Ad

புதன், 1 பிப்ரவரி, 2023

பாரம்பர்ய அரிசியிலும் கோயில்களில் பொங்கல் வைக்கலாம்! பல வகை அரிசிகளும் பயன்களும்!

பொங்கல் பண்டிகையையொட்டி வரும் திருவிழாக்களில் பொங்கல் வைப்பது வழக்கம். இந்தப் பொங்கல் வைப்பதில் பாரம்பர்ய அரிசியைப் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமும் மேம்படும், பாரம்பர்ய அரிசி குறித்தான விழிப்புணர்வும் பெருகும் என்கிறார், சென்னை எத்திராஜ் கல்லூரியின் மருத்துவம் சார் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறையின் உதவிப் பேராசிரியர் மேனகா. 

பொங்கல்

பாரம்பர்ய அரிசி வகைகளில் உள்ள ஊட்டச்சத்துகள் பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் அவரிடம் பேசியபோது, ``அரிசி என்றாலே நமக்கு பெரும்பாலும் கடையில் அதிகம் விற்பனை செய்யப்படும் பட்டைத்தீட்டப்பட்ட வெள்ளை அரிசியைத்தான் பார்த்திருப்போம். எல்லோரும் இதைத்தான் அதிகம் சமைக்க பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் குள்ளக்கார், மாப்பிள்ளைச் சம்பா, பெருங்கார், பூங்கார், குருவிக்கார், காட்டுயானம், தங்கச் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா என 150-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய அரிசி ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

முன்பெல்லாம் கைகளால் நெல்லை குத்தி அரிசியாக்கி அதைச் சோறாக்கி சமைத்து சாப்பிட்டார்கள். அப்படி சாப்பிட்டிருந்த வரை அரிசியிலுள்ள சத்துகள் முழுமையாக உடலுக்குக் கிடைத்து வந்தன. பொங்கல் வந்தால் பிரத்யேகமாக அதற்குரிய நெல்லை குத்தி அரிசி எடுப்பார்கள். எப்போதும் பொங்கல் வைக்க சம்பா வகை அரிசி வகைகள் மிகவும் ஏற்றது. அதுவும் பச்சரிசியை பொங்கல் வைக்க முன்னுரிமை தருவார்கள். அந்த வகையில் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தங்கச் சம்பா, சீரகச் சம்பா உள்ளிட்ட அரிசி வகைகள் மிகவும் சிறந்தது.

கறுப்புக் கவுனி அரிசி

பசுமை புரட்சிக்குப் பிறகு, அரிசி அரைக்கும் ஆலைகள் நிறைய வந்ததால் கைக்குத்தல் முறை அரிசி வகைகள் மிகவும் அரிதாகிவிட்டன. தற்போது பாரம்பர்ய அரிசி வகைகள் குறித்த விழிப்புணர்வு பெருகிவிட்டது. மேலும், பாரம்பர்ய அரிசி வகைகளை மக்கள் உண்ணவும் தொடங்கிவிட்டார்கள். அதனால் பொங்கல் வைக்கவும் பாரம்பர்ய அரிசி வகைகளைப் பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டினால் இன்னும் விழிப்புணர்வு பெருகும். 

பாரம்பர்ய அரிசிகளில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, தாது உப்புகள், ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைய இருக்கிறது. பாரம்பர்ய அரிசிகளில் ஊட்டச்சத்து குறித்து ஆராய்ச்சி செய்தபோது இதை உறுதி செய்திருக்கிறோம்.
இந்தியாவில் ஊட்டச்சத்து பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு அதிக அளவில் உள்ளன. இதனால் நாம் கண்டிப்பாக நமது உணவை மாற்றி பாரம்பர்ய அரிசி வகைகளுக்கு செல்ல வேண்டும். இதன்மூலம் நமது எதிர்கால சந்ததியினரும் பயனடைவர்.

மாப்பிள்ளைச் சம்பா நெற்கதிர்கள்

பொதுவாகவே பாரம்பர்ய அரிசி வகைகளை சமைக்கும்போது மணமும், அதன் சுவையும் அருமையாக இருக்கும். ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, சீரகச் சம்பா, பூங்கார், நீல சம்பா, தங்க சம்பா ஆகிய பாரம்பர்ய அரிசி பொங்கல் வைக்கவும், சோறாக சாப்பிடவும் நன்றாக இருக்கும். குள்ளக்கார், குடவாழை போன்ற பாரம்பர்ய அரிசி வகைகள் இட்லிக்கு நன்றாக இருக்கும். கருங்குறுவை, கறுப்புக் கவுனி போன்ற அரிசி வகைகள் கஞ்சியாகவும், மாவிளக்கு செய்யவும் ஏற்றதாக இருக்கும்.

அனைத்து பாரம்பர்ய அரிசிகளும் நிறமுள்ள அரிசிகள்தான். பாரம்பர்ய அரிசிகளை தேடி மிகவும் அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு விவசாயியாவது பாரம்பர்ய நெல்லை சாகுபடி செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர்களிடம் வாங்கலாம். நகரப் பகுதிகளில் பிரச்னை இல்லை. இயற்கை அங்காடிகளிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் வாங்கலாம். இதனால் விவசாயிகளும் பயனடைவார்கள். உடல் ஆரோக்கியமும் மேம்படும்” என்றார்.

பாரம்பர்ய அரிசிகளும், அதிலுள்ள சத்துகளும்

கவுனி அரிசி: இந்த அரிசி வகையை மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இதில் கறுப்பு கவுனியும், சிவப்பு கவுனியும் இருக்கிறது. இது எலும்புகளை வலுப்படுத்தும். இதில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

கருங்குறுவை: இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். இது சர்க்கரை நோயளிகளுக்கு சிறந்த உணவு ஆகும். இதில் அதிக இரும்புச் சத்து உள்ளதால், சித்த மருத்துவர்கள் இந்த அரிசியை மருத்துவத்துக்கும் பயன்படுத்துகிறார்கள்.

பாரம்பர்ய அரிசி

குடவாழை: இது ஒரு சிவப்பு அரிசி. கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதாக பிரசவம் ஆக இந்த அரிசியைத் தருவார்கள்.

குள்ளக்கார்: சிவப்பரிசி. இதில் இரும்புசத்து, கால்சியம், ஜிங்க் அதிகம் உள்ளது. இந்த வகை அரிசி இளமையாக இருக்க மிகவும் உதவும். இது நல்ல ஊட்டசத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

காட்டுயானம்: எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். எலும்புகள், தசைகள் மற்றும் தோலுக்கு நல்ல ஊட்டசத்தைக் கொடுக்கும். இந்த அரிசி நல்ல சுவையாக இருக்கும்.

மேனகா

மாப்பிள்ளை சம்பா: உடல் ஆரோக்கியத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் நன்றாக உதவும். இதில் அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது.
பொதுவாக, பாரம்பர்ய அரிசிகளில் நார்ச்சத்து உள்ளது. இது எளிதாக செரிமானம் ஆக உதவும்.



source https://www.vikatan.com/agriculture/traditional-rice-and-its-nutritions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக