இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், மருத்துவத்துறை பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டார்கள் போன்ற ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. துவக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி மிக மந்தமாகவே நடைபெற்று வந்தது. தொடங்கிய முதல் 85 நாள்களில் வெறும் 10 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் அதிகரித்துக் காணப்பட்ட இரண்டாம் அலையின் தாக்கம் தடுப்பூசி செலுத்தும் பணியைக் கடுமையாகப் பாதித்தது. 20 கோடி டோஸ் என்ற அளவை அடையவே 130 நாள்கள் ஆனது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸின் பாதிப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்ற பல்வேறு தொடர் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய 203 நாள்களில் 50 கோடி டோஸ் செலுத்தப்பட்டிருந்தது.
மத்திய அரசியிடமிருந்து மாநில அரசுகளுக்குச் சரியாகத் தடுப்பூசிகள் தரப்படுவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் அதிகமாகவும், மற்ற மாநிலங்களுக்குக் குறைவாகவும் தடுப்பூசி தரப்படுகிறது என்பது தொடங்கி மத்திய அரசை நோக்கி பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்கள் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய அரசே நேரடியாக மாநில அரசின் தடுப்பூசி செயல்பாடுகளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களுக்குத் தடுப்பூசிகளைப் பிரித்து அனுப்பப்படும் என்று கூறியது.
பிரதமர் மோடி பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி மட்டும் 2.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. இதுவே உலகளவில் ஒருநாளில் அதிகமாகச் செலுத்தப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை. இந்தியாவில் தற்போது, நாளொன்றுக்குச் சராசரியாக 35 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கடந்த அக்டோபர் 21-ம் தேதி அன்று மொத்தம் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது. உலக சுகாதார நிறுவனம் முதல் பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சீனாவைப் பொறுத்தவரை 100 கோடி டோஸ் என்ற மைல்கல்லைக் கடந்த ஜூலை மாதமே கடந்திருந்தது. உலகளவில் இதுவரை சீனாவில் 223 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதில், 105 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 41 கோடி டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது. அடுத்ததாகப் பிரேசிலில் 26 கோடியும், ஜப்பானில் 18.3 கோடி டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் சீனாவைப் பொறுத்தவரை 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள்.
அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் தொகை என்பது குறைவு தான். அந்த நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தியாவின் தடுப்பூசி செயல்பாடுகள் வேகமாக உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதோடு, மத்திய அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதைச் சாத்தியமாக்க நாளொன்றுக்கு 1 கோடி பேருக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்று மருத்துவச் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இந்தியாவில் தடுப்பூசி நிலை என்ன
இந்தாண்டு, அக்டோபர் மாதம் 22- ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 100.99 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தியவர்கள் 71.24 கோடி பேர். இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியவர்கள் 29.65 கோடி பேர். இந்தியாவில் உள்ள மாநிலங்களவை அதிகம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் (12.32 கோடி), மகாராஷ்டிரா (9.39 கோடி), மேற்கு வங்கம் (6.94 கோடி), குஜராத் (6.80 கோடி), மத்தியப்பிரதேசம் (6.78 கோடி), பீகார் (6.39 கோடி), கர்நாடகா (6.21 கோடி), ராஜஸ்தான் (6.11 கோடி), தமிழ்நாடு (5.43 கோடி), ஆந்திரப்பிரதேசம் (4.90 கோடி).
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் ஆண்கள் - 52,11,77,747, பெண்கள் - 48,43,63,238. வயது வாரியாக பார்த்தால் 18-44 வயதுடையவர்களில் 56,22,59,350 பேரும், 45-60 வயதுடையவர்களில் 27,18,88,740 பேரும், 60-க்கு மேல் வயதுடையவர்களில் 17,16,18,445 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
தமிழகத்தின் நிலைமை என்ன?
தமிழகத்தில் இதுவரை 5.43 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கின்றனர். இதில், முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தியவர்கள் 3.97 கோடி பேர். இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தியவர்கள் 1.46 கோடி பேர். இந்தியளவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தடுப்பூசி செயல்பாட்டில், சென்னை (68,62,483), கோவை (37,18,775), திருப்பூர் (21,28,244) ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடத்திலும். பெரம்பலூர் (4,24,806), ராமநாதபுரம் (4,25,915), பரமக்குடி (4,41,542) போன்ற மாவட்டங்கள் கடைசி மூன்று இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் 2,66,05,607 ஆண்களும், 2,77,70,802 பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கின்றனர். வயது வாரியாக பார்த்தால் 18-44 வயதுடையவர்களில் - 3,07,86,949 பேரும், 45-60 வயதுடையவர்களில் 1,49,11,474 பேரும், 60-க்கு மேல் வயதுடையவர்களில் 86,87,970 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
100 கோடி டோஸ் தடுப்பூசியைக் கடந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், ``புதிய இந்தியாவின் பிரதிபலிப்புதான் 100 கோடி கொரோனா தடுப்பூசி சாதனை. இது, புதிய இந்தியாவின் விடா முயற்சிக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி. உலகளவில் கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்தப்படும்போது, இந்தியா குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. பெரும் மக்கள்தொகை கொண்ட இந்தியா எப்படி தடுப்பூசியைப் பெறும், எப்படி தடுப்பூசி செலுத்தும் என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் எழுந்தன. அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில்தான் இந்த 100 கோடி தடுப்பூசி சாதனை. நாட்டு மக்களின் ஒத்துழைப்பால்தான் இந்த மைல்கல் சாதனை சாத்தியமாகியிருக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோருக்குத் தான் இந்த புகழ் சேர வேண்டும். இவ்வளவு பெரிய மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதின் மூலம், அவர்கள் யாரை விடவும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இந்தத் தடுப்பூசி திட்டத்தில், விஐபி கலாச்சாரத்துக்கு நாம் இடம் கொடுக்கவில்லை. அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறோம். கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசியைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். கோவின் இணையதளம் மக்களிடம் தடுப்பூசித் திட்டத்தைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறது. நமது தடுப்பூசி இயக்கம் டீம் இந்தியாவின் வலிமையை மீண்டும் காட்டியது" என்று பிரதமர் கூறினார்.
Also Read: `` வயதானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது அவசியம்" -மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
புனே மற்றும் ஐதராபாத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் உள்ள சிறு கிராமங்கள் தொடங்கி சாலைகளே இல்லாத மலைவாழ் பகுதிகள் வரை கொண்டு சேர்த்திருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இடுப்பளவு தண்ணீரில் இறங்கிச் சென்று தடுப்பூசி செலுத்திய மருத்துவர், செவிலியர் தொடங்கி சுகாதாரத்துறையினர் வரை, தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய, அதை மக்களுக்குக் கொண்டு சேர்க்க உடன்நின்ற அனைவரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-100-crore-corona-vaccine-provided-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக