Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

``பாஜக அரசு ஒரு யு-டர்ன் அரசு!” - திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்தரா

நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் கொரோனா தொடர்பாகப் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்தரா, “இந்தியா அரசு யு-டர்ன் அரசாக மாறிவிட்டது. நாங்கள் இரும்பை போன்றவர்கள் என்றவர்கள் இப்போது யு-டர்ன் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனியும் அமைதியாக இருந்தால் மூழ்கிவிடுவோம் என்ற கட்டத்தை எட்டிய பின் தான் நீச்சலடிக்கலாம் என்ற எண்ணத்திற்கே இந்த அரசு வந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 4.7லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள் என அரசு கூறுகிறது. ஆனால், உண்மை நிலை இதைவிட 10 மடங்கு அதிகம். 40 பேர் லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள்.

விவசாய மரணங்கள் குறித்து தங்களிடம் எந்த தரவுகளும் இல்லை என நேற்று இந்த அரசு கூறியது. இதற்கு முன்பு தங்களிடம் புலம்பெயர் தொழிலாளர் மரணம் குறித்து தரவுகள் இல்லை என்று கூறி இருக்கிறது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் குறித்த தகவல்களும் இல்லை என கூறி இருக்கிறது. அதனால், அரசு சொல்லும் எண்ணிக்கையை நாம் எடுத்துக் கொள்வதைவிட அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கையையே நாம் எடுத்துக் கொள்ளலாம்” என்றவர்

தொடர்ந்து, “கொரோனாவின் தொடக்கக் காலத்தில் இந்த அரசு தட்டுகளைத் தட்ட சொன்னது, விளக்குகளை ஏற்ற சொன்னது. ஆனால், தடுப்பூசி விஷயத்தில் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறியது.

90 கோடி மக்கள் கொண்ட இந்தியாவிற்கு 200 கோடி தடுப்பூசிகள் தேவை. ஆனால், இதை இந்த அரசு உணரவே இல்லை. உற்பத்தியைத் தொடங்க தாமதம் செய்தது. 2020 மத்தியில் டிசம்பருக்குள் 90 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்துவிடுவோம் என அரசு கூறியது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தங்களால் 50 கோடி தடுப்பூசிகளை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் எனக் கூறியது.

நூறு கோடி மக்களுக்கு இந்த அரசு தடுப்பூசி செலுத்தி உள்ளது. சந்தோஷம்தான். ஆனால், இது யாரால் சாத்தியமானது? இந்த அரசாங்கத்தாலா? இல்லை… நிச்சயம் இல்லை… கோவிஷீல்ட் தனது உற்பத்தியை அதிகப்படுத்தியது. மாதத்திற்கு 24 கோடி குப்பிகளை அவர்கள் தயாரித்தினர். அதனால்தான் இது சாத்தியமானது.

2021க்குள் வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு கூறியது. ஆனால், இன்று வரை வயது வந்தோர் மக்கள் தொகையில் 48% பேருக்கு மட்டும்தான் இந்த அரசு தடுப்பூசி செலுத்தி உள்ளது. அதாவது 50% கூட இல்லை.

முதல் தவணை தடுப்பூசி வயதுவந்தோர் மக்கள் தொகையில் 81% பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் இலக்கை அடைய நாள் ஒன்றுக்கு 18 முதல் 19 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால். 9 மில்லியன் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.” என்று கூறினார்.

மேலும் அவர், “தடுப்பூசி கொள்கையில் மட்டும் இந்த அரசு இதுவரை மூன்று முறை யு-டர்ன் அடித்துள்ளது.” என்றார்.

“45 வயதிற்குக் கீழ் உள்ளோர் தடுப்பூசிக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று முதலில் கூறியது. ஆனால், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்ட உடன் இதிலிருந்து பின் வாங்கியது. பின்னர், தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி கட்டணங்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றது. பின்னர் பின் வாங்கியது. தடுப்பூசிக்கு மத்திய அரசைவிட மாநில அரசே அதிகமாக நிதி கொடுக்க வேண்டும் என்றது. அதிலிருந்தும் பின் வாங்கியது,” என்றார்.

“கொரொனா பரவலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அரசை மட்டுமே குற்றஞ்சாட்ட முடியாது. ஆனால், இதற்கு முன் இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாகுறை ஏற்பட்டதில்லை. 700 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளனர். இரண்டாம் அலையின் போது பிரதமர் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் இருந்தார், உத்தரகாண்டில் கும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருந்தது“ என்றார்.

மேலும், “2021 தொடக்கத்தில் இந்தியப் பிரதமர் டாவோஸில் பேசிய போது இந்தியா வெற்றிகரமாக கொரோனாவை கட்டுப்படுத்தியது என்றார். பிப்ரவரியில் பா.ஜ.க கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காகப் பிரதமரை வாழ்த்தி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், என்ன நடந்தது?” எனக் கேள்வி எழுப்பினார் மஹூவா மொய்த்ரா.

மஹூவா பேசிக் கொண்டிருக்கும் போதே அவைக்குத் தலைமை தாங்கிய ராஜேந்திர அகர்வால் குறுக்கிட்டு நேரம் கருதி உரையை முடிக்கச் சொன்னார். ஆனால், மஹூவா தொடர்ந்து பேச முயன்றார். இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது!



source https://www.vikatan.com/news/politics/mahua-moitra-slams-government-in-various-issues-including-corona-vaccination

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக