கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இச்சூழலில் தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கும்பகோணம் அருகே உள்ள பேரூராட்சியை சேர்ந்த செயல் அலுவலர் நீராவி பிடிப்பதற்காக மின்சாரத்தில் இயங்கும் நீராவி கருவியை அலுவலகத்தில் வாங்கி வைத்து, தூய்மை பணியாளர்களை ஆவி பிடிக்க வைத்து வருகிறார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read: ஆவி பிடித்தல் நம்மை கொரோனாவிலிருந்து காக்குமா... மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சியின் செயல் அலுவராக சிவலிங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். அந்த அலுவலகத்தில் 30 துாய்மை பணியாளர்கள்,10 அலுவலக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இக்கடினமான சூழலிலும் தூய்மை பணியாளர்கள் நகரை தூய்மையாக வைத்திருக்கும் செயலை தொய்வில்லாமல் செய்து வருகின்றனர்.
கொரோனா முதல் அலையின் போதே டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரின் தன்னலமற்ற செயலுக்கு அரசு தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் போற்றி பாராட்டினர். இரண்டாவது அலையின் போதும் இவர்கள் அதே வேகத்துடன் கொரோனா வைரஸை விரட்டுவதற்காக களத்தில் சுழன்று வருகின்றனர். குறிப்பாக இந்த நேரத்தில் தூய்மை பணியாளர்களின் பணி என்பது அளப்பரியது.
அவர்களின் நலனில் அக்கறை கொண்ட செயல் அலுவலர் சிவலிங்கம் மின்சாரத்தில் இயங்கும் நீராவி பிடிக்கும் கருவியை அலுவலகத்தில் வாங்கி வைத்து தினமும் இரண்டு முறை நீராவி பிடிக்க வலியுறுத்துவதுடன், "உங்க குடும்பத்துகாக நீங்க இதை கண்டிப்பாக கடைபிடிக்கணும்" என கூற அதன்படி ஊழியர்கள் அனைவரும் நீராவி பிடித்து வருகின்றனர்.
இது குறித்து சிவலிங்கம் கூறுகையில், ``கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவது அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒவ்வொருவரும் அலட்சியம் காட்டாமல் எச்சரிக்கையுடன் இருந்தால் விரைவிலேயே கொரோனா கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது. தினமும் நீராவி பிடித்தால் கொரானா தொற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நேரத்தில் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் நலன் என்பது ரொம்பவே முக்கியம். துயரங்கள் சூழ்ந்த அசாராத சூல்நிலையிலும் தன்னை பற்றியும், குடும்பத்தை பற்றியும் நினைக்காமல் தினமும் வீதியில் இறங்கி சுத்தம் செய்து வருகின்றனர் தூய்மை பணியாளர்கள். அவர்கள் பொதுவாக தங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றில் கவலைப்படமாட்டார்கள். ஆனால் அவர்களுடைய ஆரோக்கியம் என்பது இந்த ஊருக்கும், பொதுமக்களுக்கும்,எனக்கும் ரொம்பவே முக்கியம்.
Also Read: ஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா? - விளக்கும் மருத்துவர்
அவர்களைக் காக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு என்பதை உணர்ந்ததால் அலுவலகத்தில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய நீராவி பிடிக்கும் கருவிகளை வாங்கி வைத்துள்ளேன். துாய்மை பணியாளர்கள் காலை பணிக்கு வரும் போதும், பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போதும் இரண்டு முறை நீராவி பிடிக்க வைத்து வருகிறேன். அத்துடன் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்களையும் இதனை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறேன்.
இந்த நீராவி கருவியில் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஓடவைத்து அதில் வரும் ஆவியை பிடித்தாலே போதும். அல்லது பச்சை கற்பூரத்தை தண்ணியில் போட்டும் பயன்படுத்தலாம். இந்த கருவியை நான் வீட்டில் வாங்கி வைத்து பயன்படுத்தினேன். அதில் எனக்கு நல்ல மாற்றம் தெரிந்தது உடம்பும் புத்துணர்ச்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்தே அலுவலகத்தில் வாங்கி வைத்து கட்டாயம் பயன்படுத்தவும் வலியுறுத்தியும் வருகிறேன். இதன் மூலம் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் உடலில் இருக்காது. கொரோனா பாதிப்பிலிருந்தும் தப்பித்து கொள்ளலாம்." என்கிறார்.
இதே போல் நகர் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்,வீட்டு தனிமையில் உள்ளவர்க ளுக்கு தேவையானவற்றை தன்னார்வலர்கள் மூலம் வழங்குதல், அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த வழிகாட்டு துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல் போன்ற பணிகளையும் செய்து வருவதாகவும் தெரிவிக்கிறார் சிவலிங்கம்.
source https://www.vikatan.com/news/general-news/corona-sanitation-workers-provided-with-electric-steamer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக