புதுச்சேரி ஏ.எஃப்.டி திடலில் 'மலரட்டும் தாமரை ஒளிரட்டும் புதுவை' என்ற முழக்கத்துடன் பா.ஜ.கவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, `நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது ஜார்கண்ட் மாநிலத்துக்கு 5,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் புதுச்சேரி மாநிலத்திற்கு இருந்த கடனை தள்ளுபடி செய்யாமல் துரோகம் இழைத்துவிட்டார்’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகசட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “ஜார்க்கண்ட் மாநிலத்தின் கடனை தள்ளுபடி செய்தபோது, நான் பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சராக இருந்தேனே தவிர, நிதித்துறை அமைச்சராக இல்லை.
அந்த கடன் தள்ளுபடி நடவடிக்கையில் என்னுடைய பங்கு என்று எதுவும் இல்லை. மாநில சீரமைப்பு என்ற அடிப்படையில் தான் ஜார்கண்ட் மாநிலத்துக்கு 5,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தனர். அதேபோன்று புதுச்சேரிக்கான மானிய விவகாரத்திலும் உண்மைக்கு புறம்பான கருத்துகளை ஜெ.பி.நட்டா தெரிவித்திருக்கிறார். யாரோ எழுதி கொடுத்ததை அரைகுறையாக படித்துவிட்டு சென்றிருக்கிறார் அவர். ரங்கசாமி முதல்வராக இருந்தபோது தனிக்கணக்கு துவங்கப்பட்டதால்தான் மத்திய அரசின் மானியம் 30 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. நான் அப்போது முதல்வராக இருந்திருந்தால் அதனை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன். கடந்த 2014-ம் ஆண்டு முதல் என்.ஆர் காங்கிரசுடன் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறது. அப்போது, ரங்கசாமி வைத்த கடன் தள்ளுபடி கோரிக்கையையும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு செய்யவில்லை.
ஆனால் இதையெல்லாம் நான்தான் செய்துவிட்டது போல ஜே.பி.நட்டா கூறியுள்ளார். புதுச்சேரியை நிதிக் கமிஷனில் சேர்க்க வேண்டுமென்று 4 முறை பிரதமரையும், 15 முறை உள்துறை அமைச்சரையும், 12 முறை நிதியமைச்சரையும் சந்தித்து கோரிக்கை வைத்தேன். இன்னமும் அவர்கள் அதனை செய்து தரவில்லை. பொய்யான தகவல்களை கூறிய ஜெ.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதி என் மீது வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா என கேட்பேன். அதேபோல மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை பெறுவதற்காக நாங்கள் தயாரித்து அனுப்பிய சட்ட வரையறை மத்திய உள்துறை அமைச்சகத்தில் தற்போது தூங்குகிறது. பஞ்சாலைகளை மூடிவிட்டதாக கூறியிருக்கிறார். ஆலையை மூடியது நான் அல்ல. கவர்னர் கிரண்பேடி தான். ஏ.எஃப்.டி ஆலையின் மூன்றாவது யூனிட்டை இயக்குவதற்கும், வயதான தொழிலாளர்களை தன் விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் அனுப்புவதற்கும் அரசு கோப்பு அனுப்பினால், அந்த கோப்பில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவிட்டார் கவர்னர். அந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும் முன்பாக, கவர்னரே மில்லை மூடுவதற்கு மேலாண் இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
Also Read: தடுப்பூசி: `நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்; பிரதமருக்கு கடிதம்!’ -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
பா.ஜக. ஆட்சிக்கு வந்தால் பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்குவோம் என தெரிவித்துள்ளனர். பாப்ஸ்கோவுக்கு 7 கோடி ரூபாயும், பாசிக் நிறுவனத்துக்கு 8 கோடி ரூபாயும் சம்பளம் வழங்குவதற்காக கோப்புகளை அனுப்பினால், அந்த தொகையை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்த உத்தரவிட்டவர் தான் கிரண்பேடி. இலவச அரிசி விவகாரத்தில் அரிசியாக போட வேண்டும் என்ற முடிவை தவிர்த்து பணமாக கொடுக்க உத்தரவிட்டவரும் அவர் தான். இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா போகிற போக்கில் பேசியுள்ளார். இந்த ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்துவிட்டதாக எங்களிடம் இருந்து வெளியேறிய அமைச்சரை பக்கத்தில் வைத்துக் கொண்டு சொல்கிறார். கிரண்பேடி எந்த வகையில், எப்படியெல்லாம் தொல்லை கொடுத்து மக்கள் நலத்திட்டங்களை தடுத்தார் என்பதெல்லாம் மக்களுக்கு இஞ்ச் இஞ்சாக தெரியும். உண்மையை எந்த காலத்துக்கும் மறைக்க முடியாது. ஜெ.பி.நட்டா ஒரு கட்சியின் தேசிய தலைவர். அவர் குற்றம் சாட்டுவதற்கு முன் முறையாக விசாரித்துவிட்டு பேசியிருக்க வேண்டும். அவரது பேச்சு முதிர்ச்சி இல்லாததை காட்டுகிறது” என்றார் காட்டமாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-chief-minister-narayanasamy-slams-jp-natta
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக