Ad

புதன், 8 பிப்ரவரி, 2023

``இளங்கோவனை நிறுத்த முதல்வரே கேட்டுக் கொண்டார்; ஏனெனில்...” - அமைச்சர் சு.முத்துசாமி

ஈரோடு அன்னை சத்யா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் குடியிருக்கும் மக்களிடம் நேற்று இரவு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்று காங்கிரஸுக்கு வாக்குகளை சேகரித்தார்.

அமைச்சர் சு.முத்துசாமி, ``தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் ரூ.458 கோடி மதிப்பிலான பணிகளையும், ஈரோடு மேற்கு தொகுதியையும் சேர்த்து மொத்தம் ரூ.758 கோடியில் பாலம், சாலைகள், குடிநீர் திட்டப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அ.தி.மு.க-வினர் எந்தப்பணிகளையும் செய்யவில்லை. அவர்களை குற்றம் சொல்வதற்காக இதைச் சொல்லவில்லை. அவர்கள் எந்த பணிகளையும் செய்து தராததால் சாலைகள், இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து விட்டன. இந்தப் பணிகள் அனைத்தையும் செய்து தர நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.

இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். எப்போது வந்தாலும் எங்களை இன்முகத்தோடு வரவேற்பார்கள். இந்தப்பகுதி மக்களின் தேவையை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். தேர்தல் முடிந்ததும் இங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன என்பதை பட்டியலிட்டு உங்களுக்காக நான் செய்து தருவேன் என்று உறுதி கூறுகிறேன். முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நான் அமைச்சராக இருந்தபோது இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தோம். முதல்வர் எம்.ஜி.ஆருடன் நல்ல தொடர்பில் இருந்ததால் ஈரோடு தொகுதிக்கு என்னால் முடிந்த நல்லப்பணிகளை செய்து கொடுத்தேன். அதேபோல இப்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் சிறப்பான மக்கள் பணியாற்றி வருபவர். அவரிடம் கேட்டு உங்களுக்கான அனைத்துப் பணிகளையும் என்னால் செய்து கொடுக்க முடியும்.

இப்பகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை பட்டியலாக தயாரித்து எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா அரசுக்கு சமர்ப்பித்து, பணிகளை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அதற்குள் அவர் காலமாகி விட்டார். அவர் முதல்வரிடம் சமர்ப்பித்துள்ள அந்தப் பட்டியலை, அவரின் தந்தையார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னின்று செய்து முடிக்க வேண்டுமானால் அவரை நீங்கள் தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அமைச்சர் அன்பில் மகேஷ்

இளங்கோவன் நேர்மையானவர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். திருமகன் விட்டுச்சென்ற பணியை இளங்கோவன் தொடர வேண்டும் என்பதற்காகத் தான் அவரை இத்தொகுதியில் நிறுத்த வேண்டும் என்று என்று முதல்வரே கேட்டுக் கொண்டார். அதனால் இளங்கோவனை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். திருமகன் ஈவெராவுக்காக இந்த வெற்றியை நீங்கள் எங்களுக்கு அளிக்க வேண்டும்.

கொரோனா லாக் டெளன் சமயத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தோம். அப்போது, மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின், ரூ.5 கோடி மதிப்பிலான பொருள்களை வாங்கி தொகுதி முழுவதும் மக்களுக்கு விநியோகித்தோம். அப்போது, அ.தி.மு.க வினர் உள்பட எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு ஸ்டாலின் கேட்டுக் காெண்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோதே மக்கள் நலன் பற்றி சிந்தித்த தலைவர் மு.க.ஸ்டாலின். எனவே அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இளங்கோவனை தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-muthuswamy-speech-in-erode-east

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக