காங்கிரஸ் சிந்தனை அமர்வில் உதித்த ஐடியா:
தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த காங்கிரஸ் கட்சியை மறுசீரமைத்து மீட்டுருவாக்கம் செய்வதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் `காங்கிரஸ் சிந்தனை அமர்வு' மாநாடு நடத்தப்பட்டது. சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா, ப.சிதம்பரம் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் 2024 தேர்தலுக்கான புதிய தேர்தல் வியூகங்கள் வகுப்பது, கட்சி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்டப் பல்வேறு சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியை வலுப்படுத்துவதற்காக மூன்று முக்கிய குழுக்களை உருவாக்கி அதற்கானப் பணிகளையும் பட்டியலிட்டார். அதில் ஒன்றுதான் அகில இந்திய அளவிலான பாரத் ஜோடோ யாத்திரை.
பாரத் ஜோடோ யாத்ரா:
கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி, தமிழ்நாட்டின் கன்னியாகுமரில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 4,000 கி.மீட்டர்களைக் கடந்து காஷ்மீரின் ஶ்ரீநகரில் 2023 ஜனவரி 30-ம் தேதி நிறைவடைந்திருக்கிறது. பா.ஜ.க-வின் இடையூறுகள், இயற்கைப் இடர்கள், பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களையும் தாண்டி சுமார் 136 நாள்களாக ராகுல்காந்தி இந்த யாத்திரையை மேற்கொண்டார். அதில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்தன.
மாநில மக்களைக் கவர்ந்த ராகுலின் புதிய அரசியல் உத்திகள்:
தேசியக் கட்சிகள் என்றாலே தேசிய அளவிலான விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து பேசும் என்றிருந்த வழமையை மாற்றி, தான் பயணிக்கும் ஒவ்வொரு மாநிலங்களின் மக்களையும் கவரும் வகையில் ராகுல் காந்தி செய்த பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் யாத்திரையைத் தொடங்கும்போது திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மணிமண்டபம், காமராஜர் நினைவு மண்டபத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டில் நான்கு நாள்கள் பாதயாத்திரை முடித்துக்கொண்டு கேரளா செல்லும்போது, ``பெரியார் மண்ணை விட்டுப் பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளது. அதேசமயம், இனி நாராயண குரு பிறந்த கேரளத்துக்குள் செல்லவிருப்பதை எண்ணி மகிழ்கிறேன்!" என கோல் அடித்தார்.
கேரள மாநிலத்துக்குச் சென்றபோது, மலையாள மக்களின் `பாரம்பர்ய பாம்பு படகுப்போட்டியில்' கலந்துகொண்டு உற்சாகமாகப் படகோட்டினார். ``நாம் அனைவரும் ஒன்றிணைந்து சரியான நல்லிணக்கத்துடன் செயல்பட்டால், நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை!" என்று மலையாள மக்களையும் கவர்ந்தார்.
கர்நாடகாவுக்குச் சென்றதும் அம்மாநிலத்தின் பிரதான வாக்கு வங்கிகளான லிங்காயத்களை கவரும் வகையில் அவர்களின் மடத்துக்குச் சென்று லிங்காயத் மடாதிபதிகளைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், ஒரே நாளில் மைசூர் சாமுண்டி மலையிலுள்ள சாமுண்டேஸ்வரி கோயில், மஸ்ஜித்-இ-ஆசம், செயின்ட் பிலோமினாஸ் தேவாலயம் எனச் சென்று இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று மதங்களைச் சேர்ந்த மக்களையும் சந்தித்தார். ''இந்தியாவின் அமைதியான மற்றும் முற்போக்கான எதிர்காலத்திற்கு மத நல்லிணக்கம் தான் அடித்தளம்'!' என்று பேசி ஸ்கோர் செய்தார்.
தொடர்ந்து, தெலங்கானாவுக்குச் சென்றபோது அங்குள்ள பழங்குடி மக்களுடன் இணைந்து, அவர்களின் உடை, தலைப்பாகை அணிந்து பாரம்பர்ய நடனமும் ஆடி அசத்தினார். மகாராஷ்டிராவுக்குச் சென்றகையோடு சத்திரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
அதேபோல, பஞ்சாப் சென்றதும் சீக்கிய மக்களைக் கவரும் வகையில் சீக்கியர்களின் புனித ஸ்தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் தலைப்பாகையுடன் சென்று வழிபட்டார். இறுதியாக, காஷ்மீர் சென்றபோது ``ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும்!" என சூளுரைத்தார்.
கடவுள் பக்தியில் பா.ஜ.க-வை பின்னுக்குதள்ளிய ராகுல்:
``காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்துக்களுக்கு எதிரானது, சோனியா இத்தாலி நாட்டவர், ராகுல் கிறிஸ்தவர்... என தொடர்ச்சியாக விமர்சனம் செய்துவந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற சங்பரிவார் அமைப்புகளுக்கு பதிலடிகொடுக்கும் வகையில், பாத யாத்திரையில், ஆன்மிக யாத்திரையும் நடத்தி வாயடைக்கவைத்தார் ராகுல் காந்தி.
குறிப்பாக, கேரளாவுக்குச் சென்றபோது பிரபல இந்துமத பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயியை சந்தித்து வாழ்த்துபெற்றார். மத்தியப் பிரதேசம் சென்றதும் உஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோயிலில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து சாமி கும்பிட்டார். 2 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ஓம்காரேஷ்வர் கோவிலுக்குச் சென்று ஆரத்தி எடுத்தார். மேலும், பிரம்மபுரி கரையில் நின்று நர்மதா நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார். காவி துண்டு அணிந்து, நெற்றியில் விபூதி, மஞ்சள், குங்குமம் வைத்துக்கொண்டு, இந்து கடவுள்கள் பற்றியும், பகவத் கீதையின் கருத்துக்களையும் மக்களிடையேப் பேசினார். ``சிவன், ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுள்களின் உண்மையான தபஸ்விகளை பா.ஜ.க அரசு அவமதிக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
அதேபோல, ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் உள்ள பிரம்ம சரோவரில் ஆரத்தி எடுத்து வழிபட்டதோடு, ஹரியானாவிலிருந்து புதிய மகாபாரத யுத்தத்தை நாம் தொடங்கப் போவதாகப் பேசினார். `இந்த யாத்திரை உங்கள் அடையாளத்தை மாற்றி இருக்கிறதா?' என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, ``பழைய ராகுல் காந்தி என் நினைவில் இல்லை; அவரை நான் கொலை செய்துவிட்டேன். இது புரிய வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் இந்து தர்மம் பற்றி படிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்குப் புரியும்!" என அதிரடித்தார். யாத்திரையின்போது ராகுலிடம் தென்பட்ட ஆன்மிக மாற்றங்களால் ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய், மூத்த அறங்காவலர் கோவிந்த் தேவ் கிரி போன்றவர்கள் ராகுலுக்கு ஆதரவு வழங்கினர். இதையெல்லாம் எதிர்பாராது அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க, `ராகுல்காந்தி தேர்தல் நேரத்து இந்து!' என கடுமையாக விமர்சித்தது.
ராகுலுடன் கைகோர்த்த இந்திய பிரபலங்கள்:
ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் கொடியசைத்து தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது முழு ஆதரவையும் வழங்கினார். அதேபோல, ராகுல்காந்தியின் இந்த பாதயாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தி.மு.க எம்.பி. கனிமொழி, சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே, மெகபூபா முக்தி, மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, சமூகச் செயற்பாட்டாளர்கள் மேதா பட்கர், அருணா ராய், பிரசாந்த் பூஷன், தலித் செயற்பாட்டாளர் ராதிகா வெமுலா உள்ளிட்டோர் கலந்துகொண்டு வலுசேர்த்தனர்.
இவர்கள் தவிர, திரைப்பட நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் என அரசியலுக்கு அப்பாற்பட்ட பல ஆளுமைகளும் ராகுல் காந்திக்கு ஆதரவாக யாத்திரையில் கரம்கோர்த்தனர்.
பர்சனல் பகிர்ந்த ராகுல்காந்தி:
பாத யாத்திரையின்போது மக்களிடத்திலும், பத்திரிகையாளர்களிடத்திலும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் ராகுல்காந்தி. திருமணம் குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு, ``எனது தாயார் சோனியா காந்தி, தனது பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் குணங்களைக் கொண்டிருக்கும் பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்க ஆசை!" எனக்கூறி வெட்கப்பட்டார்.
`பப்பு' என பட்டப்பெயர் வைத்து பா.ஜ.க-வினர் விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு, `` என்னை `பப்பு' என்று அழைப்பதை நான் பொருட்படுத்தவில்லை. அது அவர்களின் இதயத்திலுள்ள பயத்தைக் காட்டுகிறது. அவர்கள் மகிழ்ச்சியற்றவர்கள். என்னை என்னப் பெயரில் அழைத்தாலும், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை!" என பதிலளித்தார்.
யாத்திரை ஏற்படுத்திய தனிப்பட்ட மாற்றங்கள் பற்றி, ``என்னிடம் பாஸிட்டிவான பல மாற்றங்களை இந்த பாரத் ஜோடோ ஏற்படுத்தியிருக்கிறது. அதிகமான பொறுமையையும், மற்றவர்களின் கருத்துகளை நிதானத்துடன் கேட்கக்கூடிய பக்குவத்தையும் கொடுத்திருக்கிறது! இந்தப் பயணம் தனிப்பட்ட முறையில் என் வாழ்வின் மிக அழகான மற்றும் ஆழமான அனுபவங்களில் ஒன்றாகும்" என்றார்.
மேலும், இந்த யாத்திரையின்போது உடன்வந்த தாயார் சோனியா காந்தியின் ஷூவுக்கு லேஸ் கட்டிவிட்டது, பத்திரமாக காரில் ஏற்றிவிட்டது, தங்கை பிரியங்கா காந்திக்கு முத்தமழை பொழிந்தது, காஷ்மீர் பனிக்கட்டிகளால் இருவரும் அடித்துக்கொண்டு விளையாடியது என குடும்ப பாசத்தையும் பொதுவெளியில் காட்டியிருந்தார் ராகுல்காந்தி.
தொடக்கம் முதல் இறுதிவரை... விமர்சனம், இடையூறு செய்த பா.ஜ.க:
தொடக்கம் முதலே ராகுல் காந்தியின் `பாரத் ஜோடோ யாத்திரை'யை (இந்திய ஒற்றுமை யாத்திரையை), பா.ஜ.க தலைவர்கள் `பாரத் தோடோ யாத்திரை' (இந்தியாவை உடைக்கும் யாத்திரை) என விமர்சித்தனர். மேலும், தொடர்ச்சியாக பல்வேறு சர்சைகளையும், தடைகளையும் ஏற்படுத்தி வந்தனர்.
குறிப்பாக, யாத்திரையின்போது ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை நிற டி-சர்ட்டின் விலை ரூ.41,000 எனக் குறிப்பிட்டு, `பாரத் தேகோ' என்ற தலைப்பில் ட்விட்டரில் டிரெண்ட் செய்தது. அடுத்து, தமிழ்நாட்டில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் சந்தித்துப் பேசிய வீடியோவைப் பதிவிட்டு, `Bharat Jodo with Bharat Todo icons?' என விமர்சித்தது பா.ஜ.க.
பின்னர், ``பாரத் ஜோடோ யாத்திரையால் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் அபாயம் இருக்கிறது. ராகுல் காந்தி தேச நலனைக் கருத்தில் கொண்டு யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்!" என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதினார்.
தொடர்ந்து, `யாத்திரையின்போது சாவர்க்கர் பற்றி இழிவான கருத்துக்களை தெரிவித்து, உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்திவிட்டார் ராகுல்காந்தி; எனக்கூறி மகாராஷ்டியாவில் அவர்மீது இருபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல, பாரத் ஜோடோ யாத்திரை வீடியோவில் அனுமதியின்றி கே.ஜி.எப் படத்தின் பி.ஜி.எம் பயன்படுத்தப்பட்டதாக ராகுல்காந்தி மீது காப்புரிமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இறுதியாக காஷ்மீரில் பாத யாத்திரை நடத்தியபோது, ராகுலின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டதால், யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது காங்கிரஸ். ``பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே இருக்க வேண்டிய காஷ்மீர் போலீஸார் திடீரென மாயமாகிவிட்டனர். ராகுல் காந்தியை பார்க்க வந்த கூட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறையாக கையாளவில்லை!" என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
நிறைவு நாளை எட்டிய பாரத் ஜோடோ:
கன்னியாகுமரியில் தொடங்கி கிட்டதட்ட ஐந்து மாதங்களாக நடந்த பாரத் ஜோடோ யாத்திரையை, ஜனவரி 29-ம் தேதி ஶ்ரீநகரில் உள்ள லால் சவுக் சதுக்கத்தில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி நிறைவு செய்தார் ராகுல்காந்தி. இதன்மூலம், 75 ஆண்டுகளில் நேருவுக்குப்பிறகு தேசியக்கொடியை ஏற்றிய இரண்டாவது காங்கிரஸ் தலைவர் என்ற பெயரை ராகுல்காந்தி பெற்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றியதன் மூலம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வெறுப்பு தோற்கும், அன்பு எப்போதும் வெல்லும். இந்தியாவில் நம்பிக்கையின் புதிய விடியல் பிறக்கும்!" என ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்:
இந்த நிலையில், காந்தி நினைவுநாளான ஜனவரி 30-ம் தேதி காஷ்மீரின் ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் `பாரத் ஜோடோ நிறைவு விழா' மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. ஏற்கெனவே, காஷ்மீரில் நடைபெறவுள்ள நிறைவு விழாவில் பங்கேற்க 21 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
அதில், ``வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக போராடுவதற்கும், உண்மை, இரக்கம், அகிம்சை ஆகியவற்றின் செய்தியைப் பரப்புவதற்கும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகிய அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். யாத்திரையின் தொடகத்திலிருந்தே எங்களுக்கு ஆதரவளித்த, ஒத்த எண்ணம் கொண்ட ஒவ்வொரு இந்தியரையும் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கிறோம்!" என அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸின் அழைப்பை ஏற்று தி.மு.க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பா.ஜ.க-வுக்கு எதிரான சித்தாந்தம்கொண்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், கொட்டும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டனர். இந்த மாபெரும் நிகழ்வு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கான அச்சாரமாகப் அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.!
source https://www.vikatan.com/government-and-politics/politics/12-states-136-days-4000-km-what-are-the-effects-of-rahuls-bharat-jodo-detailed-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக