Ad

வியாழன், 4 பிப்ரவரி, 2021

காதல் செய்வது எப்படி? #AllAboutLove ❤️ - புதிய தொடர் - 1

ஒரு விஷயம். மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இருக்கும் ஒன்று; மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்று. அந்த ஒன்று அஸ்க். லஸ்க். ஏமோ. லவ். இஷ்க். ப்ரேமம். காதல்.

இத்தனை ஆண்டுக்கால அனுபவம் இருந்தாலும் ஏனோ நாம் லவ் பண்ணும் விஷயத்தில் சொதப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்த மனிதர்கள் காதல் என்பதை மட்டும் கண்டறியவே இல்லை. எந்தளவுக்கு அது உடல் சார்ந்தது... எந்தளவுக்கு அது அறிவு சார்ந்தது? தெரியாது.

விபத்தா, விதியா? தெரியாது.

Perfect couple எனப்படுபவர்கள் நொறுங்கி வீழ்கிறார்கள். சரிப்படாது என நினைப்பவர்கள் வாழ்ந்து தீர்க்கிறார்கள்.

எப்படி? தெரியாது.

எது காதல் என்பது தொடங்கி அதைப் பற்றி ஆயிரம் சந்தேகங்கள். இருந்தாலும் காதலித்துக் கொண்டுதானிருக்கிறோம். இந்தத் தொடரில் காதல் பற்றிய பல விஷயங்களைப் பேசலாம்.

எது காதல்,

எப்படிக் காதலிக்கலாம்,

காதலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன,

காதலில் என்ன என்ன பிரச்னைகள் தோன்றலாம்,

எந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்கலாம்,

எந்த விஷயத்தில் நிலையாக நிற்க வேண்டும்,

எப்போது ஓர் உறவு விலக வேண்டிய நிலைக்கு வருகிறது,

பிரேக்கப் தவிர்க்க முடியாததா,

பிரேக்கப்பை எப்படிக் கையாள்வது,

பிரேக்கப்பிற்கு பிறகு என்ன என காதலின் அத்தனை டைமென்ஷனையும் பேசித் தீர்க்கலாம். ஒரே ஒரு கண்டிஷன்...

இது 2கே கிட்ஸ்க்கானது. ‍❤️‍ அவர்கள் காலம் வேறு. அவர்கள் பிரச்னை வேறு. அவர்கள் ரிலேஷன்ஷிப்பே வேறு. காதல் என்ற உணர்வு பொதுவானதுதான். ஆனால், நிலம், இனம், வயது போன்ற பல காரணிகளால் அது வேறு வேறாக மாறும். அதனால் உலகின் இன்றைய ராஜாக்கள், ராணிக்கள் ஆன 2கே கிட்ஸின் காலத்திற்கேற்ற விஷயங்களைப் பேசலாம். மற்றவர்கள் படிக்கலாம். ஆனால், சத்தம் போடாமல் பின்னால் வரவும்.

காதல் பற்றி தொடங்கும் முன், எது காதல் என்பதைத் தெளிவாக பேசித் தீர்த்துக் கொள்வோம். அதிலென்ன குழப்பம்? இருக்கிறது.

க்ரஷ் (Crush), இன்ஃபாச்சுவேஷன் (infatuation), காதல். இந்த மூன்றுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும். பொதுவாக இந்த மூன்றையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பார்க்கும் போக்கு எல்லா காலத்து டீன் ஏஜ் பருவத்தினரிடம் அதிகம் உண்டு. ஆனால், உண்மை அதுவல்ல.

Crush - infatuation

க்ரஷ்:

ஒருவர் மீது வரும் ஈர்ப்புதான். ஆனால், அது வெறும் எதிர்பாலின ஈர்ப்பாக மட்டுமிருக்காது. அவர் திறமை பார்த்தோ, அவர் பழகும் விதம் பார்த்தோ, அவரின் எதோ ஒரு குணத்தைப் பார்த்தோ வரும். பெரும்பாலும் யாருடன் நமக்கு பழக வாய்ப்பில்லையோ, யாருடன் நட்பு பாராட்ட வழியில்லையோ அவர் மீது வரும். ஆணுக்குப் பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும்தான் க்ரஷ் இருக்குமென்றில்லை. ஒரே பாலினத்திலும் க்ரஷ் தோன்றும். `எனக்கு விஜய் அண்ணான்னா உசுரு’எனச் சொல்கிறார்கள் இல்லையா? அதுதான் க்ரஷ். நன்றாக ரன் அடிக்கும் கிரிக்கெட்டர் மீது, நன்றாகப் பாடும் பாடகர் மீது, எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர் மீதென எந்தக் காரணத்திற்காகவும் அந்த ஈர்ப்பு தோன்றலாம். சிலருக்கு ஹாரிபாட்டர் மீது கூட க்ரஷ் இருக்கும். அப்படியோர் ஆளே உண்மையில் இல்லையென்றாலும் கூட. அடிப்படை விஷயம், அவருடன் எளிதில் நம்மால் பேசிவிட முடியாத சூழல் இருக்கும். ஆனாலும் அவர்கள் மீது அளவு கடந்த ஈர்ப்பிருக்கும்.

`தென்றல்’ என்ற படத்தில் நாயகிக்கு ஒரு எழுத்தாளன் மீது ஈர்ப்பிருக்கும். அதையும் க்ரஷ் என்றே சொல்லலாம். உன்னருகே நானிருந்தால் படத்தில் பார்த்திபன் `சார்..ரம்பா சார்.. பணியாரம் சாப்பிடுகிறதே’ என்பாரே.. அதுவும் க்ரஷ்தான்.

இன்ஃபாச்சுவேஷன்:

இது பெரும்பாலும் எதிர்பாலினம் மீதோ அல்லது தன் பால் ஈர்ப்பாளர்களுக்கு (Homosexuals) அவர்கள் விரும்பும் பாலினம் மீதோ வரக்கூடிய கவர்ச்சி. யார் மீது நமக்கு இன்ஃபாச்சுவேஷன் இருக்கிறதோ அவர் நம் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பார். நம்முடைய பெரும்பாலான நேரத்தை அவருடன் தான் கழித்துக் கொண்டிருப்போம். அந்த நெருக்கத்தின் காரணமாகவே இந்த ஈர்ப்பு தோன்றும். இது சில சமயம் காதலாக பிறிதொரு சந்தர்ப்பத்தில் மாறலாம். அல்லது மாறாமலும் போகலாம். திறமையைப் பார்த்தோ அல்லது இன்ன காரணத்திற்காகவே வராது. அருகிலிருக்கிறார் என்பதாலே வரக்கூடும். இந்த வகை ஈர்ப்பிலிருக்கும் பிரச்னை என்னவென்றால், வேறு எந்த வேலையும் செய்யாமல் அதே நினைப்பாகவே இருப்பதுதான். இதனால், புரடக்ட்விட்டி பாதிக்கும். சரியாக படிக்க மாட்டார்கள். வேலையில் கவனம் இருக்காது. வாழ்க்கை முழுவதும் அந்த ஒரு நபரை மட்டுமே சுற்றி சுற்றியிருக்கும். இன்ஃபாச்சுவேஷனில் கமிட்மென்ட்டுக்கும் இடமேயில்லை. காதலில் வாதங்களும் விவாதங்களும் பெரிய பிரச்னையை ஏற்படுத்தாது. அல்லது அதைத் தாண்டியும் போகும். இன்ஃபாச்சுவேஷனை ஆர்க்யூமென்ட் உடைத்துவிடும். இன்ஃபாச்சுவேஷன் தவறில்லை. அது ஹார்மோன் செய்யும் கோளாறுதான். ஆனால், அதனாலே இது டீன் ஏஜ் பருவத்தினருக்கு மட்டுமே வரும் விஷயம் என நம்பப்படுகிறது.உண்மையில், எந்த வயதிலும் இன்ஃபாச்சுவேஷன் வரும். என்ன… அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அதைப் பிரித்துப் பார்க்கத் தெரியும். இளம் பருவத்தினருக்கு அது தெரியாது. அவ்வளவே. பெரும்பாலும் இது ஒரு குறுகிய கால உணர்வாகவே இருக்கும். சம்பந்தப்பட்ட நபர் விலகிச் சென்றாலோ, அல்லது நீண்டகாலம் பழகிவிட்டாலோ இந்த உணர்வு போய்விடலாம். இன்ஃபாச்சுவேஷனே காதலாகவும் மாறலாம்.

இந்தியன் படத்தில் ஊர்மிளாவுக்கு கமல் மீதிருப்பதை இன்ஃபாச்சுவேஷன் எனச் சொல்லலாம். யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாரா தங்கை சரண்யா மோகனுக்கு தனுஷ் மீதிருந்ததும் இன்ஃபாச்சுவேஷன்தான்.

அடுத்து.. லவ்தான். ஆனால், அதை அவ்வளவு எளிதாக சுருக்கமாகப் பேசிவிட முடியுமா? வெயிட் பண்ணுங்க. அப்பதான் காதலும் வரும். காதல் பற்றிய விஷயங்களும் வரும். நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.

- காதலிப்போம்


source https://www.vikatan.com/lifestyle/relationship/differences-between-crush-and-infatuation-allaboutlove-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக