Ad

திங்கள், 4 அக்டோபர், 2021

உ.பி: விவசாயிகள்மீது மோதிய கார்; கலவரத்தில் 9 பேர் பலி - பாஜக அமைச்சர் மகன்மேல் வழக்கு பதிவு!

மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், "டெல்லியில் நடைபெறும் விவசாயிகள், போராட்டத்தை அவர்களாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அப்படி முடிக்காவிட்டால் நான் 2 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வருவேன்” என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோவும் வெளியானது. இதற்கு உத்தரப்பிரதேசத்தில் அவரது சொந்த தொகுதியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

உத்தரப்பிரதேசம்: அஜய் குமார் மிஸ்ரா

நேற்று, உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத், மத்திய இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, ஆகியோர் லகிம்பூர் பகுதிக்கு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வர இருப்பதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. துணை முதல்வரின் வருகைக்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேசவ் பிரசாத் ஹெலிகாப்டரில் லஹிம்பூர் வருவதாக இருந்தது. எனவே நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஹெலிகாப்டர் தரையிறங்க திட்டமிடப்பட்ட மைதானத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், ஹெலிகாப்டரில் வரும் திட்டத்தை கைவிட்ட கேசவ் பிரசாத் சாலை மார்க்கமாக வந்தார்.

துணை முதல்வரின் வருகைக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்து சாலையில் கூடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மத்திய இணை அமைச்சர் அஜய் குமாரின் கான்வாயில் வந்த 2 கார்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மோதியது. இதில் நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல விவசாயிகள் காயம் அடைந்தனர்.

அந்தக் கார், அமைச்சர் அஜய் குமாரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த விவசாயிகள், காருக்கு தீவைத்து எரித்தனர். அதோடு விடாமல் பாஜக பிரமுகர்களை பிடித்து சரமாறியாக அடித்து உதைத்தனர். இதில் பாஜக பிரமுகர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயம் அடைந்தனர். கலவரம் நடந்த பகுதியில் அதிக அளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். கலவரத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதை மாநில டிஜிபி முகுல் கோயல் உறுதிபடுத்தினார். போராட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களில் பலர் காயம் அடைந்தனர். அவ்வாறு காயம் அடைந்த பத்திரிக்கையாளர் ஒருவரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். மொத்தம் இந்த கலவரத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

லகிம்பூர் பலியான விவசாயிகள்

ஆனால் விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் தனது மகனுக்கு தொடர்பு இல்லை என்று மத்திய அமைச்சர் அஜய் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்திருந்த பேட்டியில், “போராட்டம் நடந்த இடத்தில் எனது மகன் நின்றிருந்தால் அவனை விவசாயிகள் அடித்துக் கொன்றிருப்பார்கள். நானும், எனது மகனும் துணை முதல்வரின் நிகழ்ச்சி நடக்க இருந்த இடத்தில் இருந்தோம்.” என்கிறார்.

Also Read: உத்தரபிரதேசத்தில் போராட்டம்; வன்முறை – 8 விவசாயிகள் உயிரிழப்பு; காங்கிரஸ், சமாஜ்வாதி கடும் கண்டனம்

இந்த கலவரத்தால் துணை முதல்வரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கலவரம் ஏற்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கலவரம் பாதித்த பகுதிக்குள் செல்ல காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி திட்டமிட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவே டெல்லியில் இருந்து லக்னோ வந்தார். அங்கிருந்து காலையில்தான் கலவரம் நடந்த பகுதிக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் போலீஸார் கைது செய்துவிடுவார்கள் என்று கருதி நள்ளிரவில் காரில் கலவர பகுதிக்கு பிரியங்கா புறப்பட்டார். அவரை போலீஸார் மாவட்ட எல்லையில் மடக்கினர். அவர்களுடன் பிரியங்கா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் அவரை கைது செய்தனர். இதே போன்று முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும் கலவரம் நடந்த பகுதிக்கு செல்ல முயன்ற போது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். உத்தரப்பிரதேசம் பதற்ற நிலையில் தகித்துக்கொண்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/news/up-farmers-killed-as-car-rammed-9-killed-minister-ajay-kumar-misra-son-ashish-misra-booked

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக