Ad

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

"சோசியல் மீடியாவையும் தாண்டி பல திட்டங்கள் இருக்கு..." ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக் நிறுவனம் எலெக்ட்ரானிக் கேட்ஜெட் சந்தையில் தனக்கான புதிய கணக்கினை தொடங்கவுள்ளது. சமூக வலைதள சந்தையில் கொடிகட்டி பறக்கும் ஃபேஸ்புக் கேட்ஜெட் வணிகத்திலும் ஒரு கை பார்க்க வேண்டும் என பல நாள்களாக கனவு கண்டு வருகிறது. அப்படியான பல திட்டங்களுடன் முதல் படியாக ஸ்மார்ட்வாட்ச் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக் ஸ்மார்ட்வாட்ச் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு செயல் தளம் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. இருப்பினும் இன்னும் அதிகாரபூர்வமாக கூகுள் வியர் ஓஎஸ் இயங்குதள பயன்பாடு குறித்து எந்த விளக்கமும் ஃபேஸ்புக் தரப்பில் தரப்படவில்லை. இதற்கிடையில் ஃபேஸ்புக் தனக்கென சொந்தமாக ஓர் இயங்கு தளத்தினை (ஓ எஸ்) உருவாக்கிக்கொள்ளவும் வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரிகிறது.

மார்க் சக்கர்பெர்க்

இந்த ஸ்மார்ட் வாட்ச் மெசேஜ் நோட்டிஃபிகேஷன், உடற்பயிற்சி மற்றும் உடல்நல கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்துவரும் எலெகட்ரானிக்ஸ் சூழலுக்கு ஏற்ப பெரு நிறுவனங்கள் தங்களை தகவமைத்துக்கொள்ளும் வரிசையில் பேஸ்புக், ஓகுலஸ் வி.ஆர் (virtual reality) ஹெட்செட்டுகள் மற்றும் வீடியோ கான்ஃபரென்ஸிங் சாதனங்களை அடுத்தடுத்து வெளியிட வரிசைப்படுத்தி வைத்துள்ளது.

மேலும், முதன் முறையாக கேட்ஜெட் காதலர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ஸ்மார்ட் கண்ணாடிகளை அடுத்த வருடம் சந்தைப்படுத்த பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. ரெய்-பான் நிறுவனத்துடன் இதற்காகக் கைகோத்துள்ளது ஃபேஸ்புக்.

இவற்றைத் தவிர, போக்கேமான் கோ விளையாட்டில் வருவது போல ஆகுமென்டெட் ரியாலிட்டி (augmented reality) அதாவது நிஜ உலகின் சூழலை முழுவதுமாக கணினிக்குள் கொண்டுவரும் தொழில்நுட்ப ஆராய்ச்சியை 'புராஜக்ட் ஆய்ரா (project aira)' என்ற பெயரில் பேஸ்புக் துவங்கியுள்ளது.

ஃபேஸ்புக்

ஸ்மார்ட்வாட்ச் பற்றித் தகவல்கள் சிறிதும் கசிந்துவிடாமல் ஃபேஸ்புக் ரகசியம் காப்பதே அதன் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது. மறுபக்கம், தொடுதிரை (touch screen) அல்லது பட்டன்ஸ் (button) உதவியின்றி நேரடியாக மனித மூளை மற்றும் கணினியை இணைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராயும் CTCR லேப்ஸை ஃபேஸ்புக் கடந்த 2019-ம் ஆண்டு வாங்கியது.

அதனால் இனி ஃபேஸ்புக்கின் பாய்ச்சல் சமூக வலைத்தளங்கள் தாண்டி மென்பொருள், கேட்ஜெட் என அனைத்து இடங்களிலும் இருக்கும் என நம்பலாம்!


source https://www.vikatan.com/technology/gadgets/facebook-plans-to-launch-smartwatches-soon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக