Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

மதுர மக்கள் - 5 | "இல்லைன்னு சொல்லக்கூடாதேன்னு கடன் வாங்கி உதவி செய்றேன்!"- பிணங்களை எரியூட்டும் ஹரி

”அம்மா நிறமாசமா இருந்தப்போ பெரியகுளத்துக்கு நடந்தே போயிருக்கு. பிரசவமும் ஆகி, பக்கத்துல சுனையில குளிக்கப்போயி ஜன்னி வந்து செத்துப்போச்சு. கூடவே அந்த கைப்புள்ளையும் இறந்து போச்சு. அம்மா இறந்த ஆறுமாசத்துல அப்பாவும் இறந்துட்டாரு. அப்போ எனக்கு பன்னிரண்டு வயசு. கெளம்பி இதோ இந்த தத்தனேரி சுடுகாட்டுக்கு வந்துட்டேன். 46 வருஷமா இங்க இருக்கேன். எந்த நிமிஷமும் நிச்சயமில்லாத வாழ்க்கைதானே?" நம்மிடமே எதிர்கேள்வி கேட்டு புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் ஹரி.

மதுரை தத்தனேரி மயானத்தில் பிணங்களுக்கு எரியூட்டும் பணி செய்து வருகிறார். வேலை நேரம் போக மீதி நேரங்களில் தன் பொருளாதார சக்திக்கும் மீறி தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கல்விக்கான செலவு, பார்வையற்றவர்களுக்குத் தேவையான உதவிப்பொருட்கள், கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்குத் தேவையான உதவி எனத் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

பெரிய அளவுல வருமானம் இல்ல... ஆனாலும் எப்படி அடுத்தவங்களுக்கு உதவி செய்ய முடியுது..?

ஹரி

"மனுசனுக்கு ஆறடிதான் சொந்தம்னு சொல்லுவாங்க. உங்க உடம்ப புதைச்சா அதிகபட்சம் மூணுமாசம் தான். அப்பறம் அதே இடத்துல குழிய தோண்டி வேற உடம்ப புதைச்சிருவாங்க. எரிச்சா அது கூட இல்ல, மறுநாளே இன்னொரு உடம்பைப் படுக்கபோட்டுருவோம். அந்த ஆறடி கூட நமக்கு சொந்தம் இல்லைதானே? ஆனாலும் எதைப்பத்தியும் கவலைப்படாம துரோகம் திமிர் ஆணவம்னு மனுச வாழ்க்கை எதையாச்சும் சேர்க்கணும்னு எதுக்காச்சும் ஓடிக்கிட்டேதானே இருக்கு.

இதோ பார்க்குறீங்கதானே... இன்னைக்கு மட்டும் பத்து சடலம். எவ்வளவோ மரணங்களைப் பார்த்துட்டேன். இதுவரைக்கும் ரெண்டரை லட்சத்துக்கும் அதிகமான உடம்புகளுக்கு எரியூட்டிருக்கேன். ஒவ்வொரு தடவையும், சொந்த பந்தம்னு எல்லாரும் வந்து காரியம் பண்ணிட்டு போறப்போ மனசு கணத்துக்கெடக்கும். இதைவிட அடையாளம் தெரியாத பிணங்களை எல்லாம் கொண்டு வர்றப்போ, 'என்னத்த மனுஷ வாழ்க்கை... இருக்க வரைக்கும் நம்மள சுத்தி இருக்கவங்களுக்கு கொஞ்சமாச்சும் நல்லது பண்ணிட்டு போயிரணும்'னு தோணும். அப்படி தோணுனப்போதான் நமக்கும் கீழ எவ்வளோ பேரு இருப்பாங்க... அவுங்களுக்கும் எதாச்சும் செய்யணும்னு செய்ய ஆரம்பிச்சேன்.

ஹரி

இங்க வந்து சேர்ந்தப்போ, அடக்கம் பண்ண உடம்புக்குப் படையலா கொண்டு வர்ற பலகாரங்கள்தான் எனக்கு சாப்பாடு. ஒரணா இரண்டனானு ஆரம்பிச்சி இப்போ 12 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு இருக்கேன். யாராச்சும் எதும் இல்லைன்னு வந்து நின்னா மனசு கேட்க மாட்டேங்குது. முடிஞ்ச அளவுக்கு இல்லைன்னு சொல்லி வர்றாவங்களுக்கு நாமலும் இல்லைன்னு சொல்லக்கூடாதேன்னு என்கிட்ட இல்லைன்னாலும் கடன் வாங்கி செய்றேன். அதுல மனசு நிறைஞ்ச மாதிரி சந்தோசம் கிடைக்குது."

இந்த சுடுகாட்டுல எப்படி இவ்வளவு பூச்செடி மரம் எல்லாம்?

"எல்லாம் மதுரை மாநகராட்சியும் கமிஷனரும் குடுத்த சுதந்திரம்தான். இந்தக் காலத்துப் பசங்களை நினைச்சா கொஞ்சம் வருத்தமா இருக்கு. மது, போதைன்னு தன்னை பத்தியோ இந்தச் சுற்றுப்புறத்த பத்தியோ கவலை இல்லமா இருக்காங்க. சும்மாதானே இருக்கோம்னு செடி நட்டு வைக்க ஆரம்பிச்சேன். இதுவரை ஒரு 2,600 செடி நட்டு வச்சுருப்பேன். அப்போதான் நம்ம சுடுகாட்டுக்குள்ளயும் இது பண்ணலாம்னு தினம் பராமரிச்சுட்டி இருக்கோம். எதுவுமே பிளான் பண்ணி பண்ணது இல்ல. இப்போ பார்க்கவும் அழகா இருக்குல்ல!"

ஹரி

கடன் வாங்கி செய்றதாலா வீட்டுல ஒண்ணும் சொல்றது இல்லையா..?

"1980 வாக்குலதான் கல்யாணம். மனைவி பேரு லெட்சுமி. எனக்கு ஆதரவுன்னு யாரும் இல்லைன்னு பெரியவங்களா பார்த்து சொன்ன பொண்ணுதான் லெட்சுமி. மீனாட்சி அம்மன் கோயில்ல மொத்தமே பதினோரு பேரு முன்னால வச்சு தாலி கட்டுனேன். அப்போ இருந்தே அவளுக்கு நான் பண்றது பழகிப்போச்சு. எங்களுக்கு குழந்தை இல்லை. ஒரு பொம்பளபிள்ளைய எடுத்து வளர்த்தோம். இப்போ அந்தப் புள்ளைக்கும் கல்யாணம் பண்ணி குடுத்து அவுகளுக்கு ரெண்டு புள்ள இருக்கு. இதுவரைக்கும் ஒண்ணும் சொன்னது இல்ல. இப்போதான் கொஞ்ச நாளா, செய்றது எல்லாம் சரிதான்யா, கடன் வாங்கியும் செஞ்சுட்டு இருக்க எப்போ கடனை அடைக்கப்போறன்னு கேட்குறாங்க. இதோ இப்ப பழங்காநத்தத்துல இருக்க இந்த வீட்டுக்கு வாடகை 4,000 ரூபாய். வீட்டைக் காலிபண்ணிட்டு இரண்டாயிரத்துக்கு எங்கயாச்சும் வீடு கிடைக்குமான்னு தேடணும்.

ஹரி, அவரின் மனைவி லட்சுமி

இன்னும் ஒரு வருசம் ஆறு மாசத்துல இந்த வேலைக்கு ரிட்டையர்மெண்ட் கிடைச்சுரும். அடுத்து வேலை பார்க்கமுடியுமான்னு தெரியல.ஆனாலும் கார்ப்பரேஷன்ல இப்போவே தினக்கூலி வேலைக்குச் சொல்லிவச்சிருக்கேன். கடனை அடைக்கணும்ல!" (சன்னமாக சிரிக்கிறார்)

எதுக்காக இதெல்லாம் பண்ணனும்?

ஹரி

"எந்த நோக்கமும் இல்ல. மனசுக்கு பிடிச்சுருக்கு... அதான் பண்றேன். நாளைக்கே நான் செத்தாகூட என் உடம்பையும் மெடிக்கல் காலேஜுக்கு குடுத்துரணும்னுதான் இருக்கேன். மண்ணு திண்ணப்போற உடம்புதானே... யாருக்காச்சும் கொஞ்சம் பிரயோசனமா இருக்கட்டுமே!"



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/madurai-graveyard-worker-hari-helps-people-without-hesitation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக