Ad

ஞாயிறு, 16 மே, 2021

உத்தரப்பிரதேசம்: `1,140 கி.மீ... 2,000 சடலங்கள்!’ - கலங்கும் கங்கை; அச்சத்தில் மக்கள்

கொரோனாவால் இந்தியா தினம் தினம் சந்தித்துவரும் அவல நிலை, எதிர்பார்த்ததைவிட மிகவும் மோசமாக இருக்கிறது. அரசாங்கமும் இதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆனாலும் எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை. முதல் அலையின்போது, பசி, பட்டினியால் திண்டாடிய மக்கள், இரண்டாவது அலையின்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டுவருகின்றனர். தினம் தினம் வெளியாகும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நிதர்சனத்தைத் தோலுரித்துக் காட்டிவருகிறது.

கங்கை

ஒருபுறம் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது என்றால், மறுபுறம் இறப்போரை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் போதுமான இடமின்றி நதிக்கரைகளில் வீசுவது என்பது துயரத்தின் உச்சம்.

சமீப நாள்களாக கங்கை நதிக்கரைகளில் கொத்துக் கொத்தாக சடலங்கள் மிதப்பதும், புதைப்பதும், எரிப்பதும் அதிகரித்துவருகின்றன. இது குறித்த காட்சிகள், புகைப்படங்கள் தற்போது தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.

பிரபல இந்தி ஊடகமான டைனிக் பாஸ்கர் (Dainik Bhaskar) உத்தரப்பிரதேசத்தில் தங்களின் செய்தியாளர்களை நேரடியாக கங்கை நதி கடக்கும் சுமார் 27 மாவட்டங்களுக்கு அனுப்பி, தகவல்களைச் சேகரித்துள்ளது. அந்த நாளிதழில் வெளியான தகவல்கள் அதிர்ச்சி ரகம்.

உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைப் பொறுத்தவரையில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை, சற்று அதிகமாகவே உள்ளது. இதையடுத்து கங்கை நதியையொட்டியுள்ள நகரங்களின் நதிக்கரைகளில் கொத்துக் கொத்தாக சடலங்கள் புதைக்கப்படுகின்றன.

கங்கை நதியின் ஓரங்களில் அமைந்துள்ள நகரங்களான வாரணாசி, பதேபூர், கன்னோஜ், உன்னாவ், மிர்ஸாபூர் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் இறப்போரின் சடலங்களை இரவு நேரங்களில் ஆம்புலன்ஸில் வரும் சிலர் இங்கே நதிகளில் வீசுவது அல்லது நதிக்கரைகளில் மணலைக் கொண்டு மூடிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுற்றும் நாய்கள், கழுகுகள், பருந்துகள் அவற்றைச் சூழ்ந்துகொள்வதாக அந்தப் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, கங்கையை ஒட்டியுள்ள உன்னாவ் நகரில் சுமார் 900 சடலங்கள் நதிக்கரைகளில் புதைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நாட்டிலேயே மிகப்பெரிய தகன மேடை அங்கே அந்த மாநில அரசால் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கன்னோஜ்ஜில் 350 சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. கான்பூரில் சுமார் 400 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. மிர்ஸாபூரில் 250-க்கும் மேற்பட்ட சடலங்கள் தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவை போக நாள் ஒன்றுக்கு ஒவ்வோர் இடத்திலும் 15 முதல் 20 சடலங்கள் வரை கரை ஒதுங்குவதாக அந்தப் பகுதியிலுள்ள மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும், மீரட், ஷாஜகான்பூர், பிரெயக்ராஜ், ஃபரூக்தாபாத் உள்ளிட்ட நகரங்களில் அதிகப்படியான சடலங்கள் ஒதுங்குவதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சுமார் 1,140 கி.மீ வரை செல்லும் கங்கை நதியில் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

Also Read: உத்தரப்பிரதேசம்:`பொய் சொன்னால் யாராக இருந்தாலும்...' -யோகி ஆதித்யநாத் கருத்துக்கு சித்தார்த் காட்டம்

இது போன்ற செயல்கள் பெருகிவருவதால், விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் கரையொதுங்கும் சடலங்களை மீட்டு முறையாக தகனம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். “எங்கள் மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடில்லை, கொரோனா தடுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்” என்று கூறிவரும் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் இந்த விவகாரத்தில் மெளனம் சாதிக்கிறது.

சிகிச்சையளிக்கப் போதிய இடமின்றி, தகனம் செய்ய போதிய இடமின்றித் தவிக்கிறது தேசம். இந்தநிலையிலிருந்து மீண்டு வெளிவர நம்மை நாமே தற்காத்துக்கொள்வதுதான் சிறந்த வழி. விரைவில் மீள்வோம்.



source https://www.vikatan.com/news/general-news/ganga-river-in-uttar-pradesh-and-the-corona-virus-situation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக