Ad

சனி, 8 மே, 2021

சீரகக் கஞ்சி | ஜாலர் ரோல்ஸ் |ஹலீம் | லுக்மி... ரமலான் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

ரமலான் பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கொரோனாவின் கோர தாண்டவம் மட்டும் இல்லாமலிருந்தால், இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் இருந்து இனிப்பு முதல் பிரியாணி வரை விருந்து வீடு தேடி வந்துவிடும். நேருக்கு நேர் பார்த்துக்கொள்வதே பெரும் சவாலாக மாறிப்போன இந்த நாள்களில், விருந்தாவது, ஒன்றாவது...

அதற்காக ரமலான் ஸ்பெஷலை மிஸ் செய்ய வேண்டுமா என்ன? கஞ்சி முதல் ஹலீம்வரை இஸ்லாமிய ஸ்பெஷல் மெனுவை வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கலாமே...

தேவையானவை:

• சீரகச் சம்பா அரிசி - ஒரு கப்

• பாசிப்பருப்பு - அரை கப்

• சின்ன வெங்காயம் - 6 (தோலுரிக்கவும்)

• உரித்த பூண்டுப் பல் - 4

• பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)

• தேங்காய்த் துருவல் - அரை கப்

• சீரகம் - கால் டீஸ்பூன்

• நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

• பட்டை - சிறிய துண்டு

• கிராம்பு - ஒன்று

• ஏலக்காய் - ஒன்று

• வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

• இஞ்சி விழுது - கால் டீஸ்பூன்

• புதினா இலைகள் - 8

• நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

• எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

• உப்பு - தேவைக்கேற்ப

சீரகக் கஞ்சி

செய்முறை:

வெறும் வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு, வாசனை வரும் வரை (கருகாமல்) நன்கு வறுத்து எடுக்கவும். அரிசியைக் களையவும். கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 5 கப் தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து மூடி 5 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி... தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து சிவக்க வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர்விட்டு கொரகொரவென அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

வாணலியில் நெய்யைவிட்டுச் சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த அரிசி - பருப்பு கஞ்சி, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். கடைசியாக கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவி இறக்கவும். பருப்பு வடை, சமோசா, சிக்கன் ரோலுடன் பரிமாறவும்.

தேவையானவை:

• முட்டை - 2

• தண்ணீர் - 650 மில்லி

• கெட்டி தேங்காய்ப்பால் - 100 மில்லி

• மைதா மாவு - 350 கிராம்

• உப்பு – தேவையான அளவு

• எண்ணெய் - 100 மில்லி

பூரணம் செய்ய:

• எலும்பில்லாத கோழி இறைச்சி - கால் கிலோ (குச்சி போல நீளவாக்கில் நறுக்கவும்)

• வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்)

• கேரட் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)

• பீன்ஸ் - 5 (நீளவாக்கில் நறுக்கவும்)

• நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்

• குடமிளகாய் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)

• மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

• மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

• சீரகத்தூள் – கால் டீஸ்பூன்

• மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

• இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன்

• நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

• உப்பு - தேவையான அளவு

• எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

ஜாலர் ரோல்ஸ்

செய்முறை:

பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில், தண்ணீர், தேங்காய்ப்பால், மைதா மாவு, உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் நீர்க்க கரைக்கவும். இந்த மாவை `பைப்பிங் பேக்’கில் ஊற்றவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை வலை போன்று கல்லில் சுற்றி ஊற்றவும். எண்ணெய் சிறிதளவு ஊற்றி தோசை போல் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். இதுவே ஜாலர் ரோல்ஸ் தோசை.

குக்கரில் கோழியுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, சிறிதளவு தண்ணீர்விட்டு மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி காய்கறிகள் சேர்த்து, முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகும்வரை வதக்கவும். இதனுடன் வெந்த சிக்கன் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி நன்கு வேகவிடவும். இதுவே பூரணம். ஒரு ஜாலர் தோசையின் மேல் ஓரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து தோசையின் இரண்டு ஓரங்களையும் உட்புறமாக மடிக்கவும். பிறகு, பூரணம் உள்ள பக்கத்தை அதன் எதிர்புறமாக பாய் போல சுருட்டி இறுக்கமான ரோல் போன்று செய்யவும். சாஸுடன் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

தேவையானவை:

• வெங்காயம் - 3 (நீளவாக்கில் நறுக்கவும்)

• இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

• நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்

• ஆய்ந்த புதினா இலைகள் - ஒரு கப்

• பச்சை மிளகாய் - 6 (துண்டுகளாகக் கீறவும்)

• மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

• மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

• அடித்த கெட்டித் தயிர் - ஒரு கப்

• வெங்காயம் - 8 (நறுக்கி சூடான எண்ணெயில் பொரிக்கவும்)

• நெய் - 6 டேபிள்ஸ்பூன்

• எலுமிச்சைப் பழம் – ஒன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)

• எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

முதலில் வேகவைக்க:

• எலும்பு நீக்கிய ஆட்டு இறைச்சி - ஒரு கிலோ

• பச்சை மிளகாய் - 15

• இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

• மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

• பட்டை - ஒரு இஞ்ச் துண்டு

• கிராம்பு - 4

• ஏலக்காய் - 4

• சீரகம் - அரை டீஸ்பூன்

• மிளகு - 6

• உப்பு - தேவையான அளவு

• தண்ணீர் - ஒரு கப்

இரண்டாவதாக வேகவைக்க:

• உடைத்த கோதுமை - 150 கிராம்

• உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

• துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

• பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

• கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

• உப்பு - தேவையான அளவு

• தண்ணீர் - 2 கப்

ஹலீம்

செய்முறை:

முதலில் வேகவைக்க கொடுத்துள்ள பொருள்களை குக்கரில் சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கவும். ஆறவிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். பிறகு, இரண்டாவதாக வேகவைக்க கொடுத்துள்ள பொருள்களை மற்றொரு குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். ஆறிய பிறகு தனியாக விழுதாக அரைத்து எடுக்கவும்.

அடிகனமான, வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். இதனுடன் பாதியளவு புதினா இலைகள், இஞ்சி - பூண்டு விழுது, தயிர், மஞ்சள்தூள், மிளகுத்தூள், முதலில் வேகவைத்து அரைத்த கறி, இரண்டாவதாக வேகவைத்து அரைத்த பருப்பு சேர்த்து அடி பிடிக்காமல் நன்றாகக் கலக்கவும். மேலே நெய்யை ஊற்றி 15 நிமிடங்கள் கிளறி அடிபிடிக்காமல் மிதமான தீயில் வேகவிடவும். பொரித்த வெங்காயத்தில் பாதி அளவு எடுத்து இதனுடன் சேர்க்கவும்.

பரிமாறும் முறை:

கிண்ணத்தில் ஹலீமை ஊற்றி அதன் மேல் கொத்தமல்லித்தழை, கீறிய பச்சை மிளகாய் துண்டுகள், புதினா இலை, பொரித்த வெங்காயத்தைத் தூவி எலுமிச்சைப்பழத் துண்டுகளை வைத்து அலங்கரித்துக் கொடுக்கவும்.

சாப்பிடும் முன் இதன் மேல் எலுமிச்சைச் சாற்றை பிழிந்து சூடாகச் சுவைக்கலாம்.

குறிப்பு:

கோழி இறைச்சியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.

தேவையானவை:

பூரணம் செய்ய:

• கறி கைமா - கால் கிலோ

• வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

• இஞ்சி - பூண்டு விழுது – அரை டேபிள்ஸ்பூன்

• மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

• மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

• எலுமிச்சைப்பழச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

• பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

• நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

லுக்மி செய்ய:

• மைதா மாவு - ஒரு கப்

• கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்

• ரவை - 3 டேபிள்ஸ்பூன்

• எண்ணெய், உப்பு - தேவையான அளவு

• தண்ணீர் - தேவையான அளவு

லுக்மி

செய்முறை:

கறியுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடாக்கி... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் ஊறவைத்த கறி சேர்த்துக் கிளறி பத்து நிமிடங்கள் வேகவிடவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். ஆறிய பின் கறி கலவையுடன் எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

பாத்திரத்தில் மைதா மாவுடன், கோதுமை மாவு, உப்பு, ரவை, எண்ணெய் சேர்த்துக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மிருதுவாகப் பிசையவும். மாவை மூடி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மீண்டும் 5 நிமிடங்கள் இந்த மாவை நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி மைதா மாவு தூவி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும், இதை நீளவாக்கில் மூன்று துண்டுகளாக்கவும்.

ஒவ்வொரு சப்பாத்தி துண்டின் மீதும் ஒரு டேபிள்ஸ்பூன் கைமாவை வைத்து இரு ஓரங்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக முக்கோண வடிவத்துக்கு மூடவும். பூரணம் வெளியே வராதபடி ஓரங்களை நன்றாக அழுத்திவிடவும். இதுவே லுக்மி. வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி லுக்மிகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தயிர், தக்காளி, சாஸ், புதினா சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/haleem-lukhmi-cumin-rice-soup-ramzan-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக