Ad

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

மாற்றத்தை விதைக்கும் `மகாலட்சுமி டீச்சர்’ | இவர்கள் | பகுதி - 6

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! - ஆசிரியர்

”உங்களுக்கு எங்களின் பெயர்கள் நினைவிருக்காது, எங்களை நீங்கள்தான் பெயிலாக்கினீர்கள். நாங்கள் உங்களையும் பிற ஆசிரியர்களையும் நீங்கள் பெயிலாக்கியவர்களையும் அந்தப் பள்ளியையும் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. நீங்களோ எங்களை பெயிலாக்கி தொழிற்சாலைகளுக்கும், வயல்வெளிகளுக்கும் அனுப்பிவிட்டு மறந்து போனீர்களே, மிஸ்.”

‘எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?’ என்னும் நூல் இப்படித்தான் துவங்குகிறது. இத்தாலியின் பார்பியானா என்ற மலைப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் தங்களது முன்னாள் ஆசிரியர்களுக்கு எழுதின முப்பத்தைந்து பக்கம் கொண்ட அந்தக் கடிதம் இத்தாலிய அரசாங்கத்தை மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமிருக்கும் சமூக ஆர்வலர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

நம் கல்வி எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்கிறதா என்ற கேள்வியோடு நம் கல்வி வாழ்க்கைக்கானதாய் இருக்கிறதா என்கிற சந்தேகத்தையும் நாம் கேட்டுக் கொள்ளவேண்டும். நன்றாக படிக்கக்கூடிய மாணவராயிருந்தும் குடும்பச் சூழல் காரணமாய் மேல்நிலைப் பள்ளியைத் தொடர முடியாமல் போனபோது என் கனவுகள் அத்தனையும் நொறுங்கிப் போனது. மீசை அரும்புவதற்கு முன்பாகவே வெவ்வேறு பணிகளுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டேன். கல்விக் கூடங்களைக் கடந்து செல்லும்போதெல்லாம் காரணமில்லாமல் அழுகைமுட்டும். ஒரு கட்டத்தில் குற்றவுலகோடு நெருங்கி பயணிக்கத் துவங்கி வாழ்க்கைத் திசைமாறவிருந்த நேரத்தில் ஆசிரியர்களின் வழிகாட்டலால் என் வாழ்வை சரியான திசைநோக்கி மாற்றிக்கொண்டேன். அறிவுப்பூர்வமானதொரு மனிதனாய் என்னை உருவாக்கியதில் என் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. அதனாலேயே ஒவ்வொரு நல்ல ஆசிரியரையும் எனது வணக்கத்திற்குரியவர்களாய்ப் பார்க்கிறேன்.

மகாலட்சுமி

ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கக் கூடிய வல்லமை ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. குறிப்பாய் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். சிந்திக்கவும் கேள்விக் கேட்கவும் பயிலாத குழந்தைகளால் சுயமாய் எதையும் சாதித்துவிட முடியாது. திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலைப்பகுதியிலுள்ள அரசவெளி கிராமத்து பழங்குடி குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியர் மகாலட்சுமி அந்த மலைவாழ் மக்களின் வாழ்வில் மிக முக்கியமானவராகத் திகழ்ந்து வருகிறார். சாதாரணக் குடும்த்தில் பிறந்து பெரும் போராட்டங்களுக்குப்பின் கல்வி கற்றவர் என்பதால் அவருக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரிந்திருந்தது. அவரது அக்கா ரமணி மற்றும் பலரது உதவியால்தான் அவருக்கு கல்வி சாத்தியப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ பள்ளிகள், கன்னியாஸ்திரி மடங்களின் உதவியோடு பனிரெண்டாம் வகுப்பை முடித்தவருக்கு மருத்துவம் படிப்பதில் விருப்பம். மூன்று மதிப்பெண்களில் அந்த வாய்ப்பு பறிபோனாலும் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் கிடைத்துவிட்டது.

படிப்பு முடிந்து, 2006 ம் வருடம் இந்தப் பள்ளிக்கு ஆசிரியையாக அவர் வந்து சேர்ந்தபோது அது பள்ளிக்கூடமாக இல்லை. அழுக்கும், குப்பைகளும், பன்றிகளும் நிறைந்திருந்ததோடு கட்டடமும் பராமரிப்பின்றி மோசமான நிலையிலிருந்தது. பெயருக்குக் கூட மாணவர்கள் ஒருவருமில்லை. மதிய உணவுநேரத்தில் வந்த குழந்தைகள் உணவை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டனர். வருகைப் பதிவேட்டை எடுத்துப் பார்த்த மகாலட்சுமி நிறைய மாணவர்களின் பெயர்கள் அதிலிருப்பதைப் பார்க்கிறார். பாழடைந்த அந்தக் கட்டடம் பள்ளிக்கூடமாக மாறவேண்டுமானால் மாணவர்கள் அங்கு கல்வி கற்க வரவேண்டும்.

மாறாக, இந்திய முழுக்கவே நிலம் பறிக்கப்பட்ட பழங்குடிகள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெவ்வேறு ஊர்களுக்கு இடம்பெயரக் கூடிய துயரத்தைத்தான் நாம் காண்கிறோம். அரசு உருவாக்கிய வனச்சட்டம் பழங்குடியினர்களுக்கு காட்டில் அவர்களுக்கான உரிமைகளை மறுக்கிறது. வாழ்வாதாரத்திற்கான எந்த வேலைகளையும் செய்யமுடியாமல் சிரமப்படும் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் மிளகு எடுப்பதற்காக வருடத்தில் நான்கு மாதங்கள் கேரளாவிற்குச் சென்றுவிடுகிறார்கள். இப்படிச் செல்கிறவர்களில் பலர் தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். அந்த நான்கு மாத வருமானம் தான் அந்த வருடத்தின் மிச்ச நாட்களுக்கான வாழ்வை நடத்துவதற்கான ஆதாரம். இந்தச் சூழ்நிலையில் அவர்களால் தங்களது குழந்தைகளின் கல்வி குறித்து அக்கறைகொள்ள முடியவில்லை. காத்திருந்து பயனில்லை என்கிற முடிவோடு அவர் ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் சொல்லி கோரிக்கை வைக்கிறார்.

மகாலட்சுமியின் இடைவிடாது முயற்சியாலும் குழந்தைகளிடம் அவர் காட்டிய அக்கறையாலும் அந்த எண்ணிக்கை மெல்ல மெல்ல உயரத் துவங்கியிருக்கிறது.

சீனப் புரட்சிக்குப்பின் மாவோவின் காலத்தில் ஒவ்வொரு குடிமகனும் கல்வி கற்றாக வேண்டுமென மாவோ ஆசிரியர்களை தொலைதூர மலைப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். வாகன வசதிகள்கூட இல்லாத மலைப்பகுதிகளுக்கு நடந்தே பயணித்த ஆசிரியர்கள் அந்த மலைக்கிராமங்களில் எந்த வசதிகளையும் எதிர்பாராமல் கற்பிக்கத் துவங்கினார்கள். இந்த வரலாற்றுப் பின்னணியில் ஏராளமான கதைகளும் நாவல்களும் எழுதப்பட்டுள்ளதோடு த ரோட் ஹோம், எல்லோ ரிவர் மாதிரியான உலகப் புகழ்பெற்றத் திரைப்படங்களும் உருவாகியுள்ளன.

Also Read: வி.கே.டி.பாலன்: `நம்பிக்கை மனிதர்’ | இவர்கள் | பகுதி - 5

சர்வாதிகாரத்திற்கு எதிரான புரட்சிகளுக்குப்பின் புதிய அரசுகள் தங்கள் குடிமக்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தைப் புரியவைத்து கற்றலை அத்யாவசியமாக்கியதைத்தான் பிரதானமாக்கின. ரஷ்யா, சீனா, க்யூபா துவங்கி வெனிஸுவேலா உட்பட ஏராளமான தேசங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

வழக்கமான ஆசிரியராகப் பாடம் நடத்துவதில் எந்தப் பிரயோஜனமுமில்லை என்பதை உணர்ந்துகொண்ட மகாலட்சுமி அந்தக் குழந்தைகளுக்கு கல்வியை கதைகளின் வழியாய் கற்பிக்கத் துவங்குகிறார். கற்றலை மகிழ்ச்சியானதொரு அனுபவமாய் உணராதவரை குழந்தைகளுக்கு அதன்மீது ஆர்வம் பிடிப்பதில்லை. வரலாற்றையும், கணிதத்தையும், மொழியையும் அவர்கள் கற்றுத்தேர வேண்டுமானால் அவற்றைப் புரிந்துகொள்வதற்கான வாசல்கள் திறக்கப்பட வேண்டும்.

அந்த வகுப்பறையில் அவர்கள் கேட்ட கதைகளும் பாடல்களும் புதியவை. அந்தப் பாடல் அவர்களுக்கு உற்சாகமூட்டியது, கதைகள் சிந்திக்கத் தூண்டியது. கதைகளையும் பாடல்களையும் கேட்டுச் சென்ற குழந்தைகள் பள்ளிக்கு வராத மற்றக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்ததால் அங்கு மாணவர்களே ஆசிரிர்களாகத் துவங்கினார்கள்.

மஹாஸ்வேதா தேவி இத்வா முண்டாவுக்கு வெற்றி என்றொரு கதை எழுதியிருக்கிறார். அதில் இத்வா தன் தாத்தாவிடம் கேட்கிறான். ‘இந்த காடும் மலையும் நமது முன்னோர்களிடமிருந்துதானே, இப்போது ஏன் கைவிட்டுப்போனது?’ பதிலுக்கு தாத்தா “ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னால் இங்கு வந்த முதலாளிகள் நம்மிடமிருந்து நிலங்களைப் பறித்துக் கொண்டார்கள்.” என்கிறார்.

“பழங்குடிகள் ஏன் அவர்களை எதிர்த்துப் போராடவில்லை.”

“எழுதப் படிக்கத் தெரியாத நாம் நமது உரிமைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போனது. நிலங்கள் குறித்து எழுதப்பட்டிருந்த சட்டங்கள் என்னவென்பதை நாம் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்.” என வருத்தத்தோடு சொல்கிறார்.

பழங்குடிகளிடம் காடுகள் பாதுகாப்பாயிருக்க வேண்டுமானால் அவர்கள் கல்வி கற்க வேண்டும்.

கதையின் இறுதிப் பகுதியில் முதலாளி ஒருவர் ஆசிரியரிடம் ‘அவன் எழுதுவதும் படிப்பதும் அவனுக்கு என்ன தந்துவிடப் போகிறது? அவனை என்ன ராஜாவாகவா ஆக்கிவிடும்?’ என்று கேட்கிறார்.

”இல்லை பாபு அது அவனை மனிதனாக்கும்.” என்று ஆசிரியர் சொல்கிறார். மஹாஸ்வேதா தேவியின் கதையில் வரும் ஆசிரியர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு மகாலட்சுமியைத்தான் நினைவுபடுத்தின.

பள்ளிக்கு வரும் மாணவர்களை அவர்களுக்கான முழு சுதந்திரத்தோடு இருக்க அனுமதித்ததோடு அவர்களின் மீது தனிக்கவனம் செலுத்தத் துவங்குகிறார். குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, அவர்களுக்கு முடிவெட்டி விடுவது என அவர் கவனித்துக் கொள்ளத் துவங்கியபின் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை இன்னொரு வீடாக நினைக்கத் துவங்கிவிடுகிறார்கள். ஒரு வருடகாலம் தொடர்ச்சியான அவரது அர்ப்பணிப்புமிக்க செயல்களின் பலனாய் மாணவர்களின் எண்ணிக்கை தொண்ணூறாக உயர்கிறது. நாம் இந்த சமூகத்திற்கு ஒரு நன்மையை விதைத்தால், அதன் பலன் பன்மடங்காகப் பெருகிவரும் என்பதற்கு அடையாளமாய் அவரைக் குறித்தும் அந்தப் பள்ளியைக் குறித்தும் செய்திகள் வேகமாய் வெளிஉலகிற்கு பரவத் துவங்குகிறது.

போதிய மாணவர்களின் வருகையில்லாததால் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக செய்திகளைப் பார்க்கும்போதெல்லாம் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாவேன். இவ்வாறு மூடப்படும் பெரும்பாலான பள்ளிகள் சிறு கிராமங்களிலும் மலைப்பகுதிகளிலும்தான் அதிகமிருக்கும். துவக்கப் பள்ளி ஒரு ஊரிலும் உயர்நிலைப்பள்ளியும் மேல்நிலைப்பள்ளியும் இன்னொரு ஊரிலும் இருக்கும். பல கிலோமீட்டர் தொலைவு பயணித்து படிக்க முடியாத சூழலில் ஏராளமானவர்கள் துவக்கக் கல்வியோடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிடும் சூழல் உருவாவது எத்தனை பெரிய வன்முறை?

பாடம் கற்றுக் கொடுப்பதோடு ஆசிரியரின் வேலை முடிந்துபோவதில்லை. அரசு 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுத் தேர்வு கட்டாயம் என்னும் அறிவிப்பைக் கொண்டு வந்தபோது அதனைக் கண்டித்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். ‘தடாலடியாக அரசாணைகள் வெளியிடப்படுவது சமீப வருடங்களில் நிகழ்ந்து வருகிறது, இது அதில் உச்சகட்டம். கல்வி குறித்து வரும் அரசாணைகள் ஒட்டுமொத்த குழந்தைகளையும் உளவியல் ரீதியில் தாக்கும். என் குரலற்றக் குழந்தைகளின் குரலை இந்த சமூகத்திற்கு நான் வெளிப்படுத்தியாக வேண்டிய அவசியமிருக்கிறது’ என்றவர் அதன்பிறகு நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் அவரின் மாணவர்களது கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடக்குமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமவெளி மனிதர்களின் மனநிலையில் பார்க்கும்போது இதில் என்ன கஷ்டம் என்றுதான் தோன்றும். ஆனால் மிகவும் வறிய நிலையில் பள்ளிக்குவரும் குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோனுக்கு எங்கு செல்வார்கள்? பெரும் தேக்கத்திற்குப்பின் பள்ளிக்கூடம் வரப்பழகிய மாணவர்களுக்கு மீண்டும் கல்வியின் மீது கசப்பு வந்துவிடக் கூடாதென்கிற கவலை மகாலஷ்மிக்கு. மீண்டும் மாணவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கேச் சென்று பாடங்களை எடுக்கத் துவங்கினார்.

இதோ சில நாட்களுக்குமுன் அவருக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த ஓரிரு நாட்களிலேயே சிலர் அவரின் மீது போலியான புகார்களை அளித்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் எழுந்த மகாலட்சுமி டீச்சருக்கு ஆதரவாக எழுந்த குரல்கள் அடுத்த ஆறு மணி நேரத்தில் அந்த உத்தரவைத் திரும்பப் பெறச் செய்தது. நம்பிக்கையை விதைப்பவர்கள் ஒருபோதும் வீழ்ச்சியை அறுவடை செய்வதில்லை!

(தொடரும்..)

Also Read: நீலகண்டன்: "ஒரு துளி நீரும் சமுத்திரம் ஆகும்" | இவர்கள் | பகுதி - 4



source https://www.vikatan.com/news/education/story-about-village-school-teacher-mahalakshmi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக