தமிழக தேர்தலுக்கு முன்பாக ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் மக்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டன. அவற்றைப் பெட்டியில் வைத்துப் பூட்டிய மு.க.ஸ்டாலின், தான் முதல்வரானதும் இந்த மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வளிப்பதாகத் தெரிவித்தார்.
Also Read: `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி எப்படி நடக்கிறது? - லைவ் ரிப்போர்ட்
அதன்படி தி,மு.க ஆட்சிக்கு வந்து மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் புதிதாக, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அதன் சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட மனுக்களைக் கணினியில் பதிவேற்றும் பணிகள் தற்போது நடந்துவருகின்றன. இந்தநிலையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஹாமிம்புரம் பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவியான ஆகிலா என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ”நான் வசிக்கும் ஹாமிம்புரம் பகுதியின் 1 முதல் 8 தெருக்களில் உள்ள கழிவுநீர் மற்றும் மனிதக்கழிவுகள் அனைத்தும் ஓடைகள் வழியாக கன்னிமார்குளத்தில் சென்று கலக்கின்றன. அதனால் அந்தக் குளத்தின் அருகில் வசிக்கும் மக்கள் துர்நாற்றத்தைச் சுவாசிப்பதுடன், கொடிய தொற்று நோய்களுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால் கழிவுகள் குளத்தில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலப்பாளையம் ஹாமிம்புரம் 3-வது தெருவைச் சேர்ந்த ஷாபி ரகுமத்துல்லாவின் மகளான ஆகிலா, தனது பகுதியிலுள்ள குறையைச் சுட்டிக்காட்டி முதல்வருக்குக் கடிதம் அனுப்பியது பற்றிக் கூறுகையில், “மேலப்பாளையம் பகுதியிலுள்ள தெருக்களில் நீண்ட நாள்களாகவே கழிவுநீர் பிரச்னை இருக்கிறது.
இங்கு பாதாளச் சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், போதிய வடிகால் வசதி இல்லாமல் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கிறது. அதனால் இங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதற்காக இங்குள்ள மக்கள் பல தடவை போராட்டங்களை நடத்தியபோதிலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வரிடம் புகார் அளித்தால் 100 நாள்களில் அதற்குத் தீர்வு கிடைக்கும் என்று பேப்பரில் படித்தேன். அதனால் எங்கள் பகுதியிலுள்ள இந்தப் பிரச்னையும் சீக்கிரமே தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கையில் முதல்வருக்குக் கடிதமாக எழுதியிருக்கிறேன்” என்றார்.
எது நடந்தாலும் நமக்கென்ன என்று ஒதுங்கும் மக்கள் அதிகரித்துவரும் சூழலில், தனது தெருவைச் சேர்ந்த மக்களின் நலனுக்காகத் தனியொரு சிறுமியாகக் கடிதம் எழுதிய ஆகிலாவின் செயலை அந்தப் பகுதி மக்கள் பாராட்டி மகிழ்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/little-girl-write-a-letter-to-chief-minister-to-rectify-the-drainage-problem-in-her-street
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக