Ad

திங்கள், 15 பிப்ரவரி, 2021

மும்பை: ஆட்டோவிலேயே உணவு, தூக்கம்! -பேத்தியின் படிப்புக்காக வீட்டை விற்ற முதியவரின் கதை

மும்பையில் கார் ரோடு பகுதியில் ஆட்டோ ஓட்டிப் பிழைப்பு நடத்துபவர் தேஷ்ராஜ். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஆனால் ஒருவர் திடீரென கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனவர், ஒரு வாரம் கழித்துப் பிணமாக மீட்கப்பட்டார். மகன் இறந்த அடுத்த நாளே ஆட்டோ ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், வேறு வழியில்லாமல் ஆட்டோ எடுத்துக்கொண்டு பிழைப்பைப் பார்க்கச் சென்றார். ஆனால், தேஷ்ராஜின் துரதிஷ்டம் அவரது இரண்டாவது மகனும் அடுத்த இரண்டு வருடங்களில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் தன் மருமகள் மற்றும் நான்கு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தேஷ்ராஜுக்கு ஏற்பட்டது. காலையில் 6 மணிக்கு ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தால் இரவு 11 அல்லது 12 மணிவரை ஆட்டோ ஓட்டுவார்.

தேஷ்ராஜ்

அதில் கிடைக்கும் 10,000 ரூபாய் பணத்தில் தனது பேத்திகளின் படிப்புக்கு 6,000 ரூபாயைச் செலவு செய்துவிடுகிறார். எஞ்சிய 4,000 ரூபாயைக் கொண்டு குடும்பத்திலுள்ள ஏழு பேர் சாப்பிட வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை. இது குறித்து தேஷ்ராஜ் கூறுகையில், ``பெரும்பாலான நாள்களில் சாப்பிட எதுவும் இருக்காது. என் பேத்தி 9-வது வகுப்பு படிக்கும்போது படிப்பைப் பாதியில் விட்டுவிடட்டுமா என்று என்னிடம் கேட்டாள். நான்தான் உனக்கு எவ்வளவு படிக்க வேண்டும் என்று விருப்பமோ அதுவரை படிக்கும்படி கூறினேன். என் பேத்தி 12-ம் வகுப்பில் 80 சதவிகித மதிப்பெண் எடுத்த தினத்தன்று அனைத்துப் பயணிகளையும் பணம் வாங்காமல், அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்று பேத்தியின் தேர்ச்சியைக் கொண்டாடினேன்.

என் பேத்தி பி.எட் படிக்க டெல்லி செல்ல வேண்டும் என்று சொன்னபோது அவளுடைய படிப்புச் செலவை என்னால் ஈடுகட்ட முடியவில்லை. ஆனால் அவளது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தேன். இதற்காக என்னிடமிருந்த ஒரே வீட்டையும் விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தைப் படிப்புச் செலவுக்குக் கொடுத்தேன். வீட்டை விற்றுவிட்டதால் மும்பையில் வசிக்க வீடு இல்லை. எனவே என் மனைவி, மருமகள், இதர பேரக்குழந்தைகளை என் சொந்த கிராமத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்திருக்கிறேன். நான் தொடர்ந்து மும்பையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஆட்டோவிலேயே சாப்பிட்டுக்கொண்டு ஆட்டோவிலேயே உறங்கியபடி வாழ்ந்துகொண்டிருக்கிறேன். பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுகிறேன். என் பேத்தி எனக்கு போன் செய்து, படிப்பில் முதலிடத்தில் வந்துவிட்டேன் என்று சொல்லும்போது என் அனைத்து வலிகளும் காணாமல்போய்விடுகின்றன. என் பேத்தியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு `என்னைப் பெருமைப்படுத்திவிட்டாய்’ என்று கூறினேன்.

மும்பை - ஆட்டோ

எங்கள் குடும்பத்தில் என் பேத்திதான் முதல் பட்டதாரி. அவள் படித்து முடிக்கும்போதும், அன்றைய தினம் அனைவரையும் ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்வேன்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். தேஷ்ராஜ் வாழ்க்கை பற்றிய செய்தி சமூக வலைதளத்தில் வெளியானது. உடனே பொதுமக்கள் அவருக்கு தாராளமாக உதவி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். தேஷ்ராஜுக்கு 276 பேர் 5.3 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் கொடுத்திருக்கிறார்கள். தேஷ்ராஜுக்காக குஞ்சன் ராட்டி என்பவர் ஆன்லைனில் நிதி திரட்டினார். அதன் மூலம் ரூ.5.3 லட்சம் கிடைத்திருக்கிறது. மும்பை மக்கள் தொடர்ந்து அவருக்கு உதவி செய்துவருகின்றனர். மும்பை மக்களின் உதவியைக் கண்டு தேஷ்ராஜ் கண்கலங்கி நிற்கிறார். அந்தப் பணத்தின் மூலம் தனது மற்ற பேரக்குழந்தைகளையும் படிக்கவைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். தேஷ்ராஜ் மட்டுமல்லாமல் பலர் மும்பையில் ஆட்டோ மற்றும் டாக்ஸியில்தான் இரவு நேரத்தில் தங்களது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/mumbai-old-man-sells-house-for-granddaughters-study-and-sleeps-in-auto

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக