வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மேலும் 0.25% உயர்த்தியிருக்கிறது நமது மத்திய ரிசர்வ் வங்கி. கடந்த ஆண்டு மே மாதத்தில் 4 சதவிகிதமாக இருந்த ரெப்போ ரேட் வட்டி விகிதம் தற்போது 6.50 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வட்டி விகிதம் இப்போது இருக்கிறது.
கடந்த ஒன்பது மாதங்களில் ஆறு முறை வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இத்துடன் நிறுத்தப்படுமா அல்லது இனிவரும் நாள்களில் இன்னும் உயர்த்தப்படுமா என்கிற கேள்விக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து எந்தத் தெளிவான பதிலும் இல்லை. ‘பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை எனில், வட்டி விகிதம் இன்னும்கூட உயர்த்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கவே செய்கிறது’ என்கிற எச்சரிக்கையையே ரிசர்வ் வங்கி சூசகமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.
வட்டி விகிதம் இப்படி உயர்ந்துகொண்டே செல்வதால், டெபாசிட்தாரர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது பாசிட்டிவ்வான விஷயம்தான். மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பின் பெரும்பகுதியை வங்கி டெபாசிட்டில் முதலீடு செய்கின்றனர். இந்த வட்டி உயர்வின்மூலம் அவர்களுக்கு சற்றுக் கூடுதலான வருமானம் கிடைக்கும். அவர்கள் மட்டுமல்ல, ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்து, அதிக வருமானம் பார்க்க நினைக்கும் அனைவருக்கும் இந்த வட்டி விகித உயர்வு நிச்சயம் உதவும்.
ஆனால், இந்த உயர்வானது வங்கியில் இருந்து கடன் வாங்குபவர்களை விழி பிதுங்க வைக்கிறது. அதிலும், வீட்டுக் கடன் வாங்கியவர்களின் பாடு படுதிண்டாட்ட மாகவே இருக்கிறது. 7% வட்டியில் ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி, அதை 180 மாதங்களில் திரும்பக் கட்டி முடித்துவிடலாம் என்று நினைத்தவர்கள் பலர். இன்று வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமானது பல வங்கிகளில் 9.50 சதவிகிதத் துக்கும் மேல் உயர்ந்ததால், வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டிய மாதங் களின் எண்ணிக்கை 280 மாதங்களாக உயர்ந்துள்ளன. ‘இப்படியே போனால், இந்த ஜென்மம் முழுக்க வீட்டுக் கடன் கட்ட வேண்டியிருக்குமோ!’ என்கிற கவலை, வீட்டுக் கடன் வாங்கியவர்களை நிம்மதியாகத் தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது.
வீட்டுக் கடன் வட்டி விகிதம் உச்சத்தில் இருப்பதால், இப்போது வீட்டுக் கடன் வாங்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் பலர். இதனால் வீடுகளின் விற்பனை கணிசமாகக் குறைய வாய்ப்புண்டு. வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடனுக்கான வட்டியும் உயர்ந்ததால், பொருள்களின் விற்பனை வெகுவாகக் குறைய வாய்ப்பு உண்டு. மிக முக்கியமாக, தொழில் கடன்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து, தொழில் விரிவாக்கமானது குறிப்பிடத்தகுந்த அளவு குறையும் நிலையும் உருவானால் ஆச்சர்யமில்லை.
ரிசர்வ் வங்கியானது இனியாவது வட்டி விகிதத்தை உயர்த்துவதை நிறுத்திவிட்டு, உயர்த்திய வட்டி விகிதத்தைப் படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், வீட்டுக் கடன் உட்பட பல்வேறு கடன்களை வாங்கிய நடுத்தர மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். மக்களின் இந்த எதிர்பார்ப்பை ரிசர்வ் வங்கி நிறைவேற்றுமா?
- ஆசிரியர்
source https://www.vikatan.com/editorial/rbi-increase-repo-rate
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக