Ad

வியாழன், 9 டிசம்பர், 2021

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த ராணுவ வீரர்களின் முழுப்பின்னணி!

நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்துக்கு இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத், உயிருடன் இருக்கும் வருண் சிங் தவிர்த்து மற்ற ராணுவ வீரர்களின் பின்னணியைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

Also Read: ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவு! -நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் சொன்னது என்ன?

1. பிரிகேடியர் எல்.எஸ். லிட்டர் (Brig Lakhbinder Singh Lidder) :

எல்.எஸ். லிட்டர் என்றழைக்கப்படும் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் (Panchkula) சேர்ந்தவர். இவர் மறைந்த பிபின் ராவத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். டெல்லியிலிருக்கும் தேசிய பாதுகாப்பு படை கல்லூரியில் ராணுவப் பயிற்சி பெற்ற இவர், இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்பு பணியில் பொறுப்பு வகித்தார். பின்னர், கஜகஸ்தான் நாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு இணைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

ராணுவ விவகாரங்கள் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இவருக்கு, கீதிகா (Geetika) என்ற மனைவியும், ஆஷ்னா (Aashna) என்ற 16 வயது மகளும் இருக்கின்றனர்.

பிரிகேடியர் எல்.எஸ். லிட்டர்

2. லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் (Lt Col Harjinder Singh):

ஹர்ஜிந்தர் சிங், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர். இவர் பிபின் ராவத் பணியாற்றிய 11 கோர்க்கா ரைபிள்ஸ் (11 Gorkha Rifles) படைப்பிரிவிலும் பணியாற்றியவர். சியாச்சின் பனிப்பாறை போன்ற முக்கியமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். லக்னோவைச் சேர்ந்த இவரின் குடும்பம் தற்போது டெல்லியில் வசித்துவருகிறது.

கர்னல் ஹர்ஜிந்தர் சிங்

3. நாயக் குருசேவக் சிங் (Naik Gursewak Singh):

நாயக் குர்சேவக் சிங், பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் (Tarn Taran ) மாவட்டத்திலிருக்கும் டோட் (Dode) கிராமத்தைச் சேர்ந்தவர். 9 பாரா சிறப்புப் படையச் சேர்ந்த குர்சேவக் சிங், கடந்த 3 ஆண்டுகளாக பிபின் ராவத்தின் முதன்மை பணியாளர் அதிகாரியாக (Principal Staff Officer) பணியாற்றிவந்தார். இவருக்கு ஜஸ்ப்ரீத் கவுர் என்ற மனைவியும், 9,7 வயதில் இரண்டு மகள்களும், 3 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.

4. நாயக் ஜிதேந்திர குமார் (Naik Jitendra Kumar):

நாயக் ஜிதேந்திர குமார், மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் (Sehore) மாவட்டத்திலிருக்கும் தமண்டா (Dhamanda) கிராமத்தைச் சேர்ந்தவர். 3 பாரா சிறப்புப் படையைச் சேர்ந்த ஜிதேந்திர குமார், பிபின் ராவத்தின் முதன்மை பணியாளர் அதிகாரியாகவும் (PSO) பணியாற்றி வந்தார். எட்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி வந்த இவருக்கு, மனைவியும், நான்கு வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் மகனும் இருக்கின்றனர்.

நாயக் ஜிதேந்திர குமார்

5. லான்ஸ் நாயக் எஸ்.வி. சாய் தேஜா (Lance Naik B Sai Teja):

சாய் தேஜா, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலிருக்கும் குரபலகோட்டா மண்டலம் (Kurabalakota mandal), எகுவ ரேகடா (Eguva Regada) கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், 2013-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக ‘லான்ஸ் நாயக்’ பதவிக்கு உயர்ந்த இவர், பிபின் ராவத்தின் முதன்மை பணியாளர் அதிகாரியாக (PSO) பணியாற்றி வந்தார். 27 வயதே நிரம்பிய இவருக்கு, மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.

லான்ஸ் நாயக் எஸ்.வி. சாய் தேஜா

6. லான்ஸ் நாயக் விவேக் குமார் (Lance Naik Vivek Kumar):

விவேக் குமார், இமாச்சலப்பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டம் ஜெய்சிங்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரும், பிபின் ராவத்தின் முதன்மைப் பணியாளர் அதிகாரியாக (PSO) இருந்தார்.

7. ஹவில்தார் சத்பால் ராய் (Havildar Satpal Rai):

ஹவில்தார் சத்பால் ராய், மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள தக்தாவைச் சேர்ந்தவர். இவரும், பிபின் ராவத்தின் முதன்மைப் பணியாளர் அதிகாரியாக (PSO) இருந்தார்.

விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான்

8. விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான் (Wing Commander Prithvi Singh Chauhan):

பிரித்வி சிங் சவுகான், ஆக்ராவைச் சேர்ந்தவர். மத்தியப்பிரதேச மாநிலம் ரேவாவிலிருக்கும் சைனிக் பள்ளியில் பயின்ற இவர், 2000-ம் ஆண்டில் விமானப்படையில் சேர்ந்தார். அதன்பின்னர், தமிழ்நாட்டின் சூலூரில் உள்ள 109 ஹெலிகாப்டர் யுனைடெட்டின் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு, மனைவியும், இரண்டு வயதில் ஒரு மகளும், ஒன்பது வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர் தற்போது விபத்துக்குள்ளான எம்.ஐ-17 வி 5 ரக ஹெலிகாப்டரின் தலைமை பைலட்டாக இருந்து அதை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்குட்ரான் லீடர் குல்தீப் சிங்

9. ஸ்குட்ரான் லீடர் குல்தீப் சிங் (Squadron Leader Kuldeep Singh):

குல்தீப் சிங், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு (Jhunjhunu) மாவட்டம் கர்தானா (Ghardana) கிராமத்தைச் சேர்ந்தவர். 2013-ம் ஆண்டு இந்திய விமானப் படையில் சேர்ந்த இவர், ஸ்குவாட்ரான் தலைவராக பொறுப்புவகித்தார். இவர் தந்தை ரந்தீர் சிங் ராவும் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் சகோதரியும் தற்போது இந்திய கடற்படையில் பணியில் இருக்கிறார். இவருக்கு திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகளே ஆகிறது.

10. ஜூனியர் வாரண்ட் ஆபீசர் ராணா பிரதாப் தாஸ் (JWO Rana Pratap Das):

ராணா பிரதாப் தாஸ், ஒடிசா மாநிலம் அங்கூல் (Angul) மாவட்டம், கிருஷ்ணசந்திரபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்திய விமானப்படையின் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக (JWO) பணியாற்றி வந்தார். சுமார் 12 ஆண்டுகளாக விமானப்படையில் பணியாற்றி வந்த இவருக்கு, வயதான பெற்றோரும், மனைவி, ஒரு வயதில் மகனும் இருக்கின்றனர்.

ஜூனியர் வாரண்ட் ஆபீசர் பிரதீப்

11. ஜூனியர் வாரண்ட் ஆபீசர் பிரதீப் (JWO Pradeep):

பிரதீப், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், பொன்னுக்கரையைச் சேர்ந்தவர். இவர் சூலூர் விமான தளத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 2004-ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்த இவர், விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றினார். சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் மிகத்தீவிரமாக பணியாற்றினார். 2013-ம் ஆண்டு உத்தரகாண்டிலும், 2018-ம் ஆண்டு கேரளாவிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, வெள்ள மீட்புப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இவருக்கு, ஸ்ரீலக்ஷ்மி என்ற மனைவியும், ஐந்து மற்றும் இரண்டு வயதில் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

Also Read: ``எங்களை மீட்க வந்திருக்கிறீர்களா... Carry-on Thanks!'' - கேப்டன் வருண் சிங் பேசிய வார்த்தைகள்!



source https://www.vikatan.com/government-and-politics/coonoor-helicopter-crash-full-background-of-dead-soldiers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக