தே இருக்கும்" என்று பல செளகரியமான அம்சங்களை நீதிபதிகள் தெரிவித்தார்கள். முதல் கட்ட போட்டியில் டாப் 1-ல் வருபவர், வெள்ளை செஃப் கோட் அணிந்து இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதியாவார். (1st Finalist).
"உங்களின் குடும்பத்திற்குப் பிடித்த நாஸ்டால்ஜியா உணவை சமைங்க" என்று ப்ரீயாகத் திறந்துவிட்டவுடன் போட்டியாளர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி உற்சாகமாக களத்தில் இறங்கினாார்கள். தேவகி 'சம்பல்' என்னும் உணவு வகைக்கு முயன்று கொண்டிருக்க, கோலா உருண்டைக்காக போராடிக் கொண்டிருந்தார் நித்யா. சில்லி சிக்கன் + பாஸ்தாவிற்காக சுழன்று கொண்டிருந்தார் கிருத்திகா. தன் பாட்டியின் நினைவாக சிரோட்டி என்னும் இனிப்பையும் பாதாம் மில்க்கையும் தயார் செய்து கொண்டிருந்தார் வின்னி. தன் குழந்தைக்கு பிடித்தது சிக்கன் என்பதால் சிக்கனில் மீன் வடிவத்தை மணிகண்டன் உருவாக்கிக் கொண்டிருந்தது பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.
"சீக்கிரம் கொண்டு வாங்க. வாசனைத் தூக்குது. பசியெடுக்குது" என்று நீதிபதிகள் சொன்னவுடன் ஒவ்வொருவாக தங்களின் உணவுகளைக் கொண்டு வரத் துவங்கினார்கள்.
முதலில் வந்த தேவகி கொண்டு வந்த உணவின் தலைப்பு 'என்னுடைய நினைவுகள்'. சுயசரிதை நூலின் தலைப்பு மாதிரியாக இருந்த மெனுவில் தேவகி தயார் செய்திருந்த உணவுகள், சம்பல், கிழங்கு, பழைய சோறு, வாழைப்பூ வடை போன்ற அயிட்டங்கள். "பழைய சோறை எப்படி தயார் செய்ய முடியும்?" என்று ஆச்சர்யமாக விசே கேட்க அதற்கான வழிமுறையைச் சொன்னார் தேவகி. "ஒருத்தர் எவ்வளவு வேணா பணம் வெச்சிருக்கலாம். ஆனா அவன் ஹோட்டலுக்குப் போய் டக்குன்னு வாங்க முடியாத உணவு 'பழைய சோறுதான்' என்று பாலசந்தர் படத்தில் வசனம் பேசுவார் நாகேஷ். ஆனால் தேவகி இந்த சென்டிமென்ட்டை முறியடித்துவிட்டார். சோற்றை வடித்து அதில் லெமன் கலந்து சில வழிமுறைகளைச் செய்தால் பழைய சோறு ரெடியாம்.
Also Read: மாஸ்டர் செஃப்: ஓஹோ... தோனிக்குப் பிடிச்ச ஸ்வீட் இதானா? எலிமினேட்டான சுமித்ரா செய்த தவறு என்ன?!
தேவகி தயாரித்திருந்த உணவை ருசித்த செஃப் ஹரீஷ் "சின்ன வயசுல பழைய சோறு + வெங்காயம் சாப்பிட்ட ஃபீல் வருது" என்று பாராட்டினார். "வடைல கொஞ்சம் உப்பு கம்மி. புத்தா பவுல்ல நீங்க தந்த உணவு சூப்பர். ஊறுகாய் மட்டும் கூட வெச்சிருந்தா ஓஹோன்னு இருந்திருக்கும்" என்று பாராட்டினார் ஆர்த்தி. "நெஜம்மாவே பழைய சோறு சாப்பிட்ட ஃபீல் வருது" என்பது விசேவின் கமெண்ட்.
அடுத்து வந்த கிருத்திகா கொண்டு வந்த உணவு 'சில்லி சிக்கன் என் ஸ்டைல்'. பாஸ்தா செய்ய முடியாததால் கூட ரைஸ் வைத்திருந்தார். "நல்ல காரமா இருந்தது. ரைஸை வதக்கியிருந்தா நல்லா இருந்திருக்கும்" என்றார் கெளஷிக். "சில்லி சிக்கன் கோட்டிங் மிஸ் ஆகுது. சாதத்தோட சேர்த்து சாப்பிடுங்கன்னு யாரையும் நாம வற்புறுத்த முடியாது. தனித்தனியா சாப்பிட்டாலும் நல்லா இருக்கணும்" என்று டிப்ஸ் கொடுத்தார் ஆர்த்தி. "சின்ன வயசுல என்கிட்ட பணம் இருக்காது. 50ரூ சம்பாதிச்சு சில்லி சிக்கன் + ப்ரைட் ரைஸ் சாப்பிட்ட காலமெல்லாம் ஞாபகத்துக்கு வருது" என்று பரவசப்பட்டார் ஹரீஷ்.
நாஸ்டால்ஜியா நினைவுகளுக்காக இன்று நீண்ட நேரம் செலவிடப்பட்டதால் மீதமுள்ள இருவரின் உணவுகள் அடுத்த எபிசோடில் ருசிக்கப்படும். அதன் பிறகுதான் முடிவுகள் தெரியும். செஃப் கோட்டை வெல்லப் போகும் அந்த திறமைசாலி யார்?
காத்திருந்து சுவைப்போம்.
source https://cinema.vikatan.com/television/master-chef-episode-23-contestants-indulge-in-nostalgia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக