Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

`உதயநிதியை விடவா மோசமாகப் பேசிவிட்டேன்?' - கொதிக்கும் நடிகர் ராதாரவி

நடிகை நயன்தாராவைப் பற்றி தவறாகப் பேசினார் என்ற சர்ச்சையைத் தொடர்ந்து தி.மு.க-விலிருந்து கடந்த ஆண்டு நடிகர் ராதாரவி வெளியேறினார். சில மாதங்களுக்கு முன்பாக அவர் பா.ஜ.க-வில் இணைந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மேடைகளில் பேசிவரும் ராதாரவி, விகடன் டி.வி-யின் `பிரசார பீரங்கி’ நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாரஸ்யமான பிரசார அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ராதாரவி

எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதாவி துப்பாக்கியால் சுட்டார் என்ற பரபரப்பான சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் கொந்தளிப்பான சூழல் நிலவிய நேரத்தில்,1967-ம் ஆண்டு காமராஜர் தலைமையிலான பொதுக்கூட்டத்தில் ராதாரவி பேசியிருக்கிறார். அதுதான் அவரது முதல் மேடைப்பேச்சு.

``காமராஜரின் தூண்டுதலில்தான் எம்.ஜி.ஆரை என் தந்தையார் எம்.ஆர்.ராதா சுட்டுவிட்டார் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் ஆவடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசுவதற்கு என்னை அழைத்தார்கள். அந்தக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் பங்கேற்றார். பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த சிறுவனான நான், அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை விமர்சித்துப் பேசினேன். உடனே, பின்னால் என் சட்டையைப்பிடித்து இழுத்த காமராஜர், `இப்படியெல்லாம் பேசக்கூடாது’ என்று கண்டித்தார். அது எனக்கு மிகப்பெரிய பாடமாக இருந்தது” என்று தன் முதல் மேடைப்பேச்சு அனுபவத்தை ராதாவி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

ராதாரவி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேச்சைக் கேட்டு தி.மு.க-வில் சேர்ந்ததாகக் குறிப்பிட்ட ராதாரவி, ``கலைஞர் மாதிரி ஒரு தலைவரைப் பார்க்க முடியாது. தேர்தல் பிரசாரப் பயணத்துக்கு ரூட் போடுவதில் கலைஞரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் வழித்தடங்களையும் கரைத்துக் குடித்தவர் கலைஞர். இதை அம்மா ஜெயலலிதாவிடமே ஒருமுறை கூறினேன். அதைக்கேட்டு அவர் ஆச்சர்யப்பட்டார்” என்றார் ராதாரவி.

தி.மு.க பேச்சாளர்கள் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் ஆகியோரின் பேச்சுகள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ராதாரவி, ``வெற்றிகொண்டான் மிகச் சிறப்பான பேச்சாளர். என்னை ஒருமுறை அவர், `எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு மவன் இருக்கான். அவன் ராதாவுக்குத்தான் பொறந்தானா எனத் தெரியல.. அ.தி.மு.க-வுக்குப் போய் இப்படிப் பேசுறானே...’ என்று ஒரு மேடையில் பேசிவிட்டார். நான் உடனே அவருக்கு போன் போட்டு, ``என்ன மாமா... என் மேல சந்தேகத்தைக் கிளப்பிட்டீங்க..’ என்று கேட்டேன்...” என்று நகைச்சுவையாக ராதாரவி குறிப்பிட்டார்.

ராதாரவி

``எப்போதும் சர்ச்சையான கருத்துகளையே பேசுகிறீர்களே?” என்று நாம் முன்வைத்த கேள்விக்கு, ``சர்ச்சையாகப் பார்த்தால் எல்லாமே சர்ச்சைதான். நடிகை நயன்தாராவைப் பற்றி நான் புகழ்ந்துதான் பேசினேன். ஆனால், ஊடகங்களில் என் ஒரு பாதி பேச்சை மட்டும் சர்ச்சையாக்கிவிட்டார்கள். நான் தவறாகவே பேசவில்லை. தி.மு.க-விலிருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அது ஒரு காரணமாக அமைந்துவிட்டது. தம்பி உதயநிதியின் நிர்பந்தத்தால் அப்படியொரு முடிவை தி.மு.க தலைமை எடுத்துவிட்டது. நயன்தாரா அல்லாமல் வேறு யாரையாவது அப்படி நான் பேசியிருந்தால் என் மீது நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். பெண்களைப் பாதுகாக்கும் இயக்கமாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க., இப்போது சசிகலாவைப் பற்றி தம்பி உதயநிதி தவறாகப் பேசியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது? உதயநிதி பேசியதைவிடவா நான் மோசமாகப் பேசினேன்?” என்று கொந்தளித்தார்.


ஜெயலலிதாவுக்காக ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்தபோது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்...

டி.டி.வி.தினகரன் பற்றி சுவாரஸ்யமான சம்பவங்கள்... உள்பட அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலான தன் அரசியல் மேடை அனுபவங்கள், பிரசாரப் பயணங்கள் என பல முக்கிய தருணங்களை ராதாரவி நம்முடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அந்த நேர்காணலின் முதல் பாகத்தை கீழே காணலாம்.



source https://www.vikatan.com/news/politics/actor-radha-ravi-special-interview-for-vikatan-prachara-beerangi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக