Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

கோவை: `கம்யூனிஸ்ட்கள் கூட நிதி கேட்கும் அளவுக்கு இல்லை; ஆனால், ம.தி.மு.க!' - வைகோ உருக்கம்

சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகம் முழுவதும் ம.தி.மு.க சார்பில் தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பெறப்பட்ட கட்சி நிதியான ரூ. 80.80 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள ம.தி.மு.க மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

ம.தி.மு.க வைகோ

Also Read: மதுரை: `தி.மு.க கூட்டணியில் குறைந்த இடங்களே கிடைக்கும்; வேறு வழியில்லை!’ - வைகோ

இதில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய வைகோ, ``தற்போது அரசியல் கட்சிகள் நிதி கேட்டுச் செல்லும் நிலையில் இல்லை.

நிதி அவர்களிடம் குவிந்து கிடக்கிறது. நிதியை வாரி வீசும் சக்தி அவர்களிடம் இருக்கிறது. நிதிகேட்டும் செல்லும் அளவுக்கு தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட இல்லை. ஆனால் ம.தி.மு.க மட்டும்தான் நிதி கேட்டு இன்னமும் மக்களிடம் செல்கிறது. மக்கள் மனமகிழ்ச்சியோடு நிதி கொடுப்பதுதான் நமக்கான அங்கீகாரம். சுற்றுச்சுழல் அமைப்புகளை பிற கட்சிகள் தற்போது தொடங்கி வருகின்றன.

வைகோ

ஆனால், ம.தி.மு.க சுற்றுச்சுழல் விவகாரத்தில் மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்துக்கே வழிகாட்டும் கட்சியாக, நன்மைக்காக , வாழ்வாதாரங்களை மீட்கப் போராடும் கட்சியாக ம.தி.மு.க இருந்து வருகிறது.

பதவிதான் பெரிது என்றால் கேபினட் வாய்ப்பு வந்தபோது பதவியை ஏற்றிருக்க முடியும். சிறையில் இருந்து வந்தவுடன் போட்டியிட்டிருந்தால் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க முடியும். குறுக்குசால் ஓட்டும் வேலைகள் ம.தி.மு.க-விடம் எடுபடாது. திராவிட இயக்கத்தைக் காக்க, சனாதன படையெடுப்பைத் தடுக்க தி.மு.க- வுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தோம்.

வைகோ

கொள்கை, லட்சியத்துக்கான முறையில் செயல்பட வேண்டும். விமர்சனங்களுக்கு ஆளாகிற நிலைப்பாட்டை எடுக்கமுடியாது. தி.மு.க தலைமையிலான அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புதான் அதிகம். தேர்தலுக்குப் பின்னர் பொதுகுழுவைக் கூட்டி சில நல்ல முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/mdmk-vaiko-speech-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக