Ad

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

Motivation Story: `அடிக்கடி தொழில் மாறுவது சரியா?' - பில்லியனர் மார்க் க்யூபன் சொல்வது என்ன?

`இளம் வயதில், வாழ்க்கையிலேயே மிக முக்கியமானது பணம்தான் என்று நான் நினைத்தேன்; இப்போது வயதாகிவிட்டது, அதுதான் உண்மை என நான் தெரிந்துகொண்டேன்.’ - ஐரிஷ் நாடக ஆசிரியர், கவிஞர் ஆஸ்கர் வொயில்டு.

அது அரசோ, தனியார் நிறுவனமோ ஒரு வேலை வேண்டும். கிடைத்த வேலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சின்சியராக உழைக்க வேண்டும். இன்கிரிமென்ட், போனஸ், லீவ் சேலரி... என அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற வேண்டும். பிறகு பென்ஷன். ஒருகாலத்தில் இந்த எண்ணத்தில்தான் பலர் இருந்தார்கள். இன்று நிலைமை அப்படியே தலைகீழ்.

``ஏண்டா இப்போதானேடா நல்ல இன்கிரிமென்ட் போட்டிருக்காங்க. அந்த கம்பெனியை விட்டுட்டு ஏன் வேற கம்பெனிக்கு வேலைக்குப் போறே?’’ ஐடி துறையில் பணியாற்றும் மகனிடம் கேட்டார் தந்தை.

``நல்ல ஆஃபர்பா. இதைவிட பெரிய கம்பெனி. கைநிறைய சம்பாதிக்கணும் இல்ல...’’ என்று பதில் சொன்னான் மகன். இது எங்கோ ஓர் இடத்தில் நடக்கும் உரையாடல் அல்ல. இன்று பல இடங்களில் பரவலாக நடப்பது. ஒரே நிறுவனத்தில் காலம் முழுக்க உட்கார்ந்திருக்க இன்றைய இளைஞர்களில் பலர் தயாராக இல்லை. எனக்குத் தெரிந்த ஓர் இளைஞன், ஒரு சின்ன சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். காக்னிஸன்ட், டி.சி.எஸ் எனப் பல நிறுவனங்களுக்கு மாறி இப்போது இன்ஃபோசிஸில் வேலை பார்க்கிறான். விரைவில் சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்கப்போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறான். கேட்டால், ``கிடுகிடுன்னு வளர்ந்து மேல மேல போய்க்கிட்டே இருக்கணும்’’ என்கிறான். இன்றைய இளைஞர்களின் இந்த எண்ணவோட்டம் சரிதானா? அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான மார்க் க்யூபனின் வாழ்க்கை இதற்கு விளக்கம் சொல்கிறது.

மார்க் க்யூபன் |mark cuban

அந்தச் சிறுவன், அப்பாவின் முன்னால் வந்து நின்றான். ``அப்பா நான் பேஸ்கட் பால் விளையாடுறதுக்கு புதுசா ஷூ வாங்கணும். காசு குடுங்க.’’

அப்பா சிறுவனை உற்றுப் பார்த்தார். ``க்யூபன் உனக்கு இப்போ என்ன வயசு?’’

``பன்னண்டு.’’

``பறவைங்களை கவனிச்சுருக்கியா... றெக்கை முளைச்சதும் தனக்கான இரையை தானே தேடிக்க ஆரம்பிச்சுடும். அப்பாங்கிற முறையில என்னால உனக்குத் தங்குறதுக்கு இடமும் பாதுகாப்பும்தான் தர முடியும். நீ பெரியவனாயிட்டேல்ல... உனக்கான தேவைகளை நீதான் சம்பாதிச்சுக்கணும்.’’

``சரிப்பா.’’

மார்க் க்யூபனின் தந்தை, முகத்தில் அடித்த மாதிரி இப்படிச் சொல்வதற்குக் காரணமும் இருந்தது. குடும்பத்தின் நிலைமை அப்படி. மார்க் க்யூபன் ஒரு யூதர். ரஷ்யாவிலிருந்து நியூயார்க்கிலிருக்கும் எல்லிஸ் ஐலேண்டுக்கு இடம்பெயர்ந்திருந்த குடும்பம். உழைப்பு மட்டுமே அந்தக் குடும்பத்தினரின் மூலதனம்.

`பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம்?’ க்யூபன் யோசித்தார். அமெரிக்காவில் ஒரு வழக்கம் இருந்தது. வீட்டில் சேரும் குப்பைகளை ஒரு கவரில் போட்டு வீட்டு வாசலில் வைத்துவிடுவார்கள். குப்பை லாரி வந்து அந்தப் பைகளை எடுத்துச் சென்றுவிடும். ஆக, வீடுகளில் தினமும் குப்பை சேருகிறது. அதைப் போட்டு வைப்பதற்கு பை அவசியத் தேவை. அவற்றை விற்கலாம் என முடிவெடுத்தார். வீடு வீடாகச் சென்று விற்றார். கணிசமாகக் காசு கிடைத்தது.

மார்க் க்யூபன் |mark cuban

பென்சில்வேனியாவிலிருக்கும் மவுன்ட் லெபனான் ஹை ஸ்கூலில் படித்துக்கொண்டே பகுதி நேர வேலைகள் பலவற்றைச் செய்தார். நாளிதழ்கள், பத்திரிகைகள் போடுவது; திருமணநாள், பிறந்தநாள், கிறிஸ்துமஸ் தினங்களுக்கு வாழ்த்து அட்டைகள் விற்பது என அவருடைய தொழில் முறை மாறிக்கொண்டே இருந்தது. இப்படிப் பல தொழில்களுக்கு மாறினார் க்யூபன். மதுபான பாரில் வேலை, சக மாணவர்களுக்கு டிஸ்கோ சொல்லிக் கொடுப்பது எனப் பல வேலைகளைச் செய்தார். பணம், மிக முக்கியக் குறிக்கோளாக அவருக்கு இருந்தது. தான் சம்பாதித்த பணத்திலேயே படிப்புக்கும் செலவழித்தார். படிப்பிலும் கவனம் செலுத்தினார்.

மார்க் க்யூபன் |mark cuban

1981. இண்டியானா யூனிவர்சிட்டியில் `பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்’ படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்றாயிற்று. அடுத்து... வேலை. பிட்ஸ்பர்க்கில் இருக்கும் `மெல்லன் பேங்க்’கில் (Mellon Bank) வேலைக்குச் சேர்ந்தார். ஒரு வருடம்கூட ஆகியிருக்காது. ஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்குப் போனார். வீடே இருளில் மூழ்கிக் கிடந்தது. அக்கம் பக்கத்து வீடுகளைப் பார்த்தார். அங்கெல்லாம் மின்விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. மெயினில் ஃப்யூஸ் போயிருக்குமோ என்று செக் செய்து பார்த்தார். கடைசியில்தான் அவருக்குப் புரிந்தது, மின்கட்டணம் செலுத்தாததால் அவர் வீட்டுக்கு வழங்கப்பட்டுவந்த மின் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பது. `இது வேலைக்காகாது’ என முடிவெடுத்தார். அங்கிருந்து டல்லாஸுக்குப் போனார். அவர் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது டல்லாஸ் நகரம்தான்.

முதலில் பார் டெண்டர் வேலை. அதுவும் அவருக்கு ஒட்டவில்லை. பிறகு `யுவர் பிசினஸ் சாஃப்ட்வேர்’ என்கிற நிறுவனத்தில் வேலை. அங்கே, சாஃப்ட்வேர்தான் எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்க உதவும் பெரிய துறை என்பதைப் புரிந்துகொண்டார் க்யூபன். அங்கேயும் ஒரு வருடம்கூட வேலை பார்க்கவில்லை. சாஃப்ட்வேர்களை விற்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தார். `மைக்ரோ சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்தார். பல தொழில்நுட்ப சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார். பெரிய பெரிய நிறுவனங்களோடெல்லாம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சரியான நேரத்துக்கு வேலைகளைச் செய்து கொடுத்தார். கிடுகிடுவென வளர்ந்தது நிறுவனம். 1990-களில் அபார வளர்ச்சி. 30 மில்லியன் டாலர் வருவாய். கேட்க வேண்டுமா... பல நிறுவனங்கள் மைக்ரோ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை விலை பேசின. மார்க் க்யூபனும் நிறுவனத்தை விற்கும் முடிவுக்கு வந்திருந்தார். கம்ப்யூசர்வ் (CompuServe) நிறுவனத்துக்கு 6 மில்லியன் டாலருக்கு விற்றார். அதில் செம லாபம்.

மார்க் க்யூபன் |mark cuban

பிறகு, தன் கல்லூரி நண்பரான டாட் வாக்னர் (Todd Wagner) என்பவருடன் சேர்ந்து இணையத்தில் ஆடியோ சேவைகளை வழங்கும் `ஆடியோநெட்’ நிறுவனத்தை வாங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அதன் நெளிவு சுளிவுகளையெல்லாம் கற்றுக்கொண்டார். `பிராட்காஸ்ட் டாட் காம்’ (Brodcast.com) என அதன் பெயரை மாற்றினார். அவருடைய முயற்சியால் கிடுகிடுவென வளர்ந்தது அந்த நிறுவனம். பிரபல `யாஹூ’ நிறுவனம் பிராட்காஸ்ட் டாட் காமை விலை பேசியது. அது மார்க் க்யூபனுக்கு நல்ல நேரம், யாஹூவுக்குக் கெட்ட நேரம். 5.7 பில்லியன் டாலருக்கு தன் நிறுவனத்தை யாஹூவுக்கு விற்றார். ஆனால், யாஹூவால் அந்த நிறுவனத்தைத் திறம்பட நடத்த முடியவில்லை. வாங்கிய சில ஆண்டுகளிலேயே பிராட்காஸ்ட் சேவைகளை யாஹூ நிறுத்த வேண்டியதாகிவிட்டது. `இன்டர்நெட் வர்த்தகத்திலேயே யாஹூ நிறுவனம், பிராட்காஸ்ட் டாட் காமை வாங்கியதுதான் மிக மோசமான வியாபாரம்’ என்று பதிவு செய்திருக்கிறது வரலாறு.

பல தொழில்களைச் செய்து மேலே மேலே போய்க்கொண்டே இருந்தார் மார்க் க்யூபன். 1999. ஒரு ஜெட் விமானத்தை வாங்கினார். பெயர், `கல்ஃப்ஸ்ட்ரீம் வி’ (Gulfstream V). விலை 40 மில்லியன் டாலர். அதுவும் எப்படி? சிங்கிள் ட்ரான்ஸாக்‌ஷனில். `மிகப்பெரிய தொகை செலுத்தப்பட்ட சிங்கிள் இ-காமர்ஸ் ட்ரான்ஸாக்‌ஷன்’ என கின்னஸ் புக்கில் இடம்பிடித்தார்.

மார்க் க்யூபன் மாறி மாறிப் பல தொழில்களைச் செய்தாலும் ரிஸ்க் எடுக்க அவர் தயங்கவே இல்லை. ஆனால், எதில் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பது அவருக்குச் சரியாகப் புரிந்திருந்தது. அவர் இறங்கிய தொழில்கள் கொஞ்ச நஞ்சமல்ல. `2929 என்டர்டெயின்மென்ட்’ என்கிற மீடியா நிறுவனத்தைத் தொடங்கினார்; `லேண்ட்மார்க் தியேட்டர்ஸ்’ என்ற சினிமா தியேட்டர்களை வாங்கி நடத்தினார்; `பப்புள்’ என்கிற திரைப்படத்தை வாங்கி வெளியிட்டார்; `AXS TV' என்ற சாட்டிலைட் டி.வி-யின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்; `ஏபிசி’ என்கிற தொலைக்காட்சி சானலில் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தினார்; இன்னும் சினிமா டிஸ்ட்ரிபியூட்டர், ஃபைனான்ஸியர், மருந்துப் பொருள்கள் தயாரிப்பாளர்... என அவருடைய தொழில்களைப் பட்டியலிடுவதே பிரமிப்பாக இருக்கிறது.

மார்க் க்யூபன் |mark cuban

அவர் இறங்கிய தொழில்களிலெல்லாம் சரியாக ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பதற்கு உதாரணம், `டல்லாஸ் மாவெரிக்ஸ்’ (Dallas Mavericks). அது ஒரு பேஸ்கட் பால் அணி. அதை வாங்கினார் மார்க் க்யூபன். அவர் வாங்கியபோது, அந்த அணியில் சாதாரண விளையாட்டு வீரர்களே இருந்தார்கள். நல்ல கோச் இல்லை. `ஒன்றுக்கும் ஆகாதது’ என்ற பெயரும் அந்த அணிக்கு இருந்தது. அதைப் பற்றியெல்லாம் கவலையேபடவில்லை க்யூபன். நல்ல கோச் ஒருவரை அணியில் சேர்த்தார். விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கை வரும்படி பேசினார். தினமும் உற்சாகம் தரும் வார்த்தைகளையே அணியில் பயன்படுத்தினார். அதற்குப் பலன் கிடைத்தது. மெல்ல மெல்ல பல போட்டிகளில் வெற்றி பெற ஆரம்பித்தது அந்த அணி. இன்றைக்கு அமெரிக்காவில், `டல்லாஸ் மாவெரிக்ஸ்’ மிக முக்கியமான பேஸ்கட் பால் அணி.

`ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் உலகப் பணக்காரர்களின் வரிசைப் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் மார்க் க்யூபன். 2023 கணக்குப்படி, 460 கோடி அமெரிக்க டாலருக்குச் சொந்தக்காரர். அவர் அடைந்த வெற்றிகளுக்கு மார்க் க்யூபன் சொல்வதெல்லாம் ஒன்றுதான். ``உங்களுடைய பிசினஸை யாரோ திருட முயல்கிறார்கள் என நினைத்துக்கொண்டே வேலை பாருங்கள். வெற்றி நிச்சயம்.’’ சரிதானே?!


source https://www.vikatan.com/lifestyle/motivation/motivational-story-about-american-entrepreneur-mark-cuban

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக