சுந்தர் சென்னை வந்தது, காயத்ரி, புனிதாவுடன் ஆண்களும் தங்கி இருப்பதை கண்டுபிடித்தது, அதை காயத்ரியின் வீட்டில் சொல்லி விடுவதாக மிரட்டியது, அதன் பின்பு காயத்ரிக்கு தனி வீடு பார்த்து குடிவைத்தது, காயத்ரியை அலுவலகத்தில் ட்ராப் செய்தது என சென்ற வாரம் முழுக்க களேபரமாக இருந்தது. இவ்வளவுக்கு பிறகு காயத்ரி அலுவலகம் வந்து சிவாவை எப்படி எதிர்கொள்வாள் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கி முடிந்திருந்தது கடந்த வாரத்தின் கடைசி எபிசோட்.
சனி, ஞாயிறு இரு நாளும் நம்மைப் போலவே தவிப்பிலிருக்கும் சிவாவும், காயத்ரியும் திங்கள் அலுவலகம் வருகிறார்கள். சிவா டீமில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் அலுவலக விஷயங்களை பேசிக்கொண்டே வருகிறான். திரும்பிப் பார்க்காமல் சிவா வருவதை உணர்ந்து காயத்ரி புன்னகைத்துக் கொள்கிறாள். சிவாவை சந்திக்கப் போகும் சிறு குறுகுறுப்பு, மகிழ்ச்சி காயத்ரியின் முகத்தில் இருக்கிறது.
சிவா எல்லோரிடமும் பேசிவிட்டு காயத்ரியின் பின்னால் வந்து நின்று எதுவும் பேசாமல் சட்டென்று திரும்பிச் செல்கிறான். இவை அனைத்தையும் தனது இருக்கையில் இருந்து பாண்டியன் பார்த்துக்கொண்டிருக்கிறான். சிவா சோர்வாக தன் இருக்கைக்கு திரும்புகிறான். பாண்டியன் அதை பார்த்துவிட்டு ’எப்படி இருந்த மனுஷன்’ என்கிறான். அந்த ஒற்றை வரி, சிவா முன்பு சிங்கமாக அலுவலகத்தில் காயத்ரியிடம் கர்ஜித்ததை நினைவூட்டுகிறது.
காதலிக்கும் பெண் பிரிந்து சென்றால், அல்லது வேறொருவருடன் நிச்சயமானால் ஆண்கள் நிலைகுலைந்து போவதை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். காயத்ரி ஊருக்கு சென்றதிலிருந்து, அவளுக்கு சுந்தர் உடன் நிச்சயமான விஷயம் புரிந்தது முதல் சிவா எப்போதும் சோகமாக இருக்கிறான். சிவா தன்னியல்பில் இல்லாமல் இருப்பதற்கு காயத்ரி மீதுள்ள காதல் மட்டும் காரணம் இல்லை. சிவா அதற்கு முன்பு பல காலம் தனிமையில் வாழ்ந்திருக்கின்றான். பெற்றோரின் அன்புக்காக ஏங்கி இருக்கிறான். தொடர்ந்து தனிமையில் இருந்த சிவாவுக்கு காயத்ரி அவனுக்காக சமைத்துக் கொடுத்தது, உடனிருந்து அக்கறையாக கவனித்துக் கொண்டது, மிகப்பெரும் துணையாக உணர்ந்திருக்கிறான். சிவாவுக்கு காயத்ரியின் மீது ஈர்ப்பு, காதல் எல்லாம் இருப்பதோடு அவள் தனக்கு நல்ல துணையாக இருப்பாள் என்கிற எண்ணம் இருக்கிறது.
அதை இழக்கும் பதற்றம்தான் சிவாவுக்கு காயத்ரி வீட்டை விட்டு சுந்தருடன் செல்லும்போது ஏற்பட்டது. சிவா தன் இருக்கைக்கு வந்து காயத்ரியை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறான். காயத்ரிக்கு சிவா தன்னிடம் பேசாமல் போனது வருத்தமளிக்கிறது. அவன் அறைக்குச் சென்று அவனிடம் பேசலாம் என்று எண்ணி, சிறிது தயங்கி, பின் சிவாவின் அறைக்கு வருகிறாள். காயத்ரியை பார்த்துவிட்ட சிவா, போனில் வராத அழைப்பில் பேசுவது போல் நடிக்கிறான். காயத்ரி தயங்கி வெளியிலேயே நின்றுவிட்டு திரும்பி செல்கிறாள். இருவருக்குமே இந்த பரிதவிப்பு இருக்கிறது. அதே சமயம் இருவருக்குமே காயத்ரிக்கும் சுந்தருக்கும் நிச்சயமான விஷயம் மனதில் இருப்பதை பேச விடாமல் தடுக்கிறது.
காயத்ரி மதிய உணவு சாப்பிடச் செல்கிறாள். சிவா அங்கு ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அவன் அருகில் வந்து காயத்ரி உட்கார்ந்ததும், சிவா எழுந்து போக தயாராகிறான். காயத்ரி அவனை அழைத்து, உட்கார்ந்து சாப்பிடச் சொல்கிறாள். ”என்னை பார்த்ததும் ஏன் எழுந்தீர்கள்” என்று காயத்ரி கேட்கிறாள். சிவா என்ன சொல்வது என்று தெரியாமல் உளறுகிறான்.
காயத்ரி தெளிவாக அவனிடம் வராத செல்போன் அழைப்பில் அரைமணி நேரம் பேசியது பற்றிக் கேட்கிறாள். இருவருக்குமே பதற்றம் இருந்தாலும் சில சமயங்களில் பெண்கள் சூழ்நிலை கருதி தெளிவாக முடிவு எடுத்து பேசுபவர்களாக இருக்கிறார்கள். ஆண்கள் இதுபோன்ற நேரங்களில் கோபம், வெறுப்பு, இயலாமையை வெளியே காட்டி விடுகிறார்கள். காயத்ரி சிவாவின் உணர்வை புரிந்து பொறுமையாக அவனை கையாளுகிறாள். காயத்ரி சிவாவுக்கு தன் மீது கோபம் இல்லை என்று தெரிந்தாலும் வேண்டுமென்றே சிவாவிடம், ”என் மீது கோபமா” என்று கேட்கிறாள். இது காலம் காலமாக மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசத் தயங்கும் ஆண்களை கொஞ்சம் இலகுவாக்க பெண்கள் பயன்படுத்தும் நுட்பம்!
”என் மீது கோபம் இல்லை என்றால் இதை சாப்பிடுங்கள்” என்று காயத்ரி தான் கொண்டுவந்த உணவை சிவாவுக்கு கொடுக்கிறாள். காலையில் சாம்பார் சாதம் சமைக்கும் போதே சிவாவை நினைத்ததாக காயத்ரி சொல்லும் பொழுது சிவா நிமிர்ந்து காயத்ரியை பார்க்கிறான். நன்றாக இருக்கிறதா என்று கேட்கும் காயத்ரியிடம், அவள் சமைக்கும் எல்லாமே நன்றாக இருக்கிறது என்று சிவா சொல்கிறான். காயத்ரிக்கு சுந்தர் தன் அம்மாவின் சமையலை பற்றி பேசியது நினைவுக்கு வருகிறது.
பலருக்கும் இங்கு காயத்ரி சுந்தருடன் நிச்சயம் செய்யப்பட்ட பெண், அவள் சிவாவிடம் பேசுவது தவறு என்கிற எண்ணம் இருக்கிறது. சுந்தருக்கும், காயத்ரிக்கும் நிச்சயிக்கப்பட்டது காதல் திருமணம் அல்ல. காதலுணர்வு யாருடன் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு இடம் கொடுக்காமல் ஒரு பெண் தன் குடும்பத்தினர் காட்டுபவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்வது பெண்ணடிமைத்தனம். அதேபோல் நிச்சயிக்கப்பட்டவர் மீது ‘உடனடியாக' காதல் வர, அது கடையில் வாங்கும் பொருள் அல்ல. காயத்ரி சுந்தர் மீதான காதலை வாங்கி பொருத்திக் கொள்ள முடியாது. காயத்ரிக்கு அவள் குடும்பத்தினர் காதலிப்பதற்கான ஸ்பேஸ் கொடுக்காதது பற்றி யாரும் பேசுவதில்லை. மாறாக சுந்தரை காயத்ரி ஏமாற்றுவது போல் சமூகம் புரிந்து கொள்கிறது.
காயத்ரி வேலை செய்ய காலக்கெடு நிர்ணயம் செய்தது, திருமணம் எல்லாமே அவள் மேல் திணிக்கப்பட்டதே தவிர அவளது சுதந்திரமான முடிவு அல்ல. குடும்பத்தினரால் காயத்ரி தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறாள். சுந்தரும் கூட காயத்ரியின் ஆசைகள், எண்ணம், சுதந்திரம் பற்றி கவலைப்படுவதில்லை. வலுக்கட்டாயமாக தன் காதலை திணித்து அவளிடம் இருந்தும் வழுக்கட்டாயமாக பிடுங்கப் பார்க்கிறான். அன்பில் இதெல்லாம் சாத்தியமே இல்லை.
காயத்ரி சுந்தருடன் சிவாவை ஒப்பீடு செய்து பார்ப்பது தவறுதான். காயத்ரி சிவாவுடன் சுந்தரை ஒப்பிட்டு நோக்குவது தவறு என்பதை போலவே, காயத்ரியின் சமையலை பற்றி பேசும்போது உடனே சுந்தர் தன் அம்மாவின் சமையலை ஒப்பீடு செய்து பேசியதும் தவறு. யாரும் யாரைப் போலவும் இருக்க முடியாது.
சிவா வாங்கி வைத்திருக்கும் உணவை எடுத்து காயத்ரி சாப்பிட ஆரம்பிக்கிறாள். பாண்டியன் அங்கு வருகிறான். வீட்டில் எல்லோரும் காயத்ரியை மிஸ் செய்வதாக பாண்டியன் சொல்கிறான். எல்லோரை விடவும் அதிகமாக காயத்ரியை சிவா மிஸ் பண்ணுவதாக பாண்டியன் கூறுகிறான். அதற்கு சிவா பெரிதாக மறுத்துப் பேசாமல் அமைதியாக இருக்கிறான். காயத்ரி கண்களாலேயே சிவாவிடம் அதெல்லாம் உண்மையா என்று கேட்கிறாள்.
பரத் தான் புதிதாக தொடங்கவிருக்கும் டான்ஸ் ஸ்டுடியோ உரிமையாளரை சந்திக்க புனிதாவை அழைக்கிறான். புனிதா தனக்கு வேலை இருப்பதாக சொல்லி வரமுடியாது என்கிறாள்.
பரத்துக்கு கோபம் இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு வருத்தமாக கிளம்பிச் செல்கிறான். புனிதாவின் டீம் லீடர் கிஷோர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று புனிதாவிடம் போனில் சொல்கிறான். அந்த ஊரில் தனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாததால் பயமாக இருப்பதாகவும் கூறுகிறான். புனிதாவை நேரில் வர முடியுமா என்று கிஷோர் கேட்க, புனிதா தனக்கு வேலை இருப்பதாக கூறுகிறாள். அந்த வேலையை பார்க்க தான் வேறு ஏற்பாடு செய்வதாகவும், புனிதாவை வருமாறும் கிஷோர் அழைக்கிறான். புனிதா மிகுந்த தயக்கத்திற்கு பிறகு சரி என்று ஒப்புக் கொள்கிறாள்.
ஏற்கெனவே பலமுறை பரத் அழைத்து புனிதா செல்லவில்லை. அவன் தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்றும் அவனது முடிவுகளை அவனே எடுத்து பழக வேண்டும் என்றும் தான் ஆரம்பித்தில் புனிதா அவனுடன் செல்லாமல் இருந்தாள். ஆனால் இப்பொழுது உண்மையாகவே வேலை இருப்பதால் புனிதா செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறாள். பரத்துடன் செல்லாமல் இப்பொழுது கிஷோர் அழைத்ததால் அவனது வீட்டிற்குச் செல்வது நிச்சயம் வெளியிலிருந்து பார்ப்பதற்கு தவறாக தெரியலாம். ஆனால் புனிதாவிற்கு உடனடியாக செய்ய வேண்டியிருந்த வேலையை கிஷோர் மாற்று ஏற்பாடு செய்வதாக சொன்னதால் தான் புனிதா கிளம்புகிறாள்.
புனிதாவை போன்று வேலையில் ஆர்வமும், முன்னேற வேண்டும் என்கிற சிந்தனையும் இருப்பவர்கள் இதுபோன்ற தவறான புரிதல்களில் சிக்கிக் கொள்வார்கள். புனிதா பரத்திடம் சொல்லியதும் உண்மைதான், கிஷோரிடம் பேசியதும் உண்மைதான். ஆனால் புனிதாவை கிஷோருடன் வைத்து பரத் சந்தேகப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம். இது போன்ற சூழ்நிலைகளை புரிந்து கொள்வதற்கு அதீத பொறுமையும், தன் மீதான நம்பிக்கையும் தேவை. பரத்தை போன்ற தாழ்வுணர்ச்சி இருப்பவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக நடக்கும் சம்பவங்களை வைத்து மட்டுமே பிரச்னைகளை உருவாக்கி தாங்களும் துன்பப்பட்டு சுற்றி இருப்பவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துவார்கள்.
இறுதியாக அறிமுகமாகும் அந்த புதுப்பெண் யார், பாண்டியனுக்கு இணையா?
காத்திருப்போம்!
source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinal-kaadhal-seiveer-digital-series-episode-46-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக