Ad

வெள்ளி, 5 நவம்பர், 2021

பூப்பாதை vs சிங்கப் பாதை - புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடனடியாகச் செய்யவேண்டிய 6 விஷயங்கள்!

இந்தியக் கிரிக்கெட்டின் அதிகார பீடமான பிசிசிஐ, கங்குலியின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததிலிருந்தே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம், எந்நேரத்திலும், இந்தியப் பயிற்சியாளராக, ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்படலாம் என்பதுதான்.

இதற்கான முன்னெடுப்புகள் இதற்கு முன்பாகவே பலமுறை விவாதத்துக்கு வந்திருக்கின்றன. குறிப்பாக, இந்திய அணி ஏதோ ஒரு போட்டியில், மோசமான தோல்வியைத் தழுவும் போதெல்லாம், அதற்கான மாற்று மருந்தாக, பலரது உதடுகளும் உச்சரித்த பெயர் 'டிராவிட்' தான். அப்படியிருக்க, மிக முக்கியமான தருணத்தில், சவால்கள் நிறைந்த சூழலில், அந்த எதிர்பார்ப்பு ஈடேறியிருக்கிறது. இது அணியின் தற்போதைய நிலையில் மாற்றங்களைக் கொண்டு வருமா? இந்திய அணிக்கு இந்த முடிவு விடியலாய் அமையுமா?

ரவியின் ரிப்போர்ட் கார்டு:

ரவி சாஸ்திரி, தோனி, விராட் கோலி

முன்னதாகவே, இரு சந்தர்ப்பங்களில், இடைக்காலப் பயிற்சியாளராகப் பதவி வகித்திருந்தாலும், 2017-ம் ஆண்டில்தான், இந்திய அணியின் முழு நேரப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இணைந்தார். அதன்பின் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் சமமாகவே அவர் ஏற்றிருக்கிறார். ஆஸ்திரேலிய தொடர் வெற்றி போன்ற வரலாற்று நிகழ்வுகளை தனது சுயசரிதையில் அவர் பதிவேற்றிக் கொண்டாலும், எந்த ஐசிசி கோப்பையிலும் இந்தியாவின் பெயரை எழுதாமலேதான் அவர் விடை பெறுகிறார். டெஸ்ட் ஃபார்மட்டில், சாம்பியன்கள் ஆகும் வாய்ப்பை, நழுவவிட்டது மட்டுமின்றி, அவரது இறுதித் தொடரான, நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரிலேயே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற அதிசயங்களுக்காகத் தவமிருக்கிறது.

அறிவிக்கப்படா அவசரநிலை:

அவிழ்க்க வேண்டிய பல குழப்ப முடிச்சுகளோடுதான், அணியை ரவி சாஸ்திரி விட்டுச் செல்கிறார். கோலி டி20 ஃபார்மட்டிற்கான கேப்டன்ஷிப்பில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவை ஏற்கெனவே அறிவித்து விட்ட நிலையில், அவரது 50 ஓவர் போட்டிகளுக்கான கேப்டன்ஷிப் பதவிக்கும், பிசிசிஐ எந்த உத்தரவாதமும் தராதது லிமிடெட் ஃபார்மட் ஒட்டுமொத்தத்துக்குமே புதிய கேப்டன் பதவியேற்பார் என்பதனை ஏறக்குறைய உறுதி செய்தாகிவிட்டது. இந்நிலையில்தான், 'கூண்டோடு மாற்றம்', என்பதுபோல் புதுப் பயிற்சியாளராக டிராவிட்டையும் நியமித்து, அணியை புதிய பரிமாணத்திலிருந்து கட்டமைக்கத் தொடங்கியுள்ளது கங்குலி தலைமையிலான பிசிசிஐ.

அண்டர் 19 அனுபவங்கள்:

தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களில் தொடங்கி, பெஞ்சில் வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள், அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் எனப் பலரும் அண்டர் 19 நிலையில் டிராவிட்டின் கைகளால் செதுக்கப்பட்டவர்கள்தான். 2007-ம் ஆண்டு, உலகக் கோப்பையை வாங்கித் தர முடியாத வலியோடு சென்ற டிராவிட், கேப்டனாக செய்ய முடியாததை பயிற்சியாளராக நிறைவேற்றிக் காட்டினார். 2016-ம் ஆண்டு, இந்தியா அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது இடத்தில் முடித்தது. இரண்டாண்டுகள் இடைவெளியில், டிராவிட்டின் வழிநடத்தலில் மெருகேறி 2018-ம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பையை கையிலேந்தியது. பண்ட், பிரித்வி ஷா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட இளம் வீரர்களின் எழுச்சியில், டிராவிட்டுடைய பெரும் பங்கும் இருக்கிறது. அவ்வீரர்களை, அங்கே கையாண்ட அனுபவம், இங்கே நிச்சயமாக அவருக்குக் கை கொடுக்கும் என நம்பப்படுகிறது.

டிராவிட் பயிற்சியளித்த அண்டர் 19 இந்திய அணி

என் சி ஏ செயல்பாடுகள்:

அண்டர் 19 பயிற்சியாளர் பதவிக்குப்பின், சில காலம், இந்திய நேசனல் அகாடமியிலும் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார், டிராவிட். வீரர்களின் உடல் தகுதியை ஆய்வு செய்வதில் தொடங்கி, அம்பயர்களுக்கான பயிற்சிகளை அளிப்பது வரை, களத்துக்கு வெளியே நிகழும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட நிர்வாகப் பணிகள் குறித்த சரியான புரிதலையும் இந்தப் பணிக்காலம் டிராவிட்டுக்கு வழங்கி இருக்கிறது. இது பல வகையிலும், களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அணியை அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல அவருக்குப் பெரிதாக உதவும்.

அணுகுமுறை என்ன?!

ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், ஒவ்வொரு அணுகுமுறை உண்டு. டிராவிட்டைப் பொறுத்தவரை ஆதிக்கம் செலுத்தி தனது ஆளுமையை நிலை நாட்டாமல், தனது எண்ணங்களை அவர்களுக்குள் கடத்தாமல், எதையும் திணிக்காமல், வீரர்களுக்குள் ஒளிந்திருக்கும் நேச்சுரல் கேமை வெளியே கொண்டு வருவதும், அதனை மேம்படுத்துவதும்தான் அவரது பாணி. இதனை அவருக்குக் கீழ் ஆடிய பல வீரர்கள் பல சந்தர்ப்பங்களில் கூறி இருக்கின்றனர். எனவே புதிய கேப்டனாக, ரோஹித்தோ அல்லது வேறு யாரோ நிர்ணயிக்கப்பட்டாலும் கூட, முன்னதாக, கோலி - கும்ப்ளேவுக்கு இடையே நிகழ்ந்தது போன்ற மௌன யுத்தங்களோ, பனிப்போரோ அரங்கேற வாய்ப்புகள் குறைவே!

இலங்கையுடனான ஒத்திகை:

பயிற்சியாளர் பொறுப்பு என்பது டிராவிட்டுக்கு புதியதல்ல. அண்டர் 19, இந்தியா ஏ அணி மட்டுமின்றி, ஐபிஎல்லில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர் டெவில்ஸுடனும், பயிற்சியாளராகப் பயணப்பட்டிருக்கிறார். சமீபத்தில், இலங்கைக்கு எதிரான தொடரில், இந்திய அணியை டிராவிட் வழிநடத்தி இருந்தார். இது கசப்பான அனுபவமாக முற்றுப் பெற்றிருந்தாலும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், அணியோடுனான அவரது பிணைப்புச் சங்கிலி, மறுபடி இணைக்கப்படும் என அத்தொடரின் வாயிலாகவே பூடகமாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

ராகுல் டிராவிட் - ஷிகர் தவான்

முன்னிருக்கும் சவால்கள்:

சகல களத்திலும் விளையாடிய சகலகலா வல்லவராக டிராவிட் இருந்தாலும், இந்தப் பதவி, அவருக்கு, விஷம் தோய்த்த கத்தி மீதான நடைப் பயணமாகவே இருக்கப் போகிறதென்பதே அப்பட்டமான உண்மை. அவருக்கு முன்பாக, பல சவால்கள் காத்திருக்கின்றன...

1) லிமிடெட் ஃபார்மட் மொத்தத்துக்கும் வேறு ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்டால், அப்பாதையில் அந்தப் புதியவருடன், டெஸ்டில் கோலியுடன் என இருவேறு விதமாக விஷயங்களை டிராவிட் கையாள வேண்டியதிருக்கும். பதவி ஏற்க இருக்கும் நியூசிலாந்துடனான மோதலிலேயே டி20 மற்றும் டெஸ்ட் இரண்டுமே இடம்பெற்றிருப்பதால் அந்தச் சவாலான சூழல், முதல் தொடரிலேயே அவரை முற்றுகை இடுகிறது.

2) இந்த மூன்று ஃபார்மட்டுக்குமான கோர் டீமை, கோலி ஏற்கெனவே வடிவமைத்திருக்கிறார். அது அப்படியே தொடரலாமா, புனரமைக்கப்பட வேண்டுமா என்பதில் கூடுதல் கவனம் தேவை. அதுவும் இந்தியாவில் ஆடும்போது, வெளியே சென்று ஆடும் போது என இருவேறு தருணங்களுக்குமான சரியான பிளேயிங் லெவன், நம்மிடத்தில் உள்ளதா என்பது குறித்தும் அவர் பகுத்தாய வேண்டும்.

ஐபிஎல் - டி20 உலகக்கோப்பை

3) ஓய்வில்லாத ஓட்டத்துடன், பயோ பபிள் கடுங்காவல், கொடுங்கோல் தண்டனையை, கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக இந்தியப் படை அனுபவித்து வருகிறது. இது மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பைக் கொண்டு வருவது மட்டுமின்றி, அவர்களது விளையாட்டிலும் ஒரு தேக்க நிலையையும், தொய்வையும் கொண்டு வந்துவிட்டது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடனான சமீபத்திய போட்டி முடிவுகளே இதற்குச் சான்று. அதற்கான தீர்வைக் காணுவதுதான் டிராவிட்டின் முன்னால் உள்ள முக்கிய சவால்.

4) பேட்டிங் ஆர்டரில், நான்காவது இடத்தை, தகுந்த வீரரைக் கொண்டு நிரப்புவது, ஜாகீர் கான் போன்ற ஒரு அச்சுறுத்தும் இடக்கை வேகப் பந்து வீச்சாளரை இனங் காணுவது, வேகப்பந்து வீச்சோடு பேட்டாலும் பேசும் ஒரு பக்கா ஆல் ரவுண்டரை உருவாக்குவது என அணியின் அவசரத் தேவையாக இருப்பவற்றையும் கருத்தில் கொண்டு, அவர் காய் நகர்த்த வேண்டும்.

5) விக்ரம் ரத்தோர் பேட்டிங் கோச் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். ஒருவேளை அவர் உள்ளே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், புதிதாக உருவாகும் தனது பயிற்சியாளர்கள் படைக்கு, புத்தாக்கப் பயிற்சி அளிக்க தோண்டிய சூழ்நிலை டிராவிட்டுக்கு உருவாகும். ஆனால், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட்டிற்கு மிக நெருக்கமான ப்ராஸ் ம்ஹம்ப்ரெய் விண்ணப்பித்திருக்கிறார் என்பதால், அவர் இணைந்தால் அது டிராவிட்டுக்கு விஷயங்களைச் சற்றே சுலபமாக்கும்.

Dravid

6) தற்போதைய அணியிலுள்ள பலரை அண்டர் 19-ல் டிராவிட் கையாண்டிருந்தாலும், அதே போலவே தற்போது சீனியர் அணியில் இருக்கும் அவர்களையும் மற்றவர்களையும், கையாள முடியுமா என்பது கேள்விக்குறியே. பள்ளி மாணவர்களைக் கையாளுவதற்கும், கல்லூரி மாணவர்களைக் கையாளுவதற்குமான வேறுபாடுதான் இது. இந்த இடைவெளியை டிராவிட் எப்படிப் பூர்த்தி செய்யப் போகிறார் என்பதும் முக்கியமான அம்சமே.

இரு உலகக் கோப்பைகள்:

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி, இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இதனால்தான் டிராவிட்டின் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் என்பது அடிக்கோடிடப்பட வேண்டியதாக இருக்கிறது. காரணம், குறைந்தபட்சம் இந்த இரு கோப்பைகளில் ஒன்றையாவது இந்தியாவை வாங்க வைப்பதை அவர் நிகழ்த்திக் காட்ட வேண்டும். அப்படியில்லையெனில், அடுத்த இரண்டு ஆண்டுகளின் முடிவில் ரவி சாஸ்திரி மேல் பாய்ந்த அதே விமர்சனத் தோட்டாக்கள் டிராவிட்டையும் தாக்கும். அதுவும் தன்னை நிரூபிக்க, அவருக்குக் குறைந்த கால அவகாசமே உள்ளது என்பதும் அழுத்தத்தை பல மடங்காக்குகின்றது.

Also Read: அவுட், நாட் அவுட் - நடுவே குழப்பும் அம்பயர்ஸ் கால்... DRS ஆல் பாதிக்கப்படும் அணிகள்!

வெளிநாட்டு கோச் வேண்டுமென்ற கோரிக்கையை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, டிராவிட்டின் தலையில் மிகப்பெரிய பாரத்தை ஏற்றி வைத்துள்ளது பிசிசிஐ.
டிராவிட்

அக்தரின் அதிவேகப் பந்துகளை அலட்டிக் கொள்ளாமல் டிஃபெண்ட் செய்து, அரணாய், இந்தியப் பெருஞ்சுவராய், அணியைப் பல சமயம் காத்த அதே டிராவிட்டின் கண்களில், அவரது சிக்நேச்சர் ஷாட்டான ஸ்கொயர் கட்டினை அடிக்கும்போது அனல் தெறிக்கும் அக்ரஷனும் இருந்திருக்கிறது. தேவையென்றால், டெஸ்ட் போட்டிகளில் அரணாக நின்று, அதிக பந்துகளைச் சந்தித்த இவரேதான், அவ்வப்போது பந்துகளை வேஸ்ட் செய்யாமல் ரொட்டேட் செய்பவராகவும், அதிவேக ரன்கள் குவிப்பவராகவும் மாறியிருக்கிறார். ஆக்ரோஷம் அவர் முகத்தில் தெரியாதே தவிர, அவரின் பேட் அசால்ட்டாக பலமுறை சண்டை செய்திருக்கிறது, போராடியிருக்கிறது. போராட்டம் என்று வரும்போது பூப்பாதை, சிங்கப் பாதை - இரண்டுமே டிராவிட் எனும் பிளேயருக்குச் சாத்தியப்பட்ட ஒன்றுதான்.

எனினும், பயிற்சியாளராக டிராவிட்டின் பலமே அவரது ஆரவாரமற்ற அமைதியும், பொறுமையான அணுகுமுறையும்தான். கோலியின் அக்ரஷனைப் பார்த்துப் பழகிய இந்தியக் கிரிக்கெட்டுக்கு, இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவே அமையப் போகிறது. அது அணிக்கு நன்மை பயப்பதாகவும், ஏற்றங்களையும் கொண்டு வருவதாகவும் இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.


source https://sports.vikatan.com/cricket/some-of-the-important-challenges-rahul-dravid-has-to-face-as-the-lead-coach-of-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக