Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

அதிகாரிகள் அலட்சியத்தால் 5,000 மூட்டை நெல் சேதம்... கண்ணீரில் விவசாயிகள்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்துள்ள தக்கோலம் பகுதியில், கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் தொடங்கியது. ஆனால், 6 நாட்கள் மட்டுமே கொள்முதல் நிலையம் செயல்பாட்டில் இருந்தது. அதன்பின்னர், நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த நெல்லை தார்பாயை தரையில் விரித்து கொட்டி வைத்துள்ளனர்.

மழையில் நனைந்த நெல்

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, நெல் கொட்டி வைத்திருந்த இடத்தை மழைநீர் சூழ்ந்துகொண்டது. ஈரப்பதம் கட்டியதால் நெல் முளைப்புவிட்டுள்ளது. முளைப்புவிட்ட நெல்லை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், ‘‘தக்கோலம், புதுகேசாவரம், அணைக்கட்டாப்புத்தூர், மோசூர், உரியூர், முருங்கை, நகரிகுப்பம், அனந்தாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை இந்த கொள்முதல் நிலையத்துக்கு எடுத்துவந்து விற்பனை செய்கிறோம்.

ஈரமடைந்த நெல்

இந்த நிலையில், ஐந்தாயிரம் மூட்டை நெல்லை கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து வீணாகியிருக்கிறது. கடன் வாங்கி பயிர் செய்கிறோம். அந்த கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்றுத் தெரியவில்லை. அதிகாரிகளும் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். அன்னனைக்கு எடுக்கிற நெல்லுக்கு அப்போதே பணம் கொடுத்துவிட வேண்டும். விவசாயிகளை நோகடிக்கக் கூடாது. மழையில் நனைந்த நெல்லின் தரமும், அரிசியின் தரமும் குறைந்துள்ளது. நஷ்டம் எங்களுக்குத்தான்’’ என்றனர் குமுறலாக.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/5000-bundles-of-paddy-stocks-ruined-because-of-officials-negligence

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக