Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

``ஆர்.எஸ்.எஸ்-போல காங்கிரஸ் கட்டமைப்பை உருமாற்ற நினைக்கிறார் ராகுல்!'' - பீட்டர் அல்போன்ஸ் தடாலடி

வட இந்திய அரசியலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி முன்னேறிவரும் பா.ஜ.க-வுக்கு தென்னிந்திய அரசியல் மிகப்பெரும் சவாலாக இருந்துவருகிறது. தமிழ்நாட்டில், வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலில் கால் ஊன்றிவிட வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க-வும், அந்த முயற்சியை தடுத்துவிடும் வேகத்தில் காங்கிரஸ் கட்சியும் களமாடிவருகின்றன.
பரபரப்பான இந்த அரசியல் ஆட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் பேசினேன்.

``அரசியல்ரீதியாக பா.ஜ.க-வின் தொடர் வெற்றிகளை கவனித்துவருகிறீர்களா?''

``இந்தத் தேர்தலில், சில சீட்டுகளைப் பெற வேண்டும் அல்லது ஆட்சி அமைக்க வேண்டும் என்ற சராசரியான நோக்கங்களைக் கொண்டிருப்பவர்கள் அல்ல பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும். தத்துவார்த்தரீதியாக ஒரு மாநிலத்தை அப்படியே கபளீகரம் செய்துகொள்வதுதான் அவர்களது செயல்முறைத் திட்டம்.
அதனால்தான் ஒரு மாநிலத்தின் சமூக, பொருளாதார, பூகோளங்களையெல்லாம் ஆராய்ந்து அதில் ஒரு வாக்குவங்கியை உருவாக்குவதற்கான யுக்திகளை முதலில் வகுப்பார்கள். பின்னர் அந்த யுக்திகளை நடமுறைப்படுத்துவதற்கான முயற்சியாக பல்வேறு தளங்களில், செயல்பட ஆரம்பிப்பார்கள். இந்தவகையில், அவர்களது கொள்கை, சித்தாந்தங்களை, சரக்குகளை மக்களிடையே விற்பதற்கு சில மாநிலங்களில் அமைப்புரீதியாக எந்த ஏற்பாடுகளும் இல்லை. எனவே, அந்த மாநிலங்களில் யாரைப் பிடிப்பது இலகுவோ அவர்களைப் பிடித்து அவர்கள் மூலமாக தங்கள் அரசியல் வியாபாரங்களை நடத்துவார்கள்.''

அமித் ஷா - நரேந்திர மோடி

``இன்றைய அரசியல் சூழல் எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது என்கிறீர்களா?''

``கடந்தகாலங்களில், இட ஒதுக்கீட்டு உரிமையில் ஆரம்பித்து, பல்வேறு உரிமைப் பிரச்னைகளிலும் மாநில அரசின் உரிமையை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுகிற, கிடைக்காதபட்சத்தில் மத்திய அரசை நோக்கிச் சாடவும், எதிர்த்துப் போராடவும் தயங்காத முதல் அமைச்சர்களைப் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. ஆனால், மத்திய அரசின் எந்தவொரு நடவடிக்கையையும் தட்டிக்கேட்க முடியாத ஓர் அடிமை அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு வாய்த்திருப்பது இதுதான் முதன்முறை.

`இதுதான் கோல் போஸ்ட்' என்று சொல்லி விளையாடுபவர்களோடு நாமும் விளையாடலாம். ஆனால், `நாங்கள் பந்தை எங்கு அடிக்கிறோமோ அதுதான் கோல் போஸ்ட்' என்று சொல்லி ஆடிவருகிற இன்றைய மத்திய அரசோடு எப்படி அரசியல் செய்வது... இந்த நெருக்கடிதான் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கிறது. `எமர்ஜென்ஸி தவறு... இதனால் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது' என்று தீர்ப்பெழுதிய நீதிபதிகள் இருந்த நாடு இது. அப்படிப்பட்ட நீதித்துறை உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களே இன்றைக்கு மத்திய அரசால் வளைக்கப்பட்டுவிட்டன. மத்திய அரசின் பட்ஜெட்டில், எந்தெந்தப் பொருளுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் பிரபல ஊடகத்தில்கூட வெளிவரவில்லை.

அர்னாப் கோஸ்வாமிக்கு இரண்டு நாள்களில் ஜாமீன் கிடைக்கிறது. ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு வழக்கில், நீதிமன்றமே ஒரு முடிவுக்கு வந்துவிட்ட பிறகும்கூட, அதிகாரபூர்வமாக இன்னும் தீர்ப்பைச் சொல்ல முடியாத நிலைதானே நிலவுகிறது... இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வதில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல... ராகுல் காந்தியும் இந்த நெருக்கடிக்குள்தான் தள்ளப்பட்டிருக்கிறார்.''

மு.க.ஸ்டாலின் - ராகுல்காந்தி

``ராகுல் காந்திக்கும் மக்களுக்குமான நெருக்கத்தை ஊடகம் வழியே எடுத்துச்செல்வதிலும்கூட காங்கிரஸ் கட்சி பின்தங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?''

``தேர்தல் நேரத்தில், கட்சிகளுக்கு நிறைய வரைமுறைகள் விதிக்கப்படும். அப்படியான நெருக்கடிகள் இப்போது இல்லாததால், இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ராகுல் நினைக்கிறார். பணம் கொடுத்தும், வாகனங்களில் அழைத்துவந்தும் கூட்டம் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சியிடம் சக்தி இல்லாமலேயேகூட ராகுல் காந்தியின் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். இதில் எங்களுக்கே சில பயங்கள் இருக்கின்றன. முன்பு, `எஸ்.பி.ஜி' பாதுகாப்பு ராகுலுக்கு இருந்தது. அதனால், பெருந்திரளான மக்கள் சந்திப்புகளின்போது கிருமி நாசினியில் ஆரம்பித்து அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பாதுகாப்புக்குழுவினரே செய்துவந்தனர். ஆனால், இப்போது 'எஸ்.பி.ஜி' பாதுகாப்புக்குழு விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்ட பிறகு, இதையெல்லாம் காங்கிரஸ் கட்சியினால் முழுமையாக செய்துகொள்ள முடியவில்லை.''

Also Read: மும்பை: ஆளுநர் அரசு விமானத்தை பயன்படுத்த அனுமதிக்காத மாநில அரசு! - `தவறில்லை’ என்கிறது சிவசேனா

``வட மாநிலங்களில் வலுவிழந்த நிலையிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, தென் மாநிலத் தேர்தல்களில் மட்டும் அதிக கவனம் செலுத்திவருகிறதே?''

``மதம்-சாதி சார்ந்த அரசியல் இன்றைக்கு வட மாநில மக்களிடம் பெருந்தொற்றாகவே பரவியிருக்கிறது. எனவே, மதத்தையும் சாதியையும் மறுத்து, மதச்சார்பற்ற கட்சியாக இருப்பதுதான், இன்றைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் தகுதியின்மையாக மாறிவிட்டது. கடந்த காலங்களில் தகுதிகளாக இருந்தவையே இன்றைக்கு தகுதியின்மைக்கான காரணமாகிவிட்டன. எனவே, இன்றைய சூழலில், வட மாநில மக்களைச் சென்றடைவதற்கு மதரீதியாகவோ அல்லது சாதி அடையாளத்துடனோதான் சென்றாக வேண்டும் என்ற மிகப்பெரிய சவால் காங்கிரஸ் கட்சியின் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமேயான சவால் அல்ல... ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் `இந்தியா' என்ற தத்துவத்துக்குமே உள்ள சவாலாகத்தான் இருக்கிறது.
எனவே, தன்னுடைய அரசியல் செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து ராகுல் காந்தியும் எங்களைப் போன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்டிருக்கிறார்... நாங்களும் எங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறோம். வரக்கூடிய காலகட்டத்தில், கட்சியை ராகுல் காந்தி எப்படியெல்லாம் முன்னெடுத்துச் செல்லப்போகிறார் என்பதையெல்லாம் பார்க்கப்போகிறோம்!''

சோனியா காந்தி - ராகுல் காந்தி

``இப்போதும்கூட கட்சியின் அகில இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள ராகுல் காந்தி காட்டிவரும் தயக்கம், பா.ஜ.க-வுக்குத்தானே சாதகமாகும்?''

``ராகுல் காந்தி பின்வாங்குவதென்பது தயக்கத்தால்தான் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலுள்ள பலருக்கும் `தாங்கள் இதுவரை என்னென்ன தவறுகள் செய்திருக்கிறோம்' என்பதை உணர்த்துவதற்காகத்தான் இப்படியொரு முடிவை ராகுல் எடுத்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் முன்னால் இருக்கக்கூடிய பிரச்னைகளை தலைமை மாற்றம் மட்டுமே சரிசெய்துவிட முடியும் என்று அவர் நினைக்கவில்லை. அதாவது, தான் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதால் மட்டுமே மறுமலர்ச்சி வந்துவிடும் என்று அவர் நம்பவில்லை; மாறாகக் கட்சியில் மனமாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறார். பதவிகளை எதிர்பாராமல், சித்தாந்தங்களை மட்டுமே செயல்படுத்துகிற அர்ப்பணிப்பு வேண்டும் என எதிர்பார்க்கிறார். சுருக்கமாகச் சொன்னால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அடித்தளத்தில் இயங்கிவருகிற தொண்டர்களைப்போல காங்கிரஸ் கட்சியினரையும் உருமாற்ற நினைக்கிறார் ராகுல்!''

Also Read: சென்னை: `18 வயதானதும் திருமணம் செய்து கொள்கிறேன்!’ - மாணவியை ஏமாற்றிய காதலன் போக்சோவில் கைது

``அசுரவேகத்தில், பா.ஜ.க வளர்ந்துவரும் இந்தநேரத்தில், ராகுல் காந்தியின் இந்தச் சுய பரிசோதனை ஒட்டுமொத்த கட்சிக்கே ஆபத்தாக மாறிவிடாதா?’’

``ராகுல் காந்தி, பதவிகளிலிருந்துதான் ஒதுங்கியிருக்கிறாரே தவிர பொறுப்புகளிலிருந்து ஒதுங்கவில்லை. பிரசிடென்ட்டாக இல்லையே தவிர இப்போதும் லீடர் அவர்தான். எப்போதும் தன் கடமையைச் சரிவரச் செய்துவருகிறார். காலை 8:30 மணியில் ஆரம்பித்து இரவு 10 மணி வரை எந்தவொரு தொய்வுமின்றி தொடர்ந்து கட்சிப் பணியாற்றுகிறார். எந்த இடத்திலும் போலித்தனம் இல்லை.

ராகுல் காந்தி

`செம்புலப்பெயல் நீர் கலந்ததுபோல...' மக்களோடு மக்களாக இயற்கையாகக் கலக்கிறார். வயதானவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதோ அல்லது மயில், மான்களுக்கு இரை போடுவது போன்று பாசாங்கு காட்டுவதோ ராகுல் காந்தியிடம் இல்லை. எனவே, மக்களுமே அவரை ஒரு தலைவராக எட்டி நின்று பாராமல் நெருக்கமாக, இயல்பாகப் பழகுகின்றனர்!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-wants-to-transform-congress-like-rss-peter-alphonse

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக