கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நகர்ப் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த செல்வகணபதி என்பவர் தனது கடையின் ஒரு பகுதியில் பட்டாசுக் கடை நடத்தி வந்தார். கடையின் மேல் தளத்தில் உள்ள அறையைப் பட்டாசுகள் வகைகள் வைக்கப் பயன்படுத்தி வந்தார்.
நேற்று மாலை, வழக்கம்போல் பட்டாசுக் கடையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, மாலை சுமார் 6.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அக்கடையிலுள்ள பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுக் கடை தீப்பிடித்து எரிந்தது. பயங்கர சத்தத்துடன் நடந்த இந்தத் தீ விபத்தைக் கண்ட மக்கள் சிதறி ஓடினர். பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து அசுரவேகத்தில் அருகிலிருந்த பேக்கரி கடைக்கும் பரவியது. தீபாவளி இனிப்புகள் செய்வதற்காக பேக்கரியில் வாங்கி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தீயின் காரணமாக ஒவ்வொன்றாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
அதேபோல், பட்டாசுக் கடையின் சுவர் அருகிலிருந்த செல்போன் டவரும் கடையின் மீது விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாகத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பட்டாசுக் கடையில் பட்டாசுகளும், பேக்கரியில் இருந்த சிலிண்டர்களும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துக் கொண்டிருந்ததால், அவர்களால் உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் பட்டாசுக் கடையின் வெளியே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாசர் என்பவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை தற்போது 6-ஆக உயர்ந்திருக்கிறது.
அனைவரையும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்திருக்கியிருக்கும் இந்த வெடி விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/five-people-were-killed-in-a-firecracker-accident-at-a-shop
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக