Doctor Vikatan: ஆங்ஸைட்டி எனப்படும் மனப்பதற்றம் காரணமாக முதுகுவலி வர வாய்ப்பு உண்டா?
- Manobala, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.
மனப்பதற்றத்துக்கும் முதுகுவலிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால் பலரும் மனப்பதற்றத்தின் போது, மூச்சை இறுக்கிக் கொள்வது, உடலை டைட்டாக்கிக் கொள்வது போன்றவற்றை தன்னையும் அறியாமல் செய்வார்கள். அதன் காரணமாக தூங்கும்போது உடலின் பொசிஷனானது தளர்வாக இருக்காது. உட்காரும்போது உடலை இறுக்கியபடியே இருப்பார்கள்.
இப்படித் தொடர்ந்து உடலை இறுக்கி வைத்திருப்பதன் விளைவாக, தசைப்பிடிப்பு ஏற்பட்டு, மேல் மற்றும் அடி முதுகில் வலியை ஏற்படுத்தும். இது தவிர 'சைக்கோ சொமாட்டிக்' என்றொரு பாதிப்பும் இருக்கிறது.
சைக்கோ என்பது மனம்... சொமாட்டிக் என்பது உடல்... பொதுவாக ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அழுகை வரும், தனிமை உணர்வு இருக்கும், மனநிலை மோசமாக இருக்கும்.
எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலை இருக்கும். மனநலம் சரியில்லாதவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் மனநல பாதிப்பானது சிலருக்கு, உடல்ரீதியான அறிகுறிகளையும் வெளிப்படுத்தலாம்.
அதாவது உடலைத் தொடும்போது சில பகுதிகள் மென்மையாக இருப்பதாக உணர்வார்கள். ஆங்காங்கே வலிப்பதாக உணர்வார்கள். இவையும் மனநலம் சரியில்லாததன் அறிகுறிகளாக இருக்கக்கூடும். பெரும்பாலானவர்களுக்கு தூக்கம் சரியாக இல்லாததன் விளைவாகவும் முதுகுவலி வரும்.
மனநலம் சரியில்லாததால் உடல்நலமும் பாதிக்கப்படலாம் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. முதுகுவலி மட்டுமல்ல, தலைவலி வரலாம் நெஞ்சுவலி, நெஞ்சு படபடப்பது போன்றவையும் சைக்கோ சொமாட்டிக் பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-can-stress-cause-back-pain
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக