Ad

சனி, 8 மே, 2021

மும்பை:'2.6 லட்சம் பேரின் உதவியால் உயிர் பிழைத்த 5 மாத குழந்தை; நெகிழ்ச்சியில் பெற்றோர்!'

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ராஜ்தீப் ரத்தோட். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்குமுன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் செயல்பாடுகளைக் கண்ட டாக்டர்கள் குழந்தையைப் பரிசோதித்தபோது மிகவும் அபூர்வமான மரபணு கோளாறுடைய 'Spinal Muscular Atrophy Type I' என்ற நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த நோய் பொதுவாக 10 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு வர வாய்ப்பு உள்ளது. தையராஜ்சிங் ரத்தோட் என்ற அந்த 5 மாத குழந்தையை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரஹஜா மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நோய் சிகிச்சைக்குத் தேவையான மருந்து அமெரிக்காவில்தான் கிடைக்கும். அதன் ஒரு டோஸ் ரூ.16 கோடி என்றது மருத்துவமனை நிர்வாகம். இந்த அளவுக்கு நிதி ரத்தோட் குடும்பத்தில் இல்லை.

மருத்துவமனையில் குழந்தை

இதனால் பொதுமக்களிடம் நிதியுதவி பெற முடிவு செய்து ஆன்லைன் மூலம் இதற்கு நிதி திரட்டப்பட்டது. 42 நாட்களில் மொத்தம் 16 கோடி நிதி வசூலானது. இதனை 2.6 லட்சம் பேர் தொண்டுள்ளத்தோடு வழங்கினர். உடனே அமெரிக்காவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதனை வெற்றிகரமாக குழந்தைக்கு செலுத்தியுள்ளனர். குழந்தையின் தந்தை ராஜ்தீப்சிங் இது குறித்து கூறுகையில், "எனது மகனை சாமான்ய மக்கள் சேர்ந்து காப்பாற்றி இருக்கின்றனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இது குறித்து ஹிந்துஜா மருத்துவமனையின் குழந்தைகள் நரம்பியல் நிபுணர் டாக்டர் நீலு தேசாய் கூறுகையில், இந்த நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கவில்லை என்றால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்த நோய் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடியது. வருடத்தில் 4 அல்லது 5 குழந்தைகள் இது போன்ற பிரச்னையால் சிகிச்சைக்கு வருகின்றன என்று தெரிவித்தார். இந்த நோய்க்கு மூன்று வகையான சிகிச்சைகள் இருக்கிறது. ஆனால் மூன்று வகையான சிகிச்சையும் அதிக செலவு பிடிக்கக்கூடியது" என்றும் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் தீரா காமத் என்ற 5 மாத பெண் குழந்தைக்கு இதேபோன்ற நோய் தாக்கி ஹிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. இக்குழந்தைக்கு சிகிச்சையளிக்கவும் ஆன்லைனில் நிதி திரட்டப்பட்டது. ஆனால் இந்த நிதியை திரட்ட சில மாதங்கள் பிடித்தது. அதன் பிறகே சிகிச்சைக்கு தேவையான 15.24 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அந்த மருந்தை அமெரிக்காவில் இறந்து இறக்குமதி செய்ய வரிச்சலுகையை பிரதமர் அலுவலகம் வழங்கியது.



source https://www.vikatan.com/news/healthy/26-lakh-people-donated-rs-16-crore-to-save-the-life-of-a-5-month-old-baby

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக