Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

தேவேந்திர குல வேளாளர் சட்டத் திருத்தம்; சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? #TNElection2021

ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, `தேவேந்திர குல வேளாளர்’ என அழைக்கும் மசோதா மக்களவையில் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இது அந்த மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் கண்டிப்பாக வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அது எதிரொலிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய பட்டியலினத்தின் ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என்பது அந்தச் சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதற்கான தொடர்ச்சியாக போராட்டங்களை அந்தச் சமுதாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் நடத்திவந்தன.

சிவகங்கை

அதன் காரணமாக, கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் மூத்த ஆட்சிப் பணி அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் தமிழக அரசு, குழு ஒன்றை அமைத்தது. அந்தக்குழு பல்வேறு தரப்பினருடைய கோரிக்கைகள் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் அறிக்கைகளைக் கருத்தில்கொண்டு மாநிலப் பட்டியலினத்திலுள்ள வாதிரியான் உட்பிரிவினையையும் உள்ளடக்கி தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி ஆகிய ஏழு உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களை `தேவேந்திர குல வேளாளர்’ என பொதுப்பெயரிடுவதற்குப் பரிந்துரைத்தது. மேலும், தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரிட்டாலும் மேற்குறிப்பிட்ட தற்போது ஏழு சாதி உட்பிரிவுகளிலும் சமூக, பொருளாதார நிலைகளைக் கருத்தில்கொண்டு பட்டியலின வகுப்பில் தொடரும் என்று குழு பரிந்துரைத்தது.

இந்தநிலையில், கடந்த டிசம்பர் மாதம், சிவங்கை சுற்றுப்பயணத்தின்போது, ஏழு உட்பிரிவுகளை ஒரே பெயரில் அழைக்கும் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு சட்டம் அமல்படுத்தப்படும்.

பிப்ரவரி 14-ம் தேதி சென்னை வந்திருந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய அவர், தேவேந்திர குல வேளாளர் சட்டத் திருத்தம் குறித்தும் பேசினார். ``தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்கிறேன். தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் என அரசியல் சாசனத் திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் கோரிக்கைக்கு நீண்டகாலம் தமிழக அரசு ஆதரவு கொடுத்துவருகிறது. தேவேந்திர குல வேளாளர்களின் கண்ணியத்தை காலனிய அரசு பறித்தது. 2015-ல் டெல்லியில் தேவேந்திர குல வேளாளர்களுடன் சந்திப்பு நடத்தினேன். அப்போது தேவேந்திர என்பதும் நரேந்திர என்கிற என் பெயரும் ஒன்றாக இருக்கிறது என்றேன். தேவேந்திர குல வேளாளர் என்பது பெயர் மாற்றம் அல்ல - நீதியானது. தேவேந்திர குல வேளாளர்கள் நாகரிகம் சார்ந்தது'' என்று பிரதமர் மோடி பேசினார்.

Ramadoss twit

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இந்த சட்டத் திருத்தத்தையும் மோடியின் பேச்சையும் வரவேற்றிருக்கிறார்கள்.

இந்தநிலையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் ஷ்யாம் கிருஷ்ணசாமியிடம் பேசினோம்.

``புதிய தமிழகம் கட்சி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் மற்றும் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடிவருகிறது. கடந்த நான்காண்டுகளாக, தீவீரமான போராட்டங்கள், மாநாடுகள் நடத்தியிருக்கிறோம். டெல்லி வரை சென்று பேரணிகள் நடத்தியிருக்கிறோம். அதன் விளைவாக. 2019 தேர்தல் பிரசாரத்தின்போது எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார் பிரதமர் மோடி. நாங்களும் ஓராண்டுக்கு மேலாகக் காத்துக்கொண்டிருந்தோம்.

ஷ்யாம் கிருஷ்ணசாமி

தற்போது ஏழு பிரிவுகளை ஒன்றாக்கி சட்ட மசோதா பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேறிவிடும் என்று நம்புகிறோம். அதைவிடச் சிறப்பு என்னவென்றால் பிரதமர் மோடி, எங்களின் கோரிக்கை, சுய கௌரவத்துக்கான சமூக நல்லிணக்கம் சார்ந்த கோரிக்கையென்று அதன் சாராம்சத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு பேசியதுதான். அதற்கு எங்களின் மனமார்ந்த நன்றி. அதேவேளையில் அவர் பேசியதற்கான அங்கீகாரம் பட்டியலிலிருந்து வெளியேற்றினால்தான் கிடைக்கும். அதையும் அடுத்த கூட்டத்தொடரிலேயே அறிவித்துவிட்டால், முழுமனதோடு தேவேந்திர குல வேளாளர்கள் கொண்டாடுவார்கள். தேர்தலுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை இது எங்களின் நீண்டகால கோரிக்கை'' என்கிறார் அவர்.

தமிழக அரசியல் களத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை இந்த மசோதா ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம்.

``தேவேந்திர குல வேளாளர்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் கிடைத்திருப்பதாகவே நான் பார்க்கிறேன். பல அரசியல் தலைவர்கள் இந்தச் சமூகத்தை வெறும் வாக்குவங்கியாகத்தான் வைத்திருந்தனர். திராவிடக் கட்சிகள் இந்தச் சமூகத்துக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்தச் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் முக்கியக் காரணம். மோடி தற்போது இந்தச் சமூகத்துக்குக் கொடுத்திருக்கிற முக்கியத்துவத்தின் காரணமாக, இதுவரை அந்த மக்களின் வாக்குகளைப் பெற்றுவந்த தி.மு.க இன்னும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

ரவீந்திரன் துரைசாமி

தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் கணபதி பேசும்போது,

``அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்கு ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் அப்படியே விழ வாய்ப்பிருக்கிறது. அதேவேளையில், வேளாளர் என்கிற பட்டத்தைக் கொடுக்கக் கூடாது எனச் சில சமூகங்கள் போராடிவந்தன. முதல்வரை இரண்டுமுறை நேரடியாகச் சந்தித்தும் தங்கள் கோரிக்கை குறித்துப் பேசினர். அவர்கள் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பிருக்கிறது. அந்தச் சமூகங்களைச் சேர்ந்த சங்கங்கள் அது சார்ந்த பிரசாரங்களை மக்களிடம் தீவிரமாக முன்னெடுத்தால் அது நடக்கும்.

Also Read: தேவேந்திர குல வேளாளர்! - பெயர் மாற்றம்... சட்டத்தின் சாத்தியங்கள் என்ன?

ஆனாலும், பொதுத்தேர்தல்களில் சாதி பெரிய அளவில் எடுபடாது என்பதே என் கருத்து. தி.மு.க வேண்டாம், அ.தி.மு.க வேண்டாம் என மக்கள் முடிவெடுத்து அதற்கேற்பதான் வாக்களிப்பார்கள். சாதி, மதம் போன்ற விஷயங்கள் பின்னுக்குப் போய்விடும். உதாரணமாக, 91-96 ஜெயலலிதா ஆட்சியின் மீது கடுமையான ஊழல் புகார்கள் இருந்தன. மக்களிடம் மிகப்பெரிய அளவில் ஆட்சியின் மீதான அதிருப்தி இருந்தது. அதை மடை மாற்றும்விதமாக ஒவ்வொரு சாதியினரையும் மகிழ்விக்கும் வகையில் ஜெயலலிதா பல முன்னெடுப்புகளைச் செய்தார். உதாரணமாக, ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களின் பெயரில் மாவட்டம், போக்குரத்துக் கழகங்கள், அவர்களுக்கு பொது இடங்களில் சிலைகள் எனப் பல முன்னெடுப்புகளைச் செய்தார். ஆனால், தேர்தல் முடிவுகளில் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தி.மு.க - த.மா.கா கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதேபோல, 2001 தேர்தலில், அ.தி.மு.க - காங்கிரஸ், பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்ட்கள் என மிக வலிமையான கூட்டணி அமைந்தது.

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

தி.மு.க-வுக்கு வலிமையான கூட்டணி இல்லாமல் போகவே, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, கண்ணப்பனின் மக்கள் தமிழ்த்தேசம், கு.ப.கிருஷ்ணனின் தமிழர் உள்ளிட்ட பல சாதிக் கட்சிகளை இணைத்துப் போட்டியிட்டார். ஆனால், தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருந்தன. அதனால், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் வேண்டுமானால் சாதி சார்ந்த முன்னெடுப்புகள் எடுபடலாம். பொதுத்தேர்தல்களில், குறிப்பிட்ட தொகுதிகளில், பகுதிகளில் வேண்டுமானால் சேதத்தை ஏற்படுத்தலாம். அதேபோல,தேர்தல் நெருக்கத்தில் ஏதாவது சென்சிட்டிவான சம்பவங்கள் நடந்தால் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. மற்றபடி சாதி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதே கடந்தகால வரலாறு'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/devendrakula-vellalar-name-change-significance-and-background

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக