Ad

புதன், 8 பிப்ரவரி, 2023

`நான் வந்துட்டேன்!' - பிறந்த குழந்தை பேசியதா? அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

பிறந்த உடன் குழந்தை அழுவதுதான் வழக்கம். அழாவிட்டால் ஆரோக்கிய குறைபாடாக கருதப்படும். ஆனால் பிறந்த சில நிமிடங்களில், ’நான் வந்துட்டேன்’  என்று குழந்தை பேசியதாக பரவிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கேட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக அந்தக் குழந்தையை பார்க்க மக்கள் வர ஆரம்பித்து விட்டனர்.

பிறந்த குழந்தை

 காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே சின்ன அழிசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திரன் - ரேவதி தம்பதி. இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ரேவதி கர்ப்பம் தரித்திருந்தார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை 8 மணியளவில் ரேவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

களியாம்பூண்டு ஆரம்ப சுகாதார நிலையம்

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு பிரசவ வலி கடுமையாக ஏற்பட்டதால் அவரை உடனடியாக உத்திரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பணியில் இருந்த மருத்துவர் சரண்ராஜ் மற்றும் செவிலியர் பிருந்தா ஆகியோர் மகப்பேறு மருத்துவ ஏற்பாடுகளை செய்தனர்.

களியாம்பூண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 10 மணி அளவில் அவருக்கு 2.9 கிலோ எடையுடன் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உறவினர்கள், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் அனைவரும் இருந்த நேரத்தில், பிறந்து சில நிமிடங்களில் திடீரென அந்தக் குழந்தை `நான் வந்துட்டேன்’ என்று பேசிய சத்தம் கேட்டதாக அங்கிருந்த அனைவரும் கூறியுள்ளார்கள்.

களியாம்பூண்டு ஆரம்ப சுகாதார நிலையம்

இந்த குரல் ஒலித்ததை, குழந்தையின் தாய் மற்றும் செவிலியர், தூய்மை பணியாளர், தாயின் உறவினர்கள் கேட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பிரசவ அறை அருகே வேறு எங்கும் இருந்து இந்த சத்தம் வந்ததா என பார்த்தபோது யாரும் இல்லை, குழந்தை பேசியதுதான் கேட்டிருக்கிறது என்கின்றனர்.

மருத்துவமனையில் பிறந்த குழந்தை

அங்கிருந்த செவிலியர், தூய்மை பணியாளர்களுக்கும் அந்த குழந்தை பேசியதாகவே கேட்டிருக்கிறது. திடீரென கேட்ட இக்குரல் அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தியதாக இவர்கள் கூறுகின்றனர். இந்த செய்தி உறவினர்கள் மூலம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பக்கத்துக்கு கிராமங்களில் இருந்து மக்கள் ஆர்வத்துடனும் வேடிக்கையாகவும் அந்த குழந்தையை பார்த்துவிட்டு செல்கின்றனர்.

’பிறந்த உடன் குழந்தை அழுவதுதான் ஆரோக்கியத்தின் அறிகுறி. குழந்தை பிறந்தவுடன் பேசியதாக சொல்வதில் உண்மை இருக்காது. எங்கோ அருகில் கேட்ட சத்தத்தை, குழந்தை பேசியதாக அங்கிருந்தவர்கள் நினைத்திருக்கலாம். இப்படி உண்மையில்லாத செய்தியை வைரலாக்கி, மக்கள் கூட்டமாக அந்தக் குழந்தையை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும். அது தொற்றுக்கு வழிவகுக்கலாம் என்பதால் தாய், சேய் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள்.



source https://www.vikatan.com/news/i-have-arrived-did-the-newborn-speak-what-happened-at-the-government-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக