Ad

சனி, 15 மே, 2021

‘மக்கள்,அரசின் அலட்சியம்தான் கொரோனா 2-வது அலைக்கு காரணம்’- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் காட்டம்!

கொரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் எதிர்பாராத வகையில் தினமும் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ரெம்டெஸிவர் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்குப் பற்றாக்குறை. 'பாதிப்பினை தடுப்பதற்கு தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுங்கள்' என்று அரசாங்கம் அறிவுறுத்தினாலும் அதற்கும் பற்றாக்குறை என நாளுக்கு நாள் நிலவரம் மோசமடைந்து கொண்டே இருக்கிறது. தங்களைச் சுற்றியுள்ள உற்றார், உறவினர்களே இதற்கு பலியாவதால் மக்கள் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோடி

இந்த அசாதாரண சூழலில், மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், கடந்த மே-11ம் தேதி முதல் மே-15ம் தேதி வரை 'Positivity Unlimited' என்கிற தலைப்பில் ஆன்மிகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச இணையம் வாயிலான தொடர் சொற்பொழிவு நிகழ்வை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், சத்குரு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டு இணையம் வாயிலாக மக்களிடம் உரையாற்றினர். நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்றைய தினம் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசுகையில்,

“கொரோனா தொற்றின் முதல் அலையானது இந்தியாவில் பரவத் தொடங்கியபோது அரசு மிகவும் துரிதமாகச் செயல்பட்டு அதனை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மக்களும் அதற்கு முழுமையாக ஒத்துழைத்தனர். பின்னர் விதிகளை முழுமையாக கடைபிடிக்க மக்கள் தவறியதோடு அரசாங்கமும் அதில் அலட்சியமாக இருந்ததே இரண்டாவது அலையின் தாகத்துக்கு காரணம். இருப்பினும், இதிலிருந்தும் நாம் விரைவில் மீண்டு வருவோம். ” என்று கூறினார்.

மோகன் பகவத்

தொடர்ந்து பேசியவர், “ஜீவ - மரண சுழற்சி என்பது தொடர்ச்சியானது. இது போன்ற தருணங்களில்தான் நாம் நமது எதிர்காலத்துக்கான திட்டங்களையும், பயிற்சிகளையும் கற்றுக்கொள்ளவேண்டும். இதிலுள்ள எதிர்மறையான விஷயங்களிலிருந்து வெளிவந்து, நேர்மறையான எண்ணங்களை நோக்கி நம்மை செயல்படுத்துவோம். ஆதலால், மக்கள் அனைவரும் பிறரைக் குறை கூறுவதை விட்டுவிட்டு. முழுமையான தைரியத்தோடும், நம்பிக்கையோடும் செயல்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலட்சியமின்றி மேற்கொண்டு விரைவில் இந்த அச்சுறுத்தல்களிலிருந்து மீள்வோம்.” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/india/governments-levity-is-the-main-reason-for-corona-second-wave-says-rss-chief-mohan-bhagwat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக