நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரம்மா, மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தார்.
அவற்றில், கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்ட இறப்புகள் குறித்தும், கொரோனா நோய்க்கு மட்டும் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது பற்றியும் கேள்விகள் கேட்டிருந்தார்.
மதுரை மாவட்ட சுகாதாரத்துறை உதவி இயக்குநர் அளித்திருக்கும் பதிலில், மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மார்ச் மாதத்தில் 550 பேர், ஏப்ரலில் 555 பேர், மே 534 பேர், ஜூன் 723 பேர், ஜூலை 1,131 பேர், ஆகஸ்ட் 1,219 பேர், செப்டம்பர் 789 பேர் என மொத்தம் 5,511 பேர் உயிரிழந்ததாகத் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஒன்பது அரசு மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். அதன்படி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 22 பேரும், சோழவந்தானில் 16 பேரும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5,365 பேரும் இறந்திருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அரசு மருத்துவமனையில் 16 பேரும், பேரையூரில் 32 பேரும், திருப்பரங்குன்றத்தில் ஐந்து பேரும், திருமங்கலத்தில் 51 பேரும், வாடிபட்டி அரசு மருத்துவமனையில் நான்கு பேரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறார்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா நோயாளிகளாகச் சிகிச்சை பெற்ற மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 436 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழப்புகள் அதிகமுள்ள நிலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வழக்கறிஞர் பிரம்மா தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய வழக்கறிஞர் பிரம்மா, ``மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில், கடந்த ஏழு மாதங்களில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்விகளைக் கேட்டிருந்தேன். அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், மதுரை மாவட்டத்திலுள்ள ஒன்பது அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 5,511 பேர் இறந்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், கொரோனா நோய்த் தொற்று காரணமாக மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 436 பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள். அப்படியானால் ஏழு மாதங்களில் பிற நோய்க்காக அரசு மருத்துவமனைகளில் 5,075 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் முக்கியமான அறுவை சிகிச்சைகள் தவிர எதையும் செய்யவில்லை. சாதாரண நோயாளிகளை மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகச் சேர்க்காமல், வீட்டுக்கே அனுப்பிவைத்தார்கள். அப்படியானால் 5,075 மரணங்கள் என்னென்ன நோய்களால் ஏற்பட்டிருக்கக் கூடும்.
கொரோனாவைவிடவும் சிக்கலான அல்லது தீவிரமான நோய் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்த எண்ணிக்கை குளறுபடியைப் பார்க்கும்போது, அரசு கொரோனா உயிரிழப்புகளைத் திட்டமிட்டே குறைத்துச் சொல்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/rti-activist-gets-shocking-information-about-covid-19-deaths-in-madurai-gh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக