Ad

புதன், 5 மே, 2021

திமுக எதிரி; அதிமுக மீது சவாரி - தமிழ்நாட்டில் இனி பா.ஜ.க-வின் வளர்ச்சி எப்படியிருக்கும்?

'தமிழ்நாட்டிலும் தாமரை மலர்ந்தேவிட்டது' என்று தங்கள் 20 ஆண்டு கனவு நிறைவேறியதைக் கொண்டாடித் தீர்க்கின்றனர் தமிழக பா.ஜ.க-வினர்! தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், இதுகுறித்து வெளிப்படையாக அறிக்கையே வெளியிட்டுவிட்டார்.

`தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில், 2021-ல் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பார்கள் என்று நாங்கள் சபதம் ஏற்றிருந்ததை இன்று நிறைவேற்றிக் காட்டிவிட்டோம்!' என்று மகிழ்ச்சியின் உச்சத்திலிருக்கிறார். தமிழக சட்டசபையில் பா.ஜ.க உறுப்பினர்கள் அடியெடுத்து வைத்து 20 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழ்நிலையில், மீண்டும் அந்தக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-க்களாகியிருப்பது சரித்திர சாதனைதான்!

பாரதிய ஜனதா தலைமை அலுவலகம்

தமிழக பா.ஜ.க-வின் இன்றைய வெற்றிக்கு அன்றே 'விதை' போட்டவர் இன்றைய தெலங்கானா-புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன்! 2014-ம் ஆண்டே மத்திய ஆட்சிப் பொறுப்புக்கு பா.ஜ.க வந்துவிட்டாலும், தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் வளர்ச்சி என்பது சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இந்த நிலையில்தான் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் தமிழிசை சௌந்தர்ராஜன் நியமிக்கப்பட்டார். அவர் வந்தபிறகுதான் `பா.ஜ.க என்றொரு கட்சி தமிழ்நாட்டில் அரசியல் செய்துவருகிறது' என்ற உண்மை பொதுமக்களுக்குத் தெரியவந்தது.

தமிழ்நாட்டில் பாரம்பர்யமிக்க திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில், பெரிய அரசியல் செல்வாக்கு இல்லாத கட்சி பா.ஜ.க என்றாலும்கூட, கட்சியை வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளில் பம்பரமாக சுற்றிச் சுழன்றார் தமிழிசை. ஆனாலும்கூட 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அந்தக் கட்சிக்கு படுதோல்வியே கிடைத்தது. இதையடுத்து 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் நாடு முழுக்க அசுர வெற்றி பெற்ற பா.ஜ.க தமிழ்நாட்டில் ஒரு இடம்கூட பிடிக்கமுடியாமல் மண்ணைக் கவ்வியது.

இதையடுத்து, `தமிழ்நாடு தனித்துவமிக்க மாநிலம். இங்கே மதவெறி ஊட்டக்கூடிய அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பில்லை. ஏனெனில், இது பெரியார் மண்! பகுத்தறிவு நிரம்பிய மக்களைக் கொண்ட மாநிலம். மத ரீதியிலான பிரசாரங்கள் தமிழ்நாட்டில் நடக்காது! இங்கே அனைத்து மதத்தினரும் சமத்துவத்தோடு, அண்ணன் தம்பிகளாகப் பழகிவருகிறோம்!'' என்றெல்லாம் அரசியல் ரீதியான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

ஆனாலும்கூட தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தமிழிசை சௌந்தர்ராஜன் தான் பங்கேற்கும் மேடைகளில் எல்லாம் `தாமரை மலர்ந்தே தீரும்!' என்று தொடர்ச்சியாக முழக்கமிட்டு வந்தார். ஆனால், அப்படி அவர் முழக்கமிடும் சமயங்களில் எல்லாம் அதைக் கிண்டலடிக்கும் விதமான மீம்ஸ்கள் வரிசைகட்டும். அந்தளவுக்கு தமிழ்நாட்டில், பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலை மக்களிடையே ஆழப் பரவியிருந்தது. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை தரும்போதெல்லாம், 'Gobackmodi' ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கானது.

தமிழிசை சௌந்தர்ராஜன்

ஆனால், இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் 'பா.ஜ.க பற்றிய பொய்யான பிம்பங்களை மக்களிடையே ஏற்படுத்தி வைத்திருக்கின்றன இங்குள்ள திராவிடக் கட்சிகள். அதையெல்லாம் உடைத்தெறிந்து தமிழ்நாட்டிலும் பா.ஜ.க-வை வெற்றிபெறச் செய்வோம்' என பா.ஜ.க தலைவர்களும் அரசியல் ரீதியான டெம்ப்ளேட் பதில்களை தட்டிவிட்டுக்கொண்டே இருந்தனர்.

பா.ஜ.க-வின் சித்தாந்தங்களின் மீது தமிழர்களுக்கு வெறுப்பு இருக்கிறதோ இல்லையோ... ஆனால், மத்தியிலுள்ள பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள் மீது அதீத வெறுப்புணர்வு இருந்துவருகிறது. காவிரியில் ஆரம்பித்து கல்வி வரையிலாக மத்திய பா.ஜ.க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே அமைந்துவந்திருக்கிறது. இதுவே மக்களின் வெறுப்புக்கு அடிப்படையான காரணம்.

மக்களின் இந்த உணர்வை மிகச்சரியாகப் புரிந்துகொண்ட தி.மு.க-வும் இதற்கேற்றபடி தன் அரசியல் நகர்வுகளை அமைத்துக்கொண்டது. குறிப்பாக தேர்தல் சமயங்களில், 'மோடி எதிர்ப்பு நிலை'யை முதன்மையானதாக எடுத்துக்கொண்டு பரப்புரை செய்தது. தி.மு.க-வின் இந்த அரசியல் புரிதல், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், இமாலய வெற்றியை ஈட்டித் தந்தது.

மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருந்துவந்த அ.தி.மு.க-வினருக்கும் இந்த உண்மை புரியாமலில்லை. ஆனால், அவர்கள் திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக அல்லது புலி வால் பிடித்த கதையாக, பா.ஜ.க கூட்டணியை உதறித் தள்ள முடியாத இக்கட்டில் சிக்கித் தவித்தனர். நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலிலும்கூட அ.தி.மு.க வேட்பாளர்கள், தங்கள் பரப்புரைகளில் பா.ஜ.க-வின் பெயரைப் பயன்படுத்துவதையோ அல்லது பா.ஜ.க தலைவர்களின் பரப்புரைக் கூட்டங்களில் கலந்துகொள்வதையோ தவிர்க்கவே விரும்பினர்.

அமித் ஷா - நரேந்திர மோடி

அ.தி.மு.க-வினரின் இந்த அரசியல் நிலைப்பாட்டைக்கூட எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தமிழக பா.ஜ.க வேட்பாளர்களேகூட, கட்சியின் பெயர் மற்றும் தங்கள் தலைவர்களது படங்களை பரப்புரையின்போது பயன்படுத்துவதை முடிந்தவரையில் தவிர்த்தே வந்தனர் என்பதுதான் மக்களை வியப்பு கலந்த குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனால், தமிழக பா.ஜ.க-வினர் வகுத்த தேர்தல் வியூகத்துக்கான விடை '4 எம்.எல்.ஏ-க்கள்' என்பதை இப்போதுதான் தமிழக மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றனர்.

எது எப்படியோ... தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆரம்பித்துவைத்த சபதத்தை இந்நாள் தலைவரான எல்.முருகன், நிறைவேற்றிக் காட்டிவிட்டார். '20 வருடங்களுக்கு முன்பே பா.ஜ.க சார்பில், 4 உறுப்பினர்கள் தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்தானே... ஆனாலும் அதன்பிறகு நடைபெற்றத் தேர்தல்களில் அந்தக் கட்சியினால் பெரிய அளவில் எதையுமே சாதிக்கமுடியவில்லைதானே' என்று இந்தமுறை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஏனெனில், 20 வருடங்களுக்கு முந்தைய அரசியல் சூழல்கள் இப்போது இல்லை. மத்திய ஆட்சிப் பொறுப்பை 2-வது முறையாக அசுர பலத்தோடு கைப்பற்றியிருக்கும் பா.ஜ.க., தாங்கள் செல்வாக்குப் பெறாமல் விட்டுவிட்ட மாநிலங்களில் எல்லாம் கட்சியை வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளில் அதீத கவனம் செலுத்திவருகிறது. இதன் வெளிப்பாடு, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும்கூட வெளிப்படையாகத் தெரிந்தது.

மேற்கு வங்கத்தில், கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்தை தகர்த்து ஆட்சியைக் கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸைத் தோற்கடிக்கும் முயற்சியில், பா.ஜ.க-வின் தேசியத் தலைமை எடுத்துக்கொண்ட முயற்சிகளும் வியூகங்களும் மற்ற மாநிலக் கட்சிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. ஆனால், பா.ஜ.க-வின் அத்தனை முயற்சிகளுக்கும் ஈடுகொடுத்து அல்லது பதிலடி கொடுத்து சிங்கப்பெண்ணாக தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி!

பா.ஜ.க வியூகம்

இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியலிலும் பா.ஜ.க-வை வளர்த்தெடுக்க அந்தக் கட்சியின் தேசியத் தலைமை என்னென்ன முடிவுகளை வியூகங்களை வகுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் இப்போதே எகிற ஆரம்பித்துவிட்டது. சித்தாந்த ரீதியிலாகவே பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கைகளைக் கொண்ட தி.மு.க ஆட்சியில், என்னென்ன வித்தைகளை இறக்கிவிட பா.ஜ.க முயற்சி செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிறைந்த கேள்வியை பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ப்ரியனிடம் கேட்டபோது,

``கூட்டணிக் கட்சி என்றில்லாது தத்துவார்த்த ரீதியாகவுமே அ.தி.மு.க தங்களுக்கு உடன்பட்ட கட்சி என்றே பா.ஜ.க-வினர் நினைக்கிறார்கள். அதேசமயம் சித்தாந்த ரீதியாகவே தன்னுடைய எதிரிக் கட்சி தி.மு.க-தான் என்று உறுதியாக நினைக்கிறது பா.ஜ.க. நாளை மோடிக்கு எதிராகக்கூட ஸ்டாலின் தலைவராக முன்னிறுத்தப்படலாம் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது. இதையெல்லாம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்திவிட வேண்டும் என்றால், அதற்கு இந்துத்துவா பிரசாரம்தான் கைகொடுக்கும் என்றும் நம்புகிறார்கள். அதனால்தான் பிரதமரேகூட 'வேல், வேல்' என்று சொல்லித்தான் பிரசாரத்தை ஆரம்பிக்கிறார்.

Also Read: வேலூர் :`வீரமணியை நம்பாதீர்கள் என்று அன்றே சொன்னோம்' - தோல்விக்கு காரணம் கூறும் அதிருப்தியாளர்கள்

இந்த நிலையில், எதிரியான தி.மு.க-வை நேரிடையாக பா.ஜ.க வீழ்த்தவேண்டும். ஆனால், பா.ஜ.க-வின் பின்னணியில் இருந்துகொண்டு செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் 'தி.மு.க., இந்து விரோத கட்சி' என்ற பிரசாரத்தை கிராம, நகர்ப்புற மக்களிடையே தொடர்ந்து செய்துவருகிறார்கள். 'தாமரை, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' என்று மாசி, பங்குனி மாத திருவிழாக்களின்போது வெளிப்படையாக கோயில்களிலேயேகூட இதற்கான பிரசாரங்கள் செய்யப்பட்டு வந்ததை நாமெல்லாம் அறிவோம்.

ஆனால், இவர்களது பிரசாரங்கள் மக்களிடையே எடுபடவில்லை என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன. அதேசமயம், இதுபோன்ற பிரசாரங்கள் குறித்து அலட்சியமாக இருந்துவிடவும் முடியாது. ஏனெனில், தி.மு.க கூட்டணியிலுள்ள 'மனித நேய மக்கள் கட்சி' வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதைக்கூட, 'இந்து மக்கள் இஸ்லாமிய வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கின்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் இதுபோன்று பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரிக்கின்றார்களா...' என்ற விஷமப் பிரசாரமாக திசை திருப்பிவருவதையும் கேள்விப்படுகிறோம்.

ப்ரியன்

அடுத்த 5 வருடங்களில், தமிழக அரசியலில், பா.ஜ.க செயல்படுத்தப்போகிற அரசியல் வியூகங்கள் தி.மு.க-வுக்குப் பாதகத்தை ஏற்படுத்துமோ இல்லையோ நிச்சயம் அ.தி.மு.க-வுக்குப் பெரும் சோதனையாகவே முடியும். அதாவது 2024 சட்டமன்றத் தேர்தலை 'பா.ஜ.க வெர்சஸ் தி.மு.க' அல்லது சம பலம் வாய்ந்த பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியோடு தி.மு.க-வை எதிர்ப்பது என்ற நிலைக்கு அரசியலை மாற்றுவதுதான் பா.ஜ.க-வின் வியூகமாக இருக்கமுடியும்.

பா.ஜ.க-வின் இந்த சூழ்ச்சியிலிருந்து தப்பித்து, 'நாங்கள்தான் தி.மு.க-வின் நேரடி எதிரியாக இருக்கப்போகிறோம்' என்று நிரூபிப்பது அ.தி.மு.க தலைவர்களின் கைகளில்தான் இருக்கிறது. இப்போதே, 'பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றுப்போனோம்', 'அ.ம.மு.க எங்கள் வாக்குகளைப் பிரித்துவிட்டதால்தான் தோல்வி' என்றெல்லாம் சொல்லிவருகிறார்கள். ஆக, வழக்குகளுக்குப் பயந்து பா.ஜ.க-வுடனான கூட்டணியையே தொடரப்போகிறார்களா, பிரிந்துபோனவர்களை ஒன்றிணைத்து கட்சியை வலுப்படுத்தப் போகிறார்களா... என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும்.

Also Read: சென்னை: அதிமுக பிரமுகரைக் கொலை செய்து நாடகமாடிய மனைவி - காட்டிக் கொடுத்த சாக்கு மூட்டை!

பா.ஜ.க கூட்டணியிலேயே அ.தி.மு.க தொடர நேர்ந்தால், இந்த 5 ஆண்டுகால அரசியலில், அ.தி.மு.க என்ற கட்சியையே கரைத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிடும் பா.ஜ.க. ஆக, இந்தப் பிரச்னைகளை எல்லாம் சரிசெய்து, 'தி.மு.க-வுக்கு மாற்றாக நாங்கள்தான் உறுதியான கட்சி' என்ற நிலைக்கு அ.தி.மு.க தலைவர்கள் எப்படி தகவமைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்று இனிமேல்தான் பார்க்கவேண்டும்'' என்கிறார் தெளிவாக.

இதையடுத்து தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனிடம் 'கட்சியை வளர்த்தெடுப்பதற்காக என்னென்ன வியூகங்களை வகுத்து செயல்படப் போகிறீர்கள்...' என்றக் கேள்வியை கேட்டபோது, ``தமிழக மக்களின் நலன் மற்றும் அவர்களது வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக நிற்போம். மத்திய அரசுத் திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவருவதிலும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே எடுத்துச்சொல்வதிலும் முழுமுனைப்புடன் செயல்படுவோம்!

எல்.முருகன்

மற்றபடி கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வையே நாளடைவில் பா.ஜ.க முழுங்கிவிடும் என்பதெல்லாம் கற்பனையான குற்றச்சாட்டுகள். தமிழ்நாட்டில் எங்கள் கட்சியை எப்படியெல்லாம் வளர்த்தெடுக்கலாம் என்பது குறித்தான எங்கள் அரசியல் வியூகங்களை எல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது!'' என்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/policies/bjp-strategy-for-growth-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக