Ad

திங்கள், 4 அக்டோபர், 2021

`ரிஸ்க் ஓகே; லாபம்தான் முக்கியம்' என நினைப்பவரா? ஸ்மால் கேப் பங்குகள் உங்களுக்குத்தான்! - 27

ஒரு வளர்ந்த மனிதன் எவ்வளவு முயன்றாலும் இன்னுமொரு மடங்கு வளர்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அந்தச் சாதனையை நான்கு மாதக் குழந்தை நிகழ்த்துகிறது. பிறந்து நான்கு முதல் ஆறு மாதங்களில் அது இரண்டு மடங்காக வளர்கிறது. ஸ்மால் கேப் கம்பெனிகளின் சாதனையும் இதுபோல்தான். லார்ஜ் கேப் கம்பெனிகளில் காணமுடியாத ஏற்றம் ஸ்மால் கேப்ஸில் கிடைக்கிறது.

Investment (Representational Image)

Also Read: பங்குச்சந்தையில் ஜெயிக்க இது ரொம்பவே முக்கியம்; `டெக்னிக்கல் அனலிசிஸ்' என்னும் வழிகாட்டி - 24

2020 செப்டம்பர் மாதம் பங்குச் சந்தைக்குள் வந்த ஹேப்பியெஸ்ட் மைண்ட்ஸ் பங்கு கடந்த ஏழே மாதங்களில் 307.42% வளர்ச்சி கண்டுள்ளது. இதேபோல் பாலாஜி அமைன்ஸ், தீபக் ஃபெர்டிலைசர்ஸ் போன்ற ஸ்மால் கேப் கம்பெனி பங்குகளும் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து மல்டிபேகர் கம்பெனிகள் என்று பெயர் பெற்றுள்ளன. மார்கெட் கேப்பிடலைசேஷன் லிஸ்ட்டில் 250-வது ரேங்குக்கு கீழே உள்ள கம்பெனிகள் ஸ்மால் கேப்ஸ் எனப்படுகின்றன. இந்தியக் கம்பெனிகளில் 95 சதவிகிதம் ஸ்மால் கேப்ஸ் கம்பெனிகள்தான். அவற்றின் அம்சங்களைப் பார்ப்போம்.

மேலே கூறியபடி, மல்டிபேகராக மாறி நம் முதலீட்டை இரண்டு மடங்கு, நான்கு மடங்கு என்று அதிகரிப்பவை அநேகமாக ஸ்மால் கேப் பங்குகள்தான்.

எப்போதுமே ரிட்டர்னும் ரிஸ்க்கும் ஒன்றாகவே பயணிக்கக் கூடியவை. அதிக ரிட்டர்ன் தரும் ஸ்மால் கேப்ஸ் அதிக ரிஸ்க்கியாகவும் இருப்பதில் ஆச்சர்யமில்லை. இவற்றின் விலை சந்தையின் பாதையைச் சார்ந்தது. சந்தை உயரும்போது உச்சியைத் தொடுவதும் இவைதான்; சந்தை விழும்போது பாதாளத்துக்குச் செல்வதும் இவைதான்.

பொருளாதார உயர்வின்போது அதிகம் உயரும் இவற்றின் விலை, பொருளாதாரச் சரிவின்போது குறைவது மட்டுமல்லாது, மீண்டும் எழவும் அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன. சில ஸ்மால் கேப் கம்பெனிகள் காணாமலே போய்விடும் ஆபத்தும் உண்டு.

ஸ்மால் கேப் கம்பெனிகளின் விலை ஆரம்பத்தில் சிறு முதலீட்டாளர்களும் எட்டிப் பிடிக்கக்கூடிய அளவில் இருக்கும். உதாரணமாக, இன்று ஒரு பங்கின் விலை ரூ. 3,437 என்று உயர்ந்துவிட்ட பாலாஜி அமைன்ஸ் ஆறு மாதங்களுக்கு முன்னே ரூ.938-க்கு வர்த்தகமாகியது.

Stock Market (Representational Image)

Also Read: முதலீட்டிற்கு பங்கம் விளைவிக்காத லார்ஜ்கேப் பங்குகள்; என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா? - 25

மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் தங்கள் ஆராய்ச்சியில் நல்ல கம்பெனிகளைக் கண்டறிய முடிந்தாலும், ஸ்மால் கேப் கம்பெனிகளில் முதலீடு செய்ய பல விதிமுறைகள் உள்ளதால், உடனே இவற்றில் இறங்க முடியாது. அதனால் சிறு முதலீட்டாளர்கள் விலை ஏறும் முன் வாங்க முடிகிறது.

விலை ஏற்றத்தை சரியாகக் கணித்து வாங்கினால், குறுகிய கால வர்த்தகம் / நீண்ட கால முதலீடு என்ற இரு விதங்களிலும் அதிக லாபம் தரக்கூடியவை.

இந்த ஸ்மால் கேப் கம்பெனிகளுக்கும் ஒரு மறுபக்கம் இல்லாமல் இல்லை. மார்கெட் ரிஸ்க் எனப்படும் சந்தையின் ஏற்ற இறக்கம் இவற்றை அதிகம் பாதிக்கும் என்று பார்த்தோம். சந்தை வீழ்ச்சியின்போது இந்த ஸ்மால் கேப் பங்குகளை வாங்க ஆளே இருக்காது. பல சமயங்களில் நஷ்டத்தில் விற்று வெளியேற வேண்டியிருக்கும்.

மேலும், இவை பற்றிய தகவல்கள் எளிதில் கிடைப்பதில்லை. அதனால் வெளிப்படைத் தன்மை குறைகிறது. ரிஸ்க்கை விரும்பாதவர்களும், சிறிய சரிவைக்கூட பொறுக்க இயலாதவர்களும் ஸ்மால் கேப் கம்பெனிகளிடமிருந்து தள்ளி இருப்பது நல்லது.

ஆனால், ஸ்கேம் 92 வெப்சீரீஸ் டயலாக் மாதிரி ``ரிஸ்க் ஹை தோ இஷ்க் ஹை”... நம்ம வடிவேலு பாஷையில், ``ரிஸ்க்குன்னா எனக்கு ரஸ்க் மாதிரி" என்று எண்ணுபவர்களுக்கும், ``சந்தையில் இறங்கிய பின் ரிஸ்காவது, வெண்டைக்காயாவது; வரட்டும், ஒரு கை பார்க்கலாம்” என்று துணிபவர்களுக்கும் ஸ்மால் கேப் கம்பெனிகள் ஏற்றவை.

Also Read: லார்ஜ் கேப்பை விட லாபம் தரும் மிட்கேப் பங்குகள்; முதலீடு செய்யும் முன் இதையும் தெரிஞ்சுக்கோங்க!- 26

முதலீட்டு முடிவை எடுக்கத் தேவையான தகவல்கள் போதுமான அளவு கிடைப்பதில்லையே என்று தயங்குபவர்கள் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்த்து ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

- அடுத்து புதன்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.



source https://www.vikatan.com/business/finance/things-you-should-know-before-investing-in-small-cap-shares

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக