என் வயது 34. கடந்த சில மாதங்களாக கழுத்துவலி இருக்கிறது. முதலில் சாதாரண மருத்துவரை அணுகினேன். அவர் கொடுத்த பெயின் கில்லரில் சரியாகாததால் எலும்பு மருத்துவரை சந்திக்கச் சொன்னார். எலும்பு மருத்துவரையும் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன். வலி குறையவில்லை. `இது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கும்... நரம்பியல் மருத்துவரைப் பார்' என்கிறான் என் நண்பன். கழுத்துவலிக்கு நரம்பு மருத்துவரைப் பார்ப்பது சரியானதா?
- விக்ரம் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி.
``கழுத்துவலி என்பது பெரும்பாலும் சரியான நிலைகளில் உட்காராதது, நிற்காதது, டிவி மற்றும் கம்ப்யூட்டர் திரைகளைப் பார்க்கும்போது கழுத்தை சரியாக வைத்துக்கொள்ளாதது போன்ற காரணங்களால் வரக்கூடும். நம் உடலில் கழுத்து மிக முக்கியமான ஒரு பகுதி. மூளையிலிருந்து கைகளுக்குச் செல்லும் நரம்புகள் எல்லாமே கழுத்துப் பகுதியில் தொடங்கும் முதுகெலும்பு இடைவெளி வழியேதான் வரும். கைகளுக்குச் செல்லும் அந்த நரம்புகள் மிக முக்கியமானவை. அதே போன்ற ஒரு செட் நரம்புகள் கால்களுக்கு வரும். இந்த இரண்டு செட் நரம்புகளுமே மிக முக்கியமானவை. கழுத்தெலும்பு மிக மென்மையாக இருக்கும். நரம்புகள் வரும் அந்த இடைவெளியும் சிறியதாக இருக்கும். எனவே, ஒருவர் அசாதாரண நிலைகளில் (posture) கழுத்தை வைத்துக்கொள்ளும்போது அந்த நரம்புகள் அழுத்தப்படும். மனித உடலில் முக்கியமான முதுகெலும்புப் பகுதிகூட கழுத்திலிருந்து தொடங்கிதான் கீழ்நோக்கிப் போகும். உட்காரும், நிற்கும் நிலைகள் தவறாக இருந்தால், முதுகெலும்பு பகுதியும் பாதிக்கப்படலாம். முதுகெலும்பில் உள்ள டிஸ்க் எனப்படும் வட்டுப் பகுதியோ தசைநார்களோ பாதிக்கப்படலாம்.
Also Read: Doctor Vikatan: விளையாடும்போது கிழிந்த மூட்டு ஜவ்வு; என் கால்கள் இயல்பு நிலைக்குத் திரும்புமா?
இப்படி நேரும்போது நரம்புகள் அழுத்தப்படும் அல்லது முதுகெலும்பு அமுக்கப்படும். இத்தகைய பிரச்னையில் எலும்புகளைவிட நரம்புகளின் பாதிப்புதான் பிரதானமாக இருக்கும்.
ஒருவருக்கு ஏற்படும் இதுபோன்ற பிரச்னைக்கு எலும்பு மருத்துவரை சந்திப்பதா, நரம்பு மருத்துவரை சந்திப்பதா என்ற சந்தேகம் உங்களைப் போல பலருக்கும் இருப்பது இயல்பே. `ஆர்த்தோபெடிக்ஸ்' எனப்படும் எலும்பியல் மருத்துவத் துறையிலும் சரி, `நியூராலஜி' எனப்படும் நரம்பியல் மருத்துவத் துறையிலும் சரி, ஸ்பைன் சர்ஜன் என்ற சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இருப்பார்கள். நீங்கள் அணுக வேண்டிய சரியான மருத்துவர் இவர்தான். கழுத்துவரையிலான பகுதிகளில் பிரச்னை என்றால் நியூரோ ஸ்பைன் சர்ஜனும், கழுத்துக்குக் கீழே உள்ள பகுதிகளில் பிரச்னை என்றால் ஆர்த்தோ ஸ்பைன் சர்ஜனும் பார்ப்பார்கள்.
Also Read: Doctor Vikatan: ஏர்போர்ட்டில் கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் தொற்று பரவாதா?
அழுத்தமோ, சிரமமோ தராதவகையில் கழுத்தை வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். போன் பேசியபடி வண்டி ஓட்டுவது, கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் மொபைலை வைத்தபடி வேலை செய்வது போன்றவற்றால் நரம்புகள் அதிக அளவில் இழுக்கப்படும். அதனால் கழுத்தில் வலி வரலாம். இத்தகைய செயல்களைத் தவிர்ப்பதுதான் வலிக்கான முதல் சிகிச்சை."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/unable-to-bear-the-neck-pain-whom-should-i-consult-orthopedist-or-neurologist
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக