Ad

செவ்வாய், 26 அக்டோபர், 2021

முல்லைப்பெரியாறு குறித்து பிருத்விராஜ் சமூக வலைதளங்களில் சர்ச்சை பதிவு; தாக்கம் என்ன?

தமிழ்நாடு - கேரளா எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை அமைந்திருக்கிறது. 155 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 15.5 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர்ப்பாசனத்துக்கு ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இது கேரளாவில் அமைந்திருந்தாலும், அணையின் பராமரிப்பை தமிழகப் பொதுப்பணித்துறை மேற்கொண்டுவருகிறது. இந்த அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்னை இருந்துவருகிறது.

முல்லைப்பெரியாறு அணை

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆனால், இது பழைய அணை என்பதால் 152 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கினால், அணை உடைந்து இடுக்கி உள்பட 5 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கும் என்பது கேரளா அரசின் அச்சமாக இருக்கிறது. இந்தப் பிரச்னையை முன்வைத்து கடந்த காலங்களில், இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றமும் சர்ச்சையும் பலமுறை எழுந்திருக்கிறது.

தற்போது கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. கேரளாவின் கோட்டயம் உள்ளிட்ட தென் மத்திய மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு முன்பு கனமழை பெய்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 40-க்கு மேற்பட்டோர் பலியாகினர். அதேபோல, முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதினார்.

பினராயி விஜயன்

அந்த கடிதத்தில், “முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.85 அடியாக உள்ளது. மழை மேலும் தீவிரமடைந்தால், அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்து விடும் என்று அஞ்சப்படுகிறது. எனவே, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக வைகை அணைக்கு திறந்துவிடுமாறு உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படித் திறந்துவிடும்போது, மதகுகளைத் திறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே அதுகுறித்து கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன்மூலம், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்” என்று பினராயி விஜயன் கூறினார்.

இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற பிரசாரம் சமூகவலைதளங்கள் மூலமாக கேரளாவில் தொடங்கியது. இந்த நிலையில், நடிகர் பிருத்விராஜ் அக்டோபர் 24-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழைமையான இந்த அணை ஒரு செயல்பாட்டுக் கட்டமைப்பாக இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, எது சரியோ அதைச் செய் வேண்டிய நேரம் இது” என்ற கருத்தைப் பதிவுசெய்தார்.

ஸ்டாலின்

பிருத்விராஜின் அந்த பதிவைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிரான பிரசாரத்தில் இணைந்தனர். #DecommissionMullaperiyarDam #SaveKerala என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. நடிகர் உன்னி முகுந்தன், எழுத்தாளரும் நடிகருமான முரளி கோபி உள்பட பிரபலங்கள் பலரும் இதுபோன்ற கருத்துகளைப் பதிவிட்டனர். நடிகர் பிருத்விராஜ் கருத்துக்கு எதிராகத் தமிழகத்திலிருந்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த சிலர், தேனியில் பிருத்விராஜ் உருவபொம்மையை எரித்தனர்.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கேரளாவில் மேற்கொள்ளப்படும் பிரசாரத்துக்கு எதிராக கேரள முதல்வரிடமிருந்தே கண்டனம் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் உறுப்பினர் எம்.எம்.மணி எழுப்பிய கேள்விக்கு பினராயி விஜயன் விரிவாக விளக்கம் அளித்தார். “முல்லைப்பெரியாறு அணை குறித்து சமூக வலைதளங்கள் மூலமாக பீதியைக் கிளப்புவோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

Also Read: சங் பரிவார் தூண்டுதலால்தான் சீமான் இப்படிப் பேசுகிறார்! - ‘சுளீர்’ கார்த்தி சிதம்பரம்

தற்போது முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அணை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அணை உடைந்தால் லட்சக்கணக்கானோர் உயிரிந்துவிடுவார்கள் என்றும் சமூகஊடகங்களில் சிலர் பிரசாரம் செய்கிறார்கள். அத்தகைய தவறான பிரசாரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு பிரச்னைகளில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்துவருகிறது. ஆனாலும், சில பிரச்னைகளில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது. தமிழகத்துடன் பேசி, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும்” என்றார் பினராயி விஜயன்.

இதற்கிடையில், ‘‘முல்லைப்பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு கன அடி நீரைத் தேக்க முடியும் என்பது குறித்து இரு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து, அங்குள்ள சூழலைக் கண்காணித்து அணைப் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு விரைந்து முடிவெடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

முல்லைப்பெரியாறு அணை 125 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம். ஆனால், முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இருப்பதை பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த அணையின் கட்டமைப்பு வலுவாக இருப்பதாக வல்லுநர் குழுக்கள் ஆய்வுசெய்து அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளன. அப்படியிருக்கும்போது, எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முல்லைப்பெரியாறு அணை குறித்து தொடர்ந்து வதந்தி பரப்பப்படுகிறது.

“உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும்....” முல்லைப்பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டும் என்று பிருத்விராஜ் சொல்வதன் நோக்கம் என்ன? முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சொகுசு விடுதிகளையும் பங்களாக்களையும் கட்டிவைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் சுயநலத்துக்காக அணை குறித்து வதந்திகளைக் கிளப்பிவிடுகிறார்கள் என்கிற கருத்தும் உண்டு.



source https://www.vikatan.com/government-and-politics/politics/actor-prithviraj-tweet-against-mullai-periyar-dam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக